உயர் பாதுகாப்பு சிறை முகாம்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை சீனா எப்படி திட்டமிட்டு மூளைச் சலவை செய்கிறது என்பதை, வெளியில் கசிந்துள்ள ஆவணங்கள் முதன்முறையாக அம்பலப்படுத்தியுள்ளன.
மேற்குப் பகுதியில் உள்ள சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள முகாம்களில், சேவை முறையிலான கல்வி மற்றும் பயிற்சிதான் அளிக்கப்படுகிறது என்று சீன அரசு தொடர்ச்சியாகக் கூறி வருகிறது.
ஆனால், பிபிசி பனோரமாவுக்கு கிடைத்த ஆவணங்கள், அந்த முகாம்வாசிகள் எவ்வாறு அடைத்து வைக்கப்பட்டு, கருத்து திணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு தண்டிக்கப்படுகிறார்கள் என்பதைக் காட்டுபவையாக உள்ளன. இந்த ஆவணங்கள் பொய்யானவை என்று பிரிட்டனுக்கான சீன தூதர் கூறியுள்ளார்.
சர்வதேச புலனாய்வுச் செய்தியாளர்கள் கூட்டமைப்பிடம் (ஐ.சி.ஐ.ஜே) இந்த ஆவணங்கள் அளிக்கப்பட்டன. பிபிசி பனோரமா மற்றும் பிரிட்டனை சேர்ந்த தி கார்டியன் பத்திரிகை உள்ளிட்ட 17 ஊடகங்கள் இணைந்து இந்தக் கூட்டமைப்பு செயற்படுகிறது.
சின்ஜியாங் முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளாக அமைக்கப்பட்டு வரும் முகாம்கள், பயங்கரவாதத்தை ஒடுக்கும் நோக்கில், தன்னார்வத்தின் அடிப்படையில் மறு-கற்பித்தல் தேவைகளுக்காக, உருவாக்கப்படுகின்றன என்று சீனா கூறியிருப்பது பொய் என இந்தப் புலனாய்வுத் தகவல்கள் காட்டுகின்றன.
சுமார் பத்து இலட்சம் பேர் – பெரும்பாலும் முஸ்லிம் உய்குர் சமூகத்தவர்கள் – விசாரணை ஏதுமின்றி இந்த முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
`சீன கேபிள்கள்’ என்று ஐ.சி.ஐ.ஜே. குறிப்பிடும் சீன அரசின் ஆவணங்கள், 2017ல் சின்ஜியாங் கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளராகவும், அந்தப் பிராந்திய பாதுகாப்புப் பிரிவு உயர் அதிகாரியாகவும் இருந்த ட்ச்சு ஹாய்லுன் என்பவர், அந்த முகாம்களை நிர்வகித்து வந்தவர்களுக்கு அனுப்பிய ஒன்பது பக்க குறிப்பாணையை உள்ளடக்கியதாக உள்ளது.
முகாம்களை உயர் பாதுகாப்பு கொண்ட சிறைகளாக, கடுமையான ஒழுங்குமுறைகள் மற்றும் தண்டனைகளுடன், யாரும் தப்பிவிட முடியாதபடி நிர்வகிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் அதில் உள்ளன.
இந்தக் குறிப்பாணையில் உள்ள உத்தரவுகளில் பின்வருபவை அடங்கியுள்ளன:
“தப்பிச் செல்வதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.”
“நடத்தை விதிகளை மீறினால் ஒழுங்குமுறை மற்றும் தண்டனைகளை அதிகரியுங்கள்.”
“தவறுக்காக வருந்துவதையும், ஒப்புக் கொள்வதையும் அதிகரியுங்கள்.”
“பரிகாரமாக சீன மொழியை கற்பித்தலுக்கு உயர் முன்னுரிமை அளியுங்கள்.”
“உண்மையிலேயே போக்கை மாற்றிக் கொள்ளும் மாணவர்களை ஊக்குவியுங்கள்.”
“குழுவாகத் தங்கும் பகுதிகளை வீடியோ கமரா மூலம் கண்காணிப்பதையும், வகுப்பறைகளில் கமராவில் படாத பகுதிகள் இல்லாதிருப்பதையும் உறுதி செய்யுங்கள்.”
அங்கே அடைக்கப்பட்டுள்ளவர்களின் ஒவ்வோர் அசைவும் எப்படி கண்காணிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படுகின்றது என்பதை இந்த ஆவணங்கள் காட்டுகின்றன: “மாணவர்களின் படுக்கைகள் இடம் மாறாதிருக்க வேண்டும்,
மாணவர்களின் வரிசை மாறக் கூடாது, வகுப்பறையில் அமரும் இடம் மாறக் கூடாது, திறன் செயல்பாடுகளின்போது நிரந்தரமான இடம் ஒதுக்கப்பட வேண்டும், இவற்றை மாற்றினால் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.”
அதிக அளவில் உய்குர் மக்கள் அடைக்கப்பட்டிருப்பதை மற்ற சில ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. தெற்கு சின்ஜியாங் பகுதியில் இருந்து 2017இல் ஒரு வாரத்தில் மட்டும் 15,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வெளியில் கசிந்துள்ள ஆவணங்களை, வழக்கறிஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பக அமைப்பின் சீன இயக்குநர் ஷோபி ரிச்சர்ட்சன் கூறியுள்ளார்.
“இது நடவடிக்கைக்கு உகந்த ஆவணமாக உள்ளது. மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுவதைக் காட்டுபவையாக உள்ளன” என்று அந்தப் பெண் இயக்குநர் கூறுகிறார். “அங்கே அடைக்கப்பட்டுள்ள நபர்கள் குறைந்தபட்சம் உளவியல் ரீதியில் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாகக் கூறுவது சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில், எவ்வளவு காலத்துக்கு அங்கே இருக்கப் போகிறோம் என்று அவர்களுக்குத் தெரியாது” என்று அவர் குறிப்பிடுகிறார்.
தங்களுடைய போக்குகளில், நம்பிக்கையில், மொழி பயன்பாட்டில் மாறியிருக்கிறோம் என்பதை நிரூபித்தால் மட்டுமே அங்கிருந்து விடுதலை செய்யப்படுவார்கள் என்பதை இந்தக் குறிப்பாணைகள் விவரிக்கின்றன.
“தங்களுடைய கடந்த கால செயல்பாடுகள் சட்டவிரோதமானவை, குற்றச் செயலானவை, அபாயகரமானவை என்பதை ஆழமாகப் புரிந்து கொள்ளும் வகையில், தண்டனை மற்றும் ஒப்புக் கொள்ளச் செய்யும் செயற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்” என்று குறிப்பாணை கூறுகிறது.
“சரியான புரிதல் இல்லாதவர்கள், எதிர்மறை சிந்தனை கொண்டவர்கள் அல்லது ஏற்றுக் கொள்ளாத சிந்தனை உள்ளவர்களைப் பொறுத்தவரை, பலன் ஏற்படுவதை உறுதி செய்யும் வரையில் கல்வி சீரமைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளுங்கள்.”
மக்களின் அடையாளங்களை மாற்றுவதற்கு இந்த முகாம்களில் முயற்சிக்கப்படுவதாக, உலக உய்குர் காங்கிரஸ் ஆலோசகரும், மனித உரிமைகள் முன்னணி வழக்கறிஞருமான பென் எம்மர்சன் க்யூ.சி. கூறுகிறார்.
“ஒட்டுமொத்த இனத்தின் மீது பெரிய அளவில் மூளைச் சலவை செய்யும் திட்டங்கள் திணிக்கப்படுகின்றன.”
“சின்ஜியாங் முஸ்லிம் உய்குர்களை தனிக் கலாசார பிரிவினராக இல்லாமல் ஆக்கும் நோக்கில் குறிப்பாக திட்டமிட்டு முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. பூமியில் அப்படி ஒரு கலாசாரப் பிரிவே இல்லை என்று ஆக்கிவிட முயற்சிக்கிறார்கள்.”
முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் “சித்தாந்த மாறுபாடுகளுக்கு, கல்வி மற்றும் பயிற்சிகளுக்கு, ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்றுதலுக்கு” என மதிப்பெண் பெறுகிறார்கள் என்று குறிப்பாணை கூறுகிறது.
தண்டனைகள் மற்றும் பாராட்டுப் புள்ளிகளைப் பொறுத்து, குடும்பத்தினருடன் அவர்கள் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். அதன் அடிப்படையில்தான் விடுதலை பற்றியும் முடிவு செய்யப்படுகிறது. அவர்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று நான்கு கம்யூனிஸ்ட் கட்சி கமிட்டிகள் உறுதி செய்த பிறகுதான் அவர்களுடைய விடுதலை பற்றி பரிசீலிக்கப்படுகிறது.
பெரிய அளவில் மக்களை சீன அரசு எப்படி கண்காணிக்கிறது என்பதையும், தனிப்பட்ட தகவல்களை எப்படி ஊகித்து கவனிக்கிறது என்பதையும் காட்டுவதாகவும் இந்த ஆவணங்கள் உள்ளன.
Zapya என்ற தகவல் பகிர்வு ஆப் -ஐ தங்கள் செல்போன்களில் வைத்திருக்கும் காரணத்துக்காக 1.8 மில்லியன் பேரை எப்படி சீனா கண்காணிப்புக்கு உட்படுத்தியுள்ளது என்பதை ஓர் ஆவணம் காட்டுகிறது.
பிறகு அவர்களில் 40,557 பேரை “ஒவ்வொருவராக” அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். “சந்தேகமற்றவர் என உறுதி செய்ய முடியாமல் போனால்” அவர்களை “தீவிர பயிற்சி முகாமுக்கு” அனுப்ப வேண்டும் என்று அந்த ஆவணம் கூறுகிறது.
வெளிநாட்டுக் குடியுரிமை வைத்திருக்கும் வீகர் மக்களை கைது செய்வதற்கு வெளிப்படையான உத்தரவுகள் அதில் உள்ளன. வெளிநாடுகளில் வாழும் வீகர் மக்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் அறிவுறுத்தல் உள்ளது. உலக அளவிலான இந்த செயல்பாடுகளில், வெளிநாடுகளில் உள்ள சீன தூதரக அலுவலகங்கள் ஈடுபட்டுள்ளன என்பதும் இந்த ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது.
அரசின் நடவடிக்கைகளால் நாட்டு மக்கள் பாதுகாக்கப் பட்டுள்ளதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளில் சின்ஜியாங் பகுதியில் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் கூட நடக்கவில்லை என்றும் பிரிட்டனில் உள்ள சீன தூதர் லியூ ஜியாவோமிங் கூறியுள்ளார்.
“அந்தப் பிராந்தியத்தில் சமூக ஸ்திரத்தன்மை உள்ளது. இன மக்களிடையே ஒற்றுமை உள்ளது. மனநிறைவு மற்றும் பாதுகாப்பு உணர்வுடன் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.”
“உண்மைகள் இப்படி இருந்தாலும், சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கான காரணமாக சின்ஜியாங் முகாம்கள் குறித்து மேற்கத்திய நாடுகளில் சிலர் அவதூறு பேசுகின்றனர். சின்ஜியாங்கில் தீவிரவாத ஒழிப்புக்கு சீன அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இடையூறு செய்யவும், சீனாவின் உறுதியான வளர்ச்சியைத் தடுக்கவும் அவர்கள் முயற்சி செய்கிறார்கள்” என்று அவர் கூறினார்.-Vidivelli
- பி.பி.சி