அடுத்த வருட ஹஜ் ஏற்பாடுகளை வழமைபோல் தொடரும்படி பிரதமரும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக் ஷ முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக்கை வேண்டியுள்ளார்.பணிப்பாளர் மலிக் பிரதமரும், கலாசார அமைச்சருமான மஹிந்த ராஜபக் ஷவைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். கலந்துரையாடலின் போது பிரதமர் தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் ஹஜ் ஏற்பாடுகள் குறித்தான விபரங்களை பணிப்பாளர் மலிக்கிடம் கேட்டு அறிந்து கொண்டார்.
இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக் விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கையில், முஸ்லிம் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சராகவும் பிரதமர் செயற்படுவதால் எதிர்கால ஹஜ் ஏற்பாடுகள் அவரது ஆலோசனையின் கீழேயே முன்னெடுக்கப்படும். அமைச்சரால் இதுவரை ஹஜ் குழுவொன்று புதிதாக நியமிக்கப்படவில்லை. நியமிக்கப்படுமென்று எதிர்பார்க்கிறேன்.
அத்தோடு சவூதி ஹஜ் அமைச்சு ஹஜ் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக இலங்கையின் தூதுக் குழுவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி சவூதி அரேபியாவில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
தூதுக்குழுவில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், ஹஜ் முகவர் ஒருவர் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சிலிருந்து அதிகாரியொருவர் இடம்பெறவுள்ளனர். தூதுக்குழு இலங்கையிலிருந்து எதிர்வரும் 18 ஆம் திகதி சவூதி அரேபியாவுக்குப் பயணிக்கவுள்ளது.
சவூதி ஹஜ் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ள இக்கலந்துரையாடலில் 2020 ஆம் ஆண்டுக்கான ஹஜ் கோட்டா விவகாரமும் கலந்துரையாடப்படும். 2020 ஆம் ஆண்டுக்கென 2019 ஆம் ஆண்டினை விடவும் மேலதிகமான கோட்டாக்களை பெற்றுக் கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்