பல வருடங்களாக ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கி வந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் பொலிஸ் பேச்சாளரின் பணிகளும் நேற்று இடைநிறுத்தப்பட்டிருந்தன.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்வதை உடன் நிறுத்துமாறு மேலிடத்திலிருந்து வந்த உத்தரவொன்றுக்கமைய பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் ஆலோசனை பிரகாரம் நேற்று ஊடகப் பேச்சாளர் மற்றும் அவரது அலுவலக பணிகள் நிறுத்தப்பட்டதாக பொலிஸ் தலைமையகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன் பின்னர் பொலிஸ் பேச்சாளர் மற்றும் அவரது அலுவலகம் முன்னெடுத்த தகவல் வழங்கும் பணிகளை பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் ஊடாக முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த திட்டத்திற்கமையவே பொலிஸ் தலைமையகத்திலுள்ள பொலிஸ் பேச்சாளர் அலுவலகத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அதன்படி நேற்று முதல் பொலிஸ் பேச்சாளரின் தொலைபேசி இலக்கமோ அல்லது அந்த அலுவலகத்தின் தொலைபேசி, தொலைநகல் இலக்கங்களோ செயலில் இருக்கவில்லை. இதனைவிட அங்கு சேவையாற்றிய 60 இற்கும் மேற்பட்ட பொலிசாருக்கு ஊடகங்களுடன் கருத்துக்களை பகிரவும் வேண்டாமென பதில் பொலிஸ்மா அதிபரால் ஆலோசனை தெரிவிக்கப்பட்டதாகவும் அறியமுடிகின்றது. இந்த விவகாரம் தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் பதுகாப்பு செயலர் ஆகியோரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோதும், அவர்கள் அழைப்புகளுக்குப் பதிலளிக்கவில்லை என்பதுடன் எந்த உத்தி யோகபூர்வ அறிவிப்பையும் நேற்று மாலை வரை வெளியிடவில்லை.-Vidivelli
- எம்.எப்.எம்.பஸீர்