எந்தவொரு நபரும் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழவே விரும்புவர். ஆனால், வாழ்நாள் பொழுதுகளில் இயற்கையாகவும், செயற்கையாகவும் நடந்தேறுகின்ற சில நிகழ்வுகள் அந்த நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தூர நகர்த்திவிடுகின்றன.
அத்தோடு, சிலரின் நடவடிக்கைகள் பலரை கவலைக்கும், அச்சத்துக்குமாளாக்கியும் விடுகிறது. அந்தவகையில், நாட்டின் நிம்மதியை இழக்கச் செய்வதை இலக்காகக் கொண்டு கடந்த காலங்களில் இடம்பெற்ற செயற்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுகளிலிருந்து அகன்று செல்லும் சூழலில் வீதிகளில் இடம்பெறுகின்ற கோர விபத்துக்களும் கடலிலும், ஆறுகளிலும் மூழ்கி மரணிக்கும் பரிதாப நிகழ்வுகளும் மக்களின் மனங்களில் ரணங்களாகக் காட்சியளிக்கும் இக்காலகட்டத்தில், மக்களின் பொடுபோக்கான, அலட்சியமான, பொறுப்பற்ற செயற்பாடுகள் டெங்குக் காய்ச்சலை ஏற்படுத்தும் நுளம்புகளின் பெருக்கத்தை அதிகரிக்கச் செய்து உயிராபத்துக்கள் ஏற்படவும் சமகாலத்தில் வழி வகுத்திருக்கின்றன.
கடந்த இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னர் நிலவிய கடும் வரட்சியின்பின் ஆழ்கடலில் அடிக்கடி உருவாகும் தாழமுக்கத்தினால் காலநிலையில் மாற்றமேற்படுகிறது. அத்தோடு, வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காலமும் ஆரம்பித்து விட்டதால் இப்பருவத்துக்கான மழை வீழ்ச்சியும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மழைநீர் காரணமாக நுளம்புகள் பெருகி வளர்வதற்கான சூழல் உருவாகி நோய்கள் பரவும் நிலையும் உருவெடுத்துள்ளது.
குறிப்பாக, டெங்கு நுளம்பினால் ஏற்படும் காய்ச்சல் மற்றும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்களின் காரணமாக ஒருசில பிரதேசங்களில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில், சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ள டெங்கு நுளம்புப் பெருக்கம் மற்றும் டெங்குக் காய்ச்சல் தொடர்பில் கவனம் செலுத்துவதோடு, சூழலை சுத்தமாக வைத்திருப்பது குறித்தும் வீட்டு உரிமையாளர்களும் ஏனைய அரச, தனியார் நிறுவனத் தலைவர்கள் மற்றும் ஊழியர்
களும் அதிக சிரத்தைகொள்வது காலத்தின் தேவையாகவுள்ளது.
இருப்பினும், சிலரின் செயற்பாடுகளும், மனநிலையும் இவ்விடயத்தில் மாற்றமடையாமலே காணப்படுவதை உணரமுடிகிறது. அடிமேல் அடித்தால் அம்மிகூட நகரும் என்றதொரு பழமொழி உள்ளது. ஆனால், இப்பழமொழியை இந்நாட்டு சமூக அங்கத்தவர்களில் பலர் பொய்யாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏனெனில், நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, டெங்குக்காய்ச்சல், அதன் அறிகுறி, அதற்கான சிகிச்சை நடவடிக்கை குறித்து அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாகவும் ஏனைய ஊடகச் செயற்பாடுகள் மூலமாகவும், அடிக்கடி விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றபோதிலும், எந்த மாற்றமும் மக்களின் மனப்பாங்கில் ஏற்பட்டதாகக் காணவில்லை.
நேரக்கடத்தல்களுக்காக வானொலி, தொலைக்காட்சிகளில் ஒலி, ஒளிபரபப்படும். சினிமாப்பாடல்களைக் கேட்கவும், சின்னத்திரை நாடகங்கள். சினிமாக்களைப் பார்க்கவும் காட்டும் அக்கறை, நம்மையும் பிறரையும் பாதுகாப்பதற்காக ஒலி, ஒளிபரப்புச் செய்யப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கேட்பதற்கும், பார்ப்பதற்கும் அக்கறைகொள்ளாமல் இருப்பது நமது மனப்பாங்குகள் இன்னும் மாற்றமடையவில்லை என்பதைத் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.
மக்களின் மனோநிலையானது இந்நோய் தொடர்பிலும் இவற்றைத் தடுப்பது தொடர்பிலும் திசைதிருப்பப்படாத நிலையில், இந்நோயைக் கட்டுப்படுத்த முடியாது. அதாவது, நுளம்புகள் பெருகுவதைத் தடுக்க முடியாது. விழிப்புணர்வு தொடர்பில் மக்கள் மனங்களில் மாற்றம் ஏற்பட்டிருப்பின் இந்நுளம்புகள் பெருகி வளரும் இடங்கள் சூழலில் காணப்படாது.
மக்களினதும், பொறுப்புவாய்ந்த உரிய அதிகாரிகளினதும் மனப்பாங்கில் மாற்றமேற்படாத காரணத்தினாலேயே பல பிரதேசங்களில் சூழல் சுத்தம் செய்யப்படாதிருக்கிறது. மக்களினதும், உரிய அதிகாரிகளினதும் அலட்சியங்கள் பல அப்பாவி சிறுவர்களையும், வளர்ந்தவர்களையும் டெங்கு நுளம்புகளுக்குப் பலிகொள்ளச் செய்துகொண்டிருப்பதை நாளாந்தம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையின் மூலம் அறியமுடிகிறது. இந்நிலைப்பாடானது சமூகப் பொறுப்பின் தோல்வியைப் புடம்போடுவதைக் காணலாம்.
டெங்கு அதிகரிப்பும் அபாய எச்சரிக்கையும்
மழை காலத்தில் ஏற்படும் பெரும்பாலான நோய்களுக்கு நுளம்புகளே பிரதான காரணிகளாக இருக்கின்றன. நுளம்புகள் பெருகி வளர்வதற்குத் தகுந்த சூழலைத் தோற்றுவிப்பதில் மழைநீர் பெரும் பங்கு வகிக்கிறது. இதன்காரணமாக நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் டெங்கு நோய்ப் பரவல் தீவிரமாக அதிகரித்து வருவதனால் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்திருக்குமாறும் சுகாதார
அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
ஏனெனில், இம்மாதம் முதலாம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 13,056பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் 25ஆம் திகதிவரையான காலப்பகுதியில் நாடுபூராகவும் 76,413 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இனதாலேயே டெங்கு நோய் தொடர்பில் மக்களை சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளதுடன் சுற்றாடலையும் சுத்தமாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், சூழல் பாதுகாப்பு மற்றும் சூழல் அலங்காரத்தை மீண்டும் சீரான நிலைக்கு கொண்டு வரும் நோக்கில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ பொலிஸாருக்கு விஷேட ஆலோசனை வழங்கியுள்ளார். அதற்கமைய சூழல் பாதுகாப்பு மற்றும் அலங்காரம் தொடர்பான நடவடிக்கைகள் கடந்த திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக சிறப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இச்சந்தர்ப்பத்தில், பெருகிவளரும் நுளம்புகளினால் ஏற்படும் நோய்கள் தொடர்பாகவும் நோய்களுக்கான சிகிச்சை பெறுவது தொடர்பாகவும் அவற்றை எவ்வாறு கட்டுபடுத்த முடியும் என்பது குறித்தும் ஒவ்வொரு தனிநபரும், குடும்பமும் அறிந்திருப்பது அவசியமாகும். நம்மை நாம் பாதுகாக்க முயற்சிக்காவிடின் நாமும் பாதிக்கப்பட்டு பிறரும் பாதிக்கப்படுவர்.
நுளம்பின் பெருக்கம் அதன் பாதிப்புக்கள் அதிகரித்துள்ள பிரதேசங்களில் நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதிலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு போதியளவில் கிடைக்கப் பெறாதிருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு மற்றும் தேசிய டெங்கு தடுப்புப் பிரிவு என்பன நுளம்புகளினால் ஏற்படும் நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்ளை காலத்திற்குக் காலம் முன்னெடுத்தாலும், அதற்கான ஒத்துழைப்பு மக்களினால் வழங்கப்படாதிருப்பதை இப்பிரிவுகளின் நடவடிக்கைளின்போது டெங்கு நுளம்புகள் பெருகி வளர்வதற்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகளை அவதானிக்கின்றபோது அறிய முடிகிறது.
சுகாதார அமைச்சினால் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைக்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பல செயற்றிட்டங்களின்போது, டெங்கு நுளம்பு விருத்தியடையக்கூடிய சூழலை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பிரகாரம் பல தரப்பினர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வீட்டு உரிமையாளர்கள், பாடசாலை அதிபர்கள், அரச, தனியார் நிறுவனங்களது பொறுப்பாளர்கள் என பல தரப்பினர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை சுகாதார அமைச்சின் தகவல்களிலிருந்து அறியமுடிகிறது.
மக்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கின்றபோது, அதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்காது பொடுபோக்கு மனப்பாங்குடன் செயற்படுவது ஆபத்துக்களை உருவாக்கும். என்பது கவனத்திற்கொள்ளத்தக்கதாகும்.
ஏத்தகைய சட்டங்கள் வகுப்பட்டாலும், அறிவுறுத்தல்கள் முன்வைக்கப்பட்டாலும் மக்கள் தமது சமூகப் பொறுப்பை முன்னெடுக்காது செற்படுகிறார்கள் என்பதை சில பிரதேசங்களின் சூழல் அசுத்தமாகவே காணப்படுவதைக் கொண்டு அனுமானிக்க முடிகிறது. அத்துடன், இச்சுத்தமற்ற சூழல் நிலைக்கு மக்கள் அதிகாரிகளையும் அதிகாரிகள் மக்களையும் பரஸ்பரம் குற்றஞ்சுமத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதனிடையே, இன்னும் சிலர் தங்களது வீட்டுச் சூழல் மாத்திரம் சுத்தமாக இருக்க வேண்டுமென நினைத்து அவர்களின் அயல் சுற்றாடலை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் வீட்டின் அல்லது தங்களது வர்த்தக நிலையங்களில் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகளை பாதைகளிலும், தெருச் சந்திகளிலும் வீசிவிட்டுச் சென்றிருப்பதை பல்வேறு பிரதேசங்களில் அவதானிக்க முடிகிறது. இதற்குக் காரணம் என்ன?
தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து நவீன ஊடக சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உலகமே உள்ளங் கைக்குள் வந்தும்கூட, நாகரிக மோகத்துக்குள் மூழ்கி அதனை தங்களது நவீன வீடமைப்புக்களிலும், ஆடையணிகளிலும், வாழ்க்கை முறைகளிலும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தும் மக்கள், பொதுவான விடயங்களில் நாகரிகப் பண்புகளைக் காட்டத் தவறுகின்றனர். ஒருசிலர் ஆதிவாசிகளின் செயற்பாடுகளையும் வெளிப்படுத்துகின்றனர்.
கிழக்கும் டெங்கும்
கிழக்கு மாகாணம் உட்பட பல மாவட்டங்களில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையின் காரணமாக டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்திருப்பதை அவதானிக்கமுடிகிறது. சுற்றுச் சூழல் பாதுகாப்பில் காணப்படும் பலவீனமாக சமூகப் பொறுப்பின் நிமித்தமே இந்த நிலைமைகளுக்குக் காணரமாகக் காணப்படுகிறது.
தங்களது வீடுகளில் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகளை வீதியோரங்களிலும் பயன்படுத்தப்படாத தனியார் மற்றும் அரச காணிகளிலும், கடற்கரை மற்றும் ஆற்றங்கரைகளிலும் வீசப்படுகின்றன. இவ்வாறு வீசப்படும் திண்மக் கழிவுகள் முறையாக அகற்றப்படாதுள்ளதாகவும், உரிய உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள் திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கான உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில்லை எனவும் வடிகான்களை முறையாக சுத்தப்படுத்துவதில்லையெனவும் பிரதேச மக்கள் உள்ளூராட்சி மன்றங்கள் மீது அவ்வப்போது குற்றச்சாட்டியிருந்தமையை கடந்த காலங்களில் காண முடிந்தது.
இதேவேளை, டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைக்கு மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்காதுள்ளதாக இப்பிரதேச அதிகாரிகள் மக்களைக் குறை கூறுகின்றனர். இவ்வாறு பரஸ்பர குறைபாட்டுக் குரல்களை ஒலித்துக்கொண்டு பிரதேசங்களை சுத்தப்படுத்துவதில் அலட்சியமாக செயற்பட்டதன் விளைவாக இப்பிரதேசங்களில் நுளம்புப் பெருக்கம் அதிகரித்து பலரை வைத்தியசாலைகளில் அனுமதிக்கச் செய்துள்ளதுடன், உயிர்களையும் காவுகொண்டுள்ளன.
இவ்வாறான நிலையில் இப்பிரதேசங்களில் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் சுகாதாரத் துறையினராலும் தொண்டர் அமைப்புக்களினாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவை பாராட்டப்படக்கூடிய விடயமாகும். இப்பிரதேசத்தை சார்ந்த பல அமைப்புக்களின் இளைஞர்கள் சுயமாக முன்வந்து இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டியது இப்பிரதேச மக்களின் தலையாய சமூகப் பொறுப்பாகக் காணப்படுகிறது. இப்பொறுப்பை சரிவர நிறைவேற்றுகின்றபோது நம்மையும் பாதுகாத்து நமது அயலவர்களையும் இந்நோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாக்க முடியும். டெங்கு நுளம்பினால் பாதிக்கப்பட்டவர்களின் புள்ளிவிபரங்களை நோக்குகின்றபோது, நவம்பர் முதலாம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் 2,959 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 1,371 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 806 பேரும் டெங்கு நோய்த்தாக்கத்திற்கு இம்மாவட்டங்களில் ஆளாகியுள்ளனர். மொத்தமாக மேல் மாகாணத்தில் மாத்திரம் இம்மாதம் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 5,128 பேர் டெங்கு நோய்த் தாக்கத்திற்குள்ளாகியுள்னர்.
இதேவேளை, டெங்கு நோய்த் தாக்கம் கிழக்கு மாகாணத்தின் 3 மாவட்டங்களிலுமுள்ள பல பிரதேசங்களில் அதிகரித்துக் காணப்படுவதான தகவல்களும் வெளியாகியுள்ளன.
நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதிகளில் கிழக்கின் அம்பாறை மாவட்டத்தில் 286 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,596 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 1,395 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது.
இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் இம்மாதத்தின் ஆரம்பம் முதல் 25 ஆம் திகதி வரை யான காலப்பகுதியில் 3,277 பேர் டெங்கு நுளம்பினால் பாதிக்கப் பட்டுள்ளதுடன், ஆறு பேரின் உயிர்கள்
காவுகொள்ளப்பட்டுமுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந் நிலையில், அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் அதிகளவிலானோர் டெங்குக் காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலைமையானது டெங்கு நோய்த் தடுப்பதில் காணப்படும் சமூகப் பொறுப்பின் தோல்வியையே எடுத்துக்காட்டுகிறது.
இதனால், உயிர்கொல்லி நுளம்புகளிலி ருந்து பாதுகாப்பு பெறுவதற்கு அலட்சிய மனப்பாங்கிலிருந்து விடுபட்டு சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதோடு, உரிய தரப்புக்களால் முன்வைக்கப்படும் அறிவூட்டல்களை ஏற்று நடப்பதற்கும் ஒவ்வொருவரும் இதய சுத்தியுடன் முன்வர வேண்டும்.
அப்போதுதான் நமது சமூகப் பொறுப்பின் தோல்வியிலிருந்து விடுபட்டு சமூகப் பிரச்சினையாக உருவெடுக்கும் டெங்கு நோயினால் ஏற்படும் ஆபத்துக்களிலிருந்து நம்மையும் பாதுகாத்து பிறரையும் பாதுகாக்க முடியும்.-Vidivelli
- எம்.எம்.ஏ.ஸமட்