புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வற் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளைக் குறைப்பதாக புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சிகரமான செய்தியாகும். இவ்வாறான மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் தொடர்ந்தும் நடைமுறைக்குட்படுத்தப்பட வேண்டும்.
நேற்று இடம்பெற்ற இராஜாங்க, பிரதி அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வின்போது ” இந்த அமைச்சுப் பதவிகள் சலுகைகள் அல்ல. மாறாக உங்கள் மீது சுமதப்படும் பெரும் பொறுப்பாகும். அந்தப் பொறுப்பை உணர்ந்து சரிவர நிறைவேற்ற வேண்டும். மக்களின் தேவைகளை இதன் மூலம் பூர்த்தி செய்ய வேண்டும். அரச நிறுவனங்களின் செயற்திறனை மேம்படுத்த வேண்டும்” என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அறிவுரை வழங்கியிருந்தமை இங்கு கவனிக்கத்தக்கதாகும். அந்த வகையில் அமைச்சர்கள் அனைவரும் மக்களின் நலன்களை முன்னிறுத்திச் செயற்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
இதற்கிடையில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற சில சம்பவங்கள் புதிய அரசாங்கத்தில் கருத்துச் சுதந்திர உரிமை மறுக்கப்படுமா என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது. நேற்று முன்தினம் நுகேகொடையில் அமைந்துள்ள மும்மொழி செய்தி இணையத்தளம் ஒன்றின் அலுவலகத்தில் பொலிஸார் விஷேட தேடுதல்களை நடாத்தியுள்ளனர். மிரிஹான பொலிஸார் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட சுமார் 10 பேர் கொன்ட குழுவினரே இந்த சோதனைகளை முன்னெடுத்துள்ளனர். மேலும் மாற்று யூ ரியூப் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றின் செய்தி வாசிப்பாளரான சட்டத்தரணி தனுஷ்க சஞ்சய சி.ஐ.டி.யினரால் 8 மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். மேலும் மற்றுமொரு யூ ரியூப் அலைவரிசையின் தொகுப்பாளரான பெண் ஒருவரையும் சி.ஐ.டி. விசாரணைக்கு அழைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த பெண் கடந்த அரசாங்கத்தின் நிதி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்பட்ட ‘என்டர்பிரைஸஸ் ஸ்ரீ லங்கா’, ‘ கம்பெரலிய ‘ ஆகிய திட்டங்களின் பிரசார பொறுப்பாளராக செயற்பட்டவர் என அறிய முடிகின்றது.
மறுபுறம் பல வருடங்களாக ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கி வந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளன. பொலிஸ் பேச்சாளர் மற்றும் அவரது அலுவலகம் முன்னெடுத்த ஊடகங்களுக்கு தகவல் வழங்கும் பணிகளை பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் ஊடாக முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் வருகைக்குப் பின்னர் பல ஊடகங்கள் சுய தணிக்கைகளை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளதையும் அவதானிக்க முடிகிறது. குறிப்பாக அரசாங்க உயர்மட்டத்தினரை விமர்சிக்கும் வகையிலான செய்திகள், ஆக்கங்களைப் பிரசுரிப்பதை பல ஊடகங்கள் தவிர்த்து வருகின்றன. ஆங்கில வார இதழொன்றில் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக வாராந்தம் எழுதி வந்த ஊடகவியலாளர் ஒருவரது ஆக்கங்களை பிரசுரிக்க குறித்த பத்திரிகை கடந்த வாரம் முதல் மறுப்புத் தெரிவித்துள்ளது. டுவிட்டரில் தினமும் முக்கிய தகவல்களை வெளியிட்டு வந்த சிலர் தாமாகவே தமது கணக்குகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர்.
இவ்வாறு கருத்துச் சுதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் சில நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்துள்ளமை கவலைக்குரியதாகும். இந்தப் போக்கு புதிய அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கு ஆரோக்கியமானதல்ல. மேற்படி விவகாரங்கள் குறித்து சர்வதேச ஊடகங்களும் மனித உரிமை அமைப்புக்களும் பேச ஆரம்பித்துள்ளன. தற்போது நாட்டில் கடமையில் ஈடுபட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களும் ஊடக சுதந்திரத்தின் போக்கு குறித்து கவனம் செலுத்தியுள்ளனர்.
எனவேதான் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை புதிய ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன முன்னெடுக்க வேண்டும். பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி ஊடகங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்வதையும் அச்சங்களைத் தோற்றுவிப்பதையும் தவிர்க்க விசேட வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும். இன்றேல் புதிய ஆட்சியாளர்கள் மீது கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஆட்சிக்கு வந்த உடனேயே நிரூபிப்பதாக அமைந்து விடும்.-Vidivelli