இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட தேர்தலில், சிங்கள மக்களின் அமோக ஆதரவுடன் கோத்தாபய ராஜபக் ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்து பெரும்பான்மையான வாக்குகளை வழங்கிய ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.
இருவருக்கும் இடையிலான போட்டி மிகவும் நெருக்கமானதாக இருக்குமென்றும் வெற்றி பெறுபவர் எவராக இருந்தாலும் பெரும்பான்மை வாக்குகள் மிகச் சொற்பமாகவே இருக்கும் என்றும் தேர்தல் பிரசார காலத்தில் எதிர்பார்க்கப்பட்டது. இருவரில் எவராவது 50%+1 வாக்குகளைப் பெற முடியாமல் போகுமேயானால், இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையை செய்ய வேண்டியிருக்கும் என்றுகூட முதற்தடவையாக ஊகிக்கப்பட்டது. இருவருமே முதன்மை நிலையான அரசியல்வாதிகள் இல்லை என்பதால் இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கைக்கான சாத்தியப்பாடு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியை பொறுத்தமட்டில் ஓரளவு எதிர்பார்த்த முடிவாக அமைந்தாலும் முதன்மை வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, சஜித் பிரேமதாச இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவுமென்று எதிர்பார்த்த நிலையில் 13 இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்றி என்பது எதிர்பார்த்ததைவிட அதிகமானதுதான். கூடவே, ஜே.வி.பி. அனுர குமார திசநாயக்க குறைந்தது 10 இலட்சம் வாக்குகளையேனும் பெறுவாரென்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 4 இலட்சத்திற்கு அதிகமான வாக்குகளை மட்டும் பெற்றிருப்பது பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவி ஏற்புக்கான சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு கடந்த 18 ஆம் திகதி அனுராதபுரத்திலுள்ள வரலாற்று சிறப்புமிக்க ருவன்வெலிசாய பௌத்த புனிதஸ்தலத்தில் நடைபெற்றது. சத்தியப்பிரமாண நிகழ்வைத் தொடர்ந்து இடம்பெற்ற ஜனாதிபதியின் பதவியேற்பு உரையில் அங்கு திரளாகக் கூடியிருந்த மக்கள் மத்தியில் அவர் பேசுகையில், “….நான் இந்நாட்டின் பெரும்பான்மை இனமான சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியானேன். சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றிபெறமுடியும் என்பதை நான் ஏற்கனவே தீர்மானித்து விட்டேன்…” என்ற கருத்தை அவர் உரையின்போது வெளியிட்டார்.
இலங்கையில் மன்னராட்சி காலத்தில் தலைநகரமாக விளங்கிய அநுராதபுரத்திலிருந்த பௌத்த விகாரையாக ருவன்வெலிசாய விளங்குகின்றது. புத்த பெருமான் ஞானம் பெற்றதாக நம்பப்படும் வெள்ளரசு மரம் அநுராதபுரத்திலுள்ள ஸ்ரீமகாபோதி விகாரையிலேயே உள்ளது.
இந்த ஸ்ரீமகாபோதி மற்றும் ருவன்வெலிசாய ஆகிய விகாரைகள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே காணப்படுகின்ற பின்னணியில், இந்த விகாரைகள் பௌத்த மதத்தை பின்பற்றுவோர் மத்தியில் மிகவும் நம்பிக்கை வைக்கக்கூடிய புனிதஸ்தலங்களாக விளங்குகின்றன.
ருவன்வெலிசாய பௌத்தர்களின் சின்னமாக விளங்குவது மற்றும் சிங்கள மன்னர்களால் அநுராதபுர யுகம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட ஆட்சியாக வரலாற்றில் குறிக்கப்படுவது ஆகிய காரணங்களே தமது பதவிப்பிரமாண நிகழ்வுக்கு இந்த இடத்தை கோத்தாபய தேர்ந்தெடுத்ததற்கு காரணமாக இருக்குமென்று கருதப்படுகிறது.
ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள கோத்தாபய அரசியல் பின்னணியைக் கொண்டவரல்ல. பாராளுமன்ற அரசியலில் அனுபவமுடையவருமல்ல. ஒரு யுத்த செயற்பாட்டு பின்னணியை கொண்டதோர் அதிகார பலமுள்ள சிவில் அதிகாரியாகவே அவர் பிரபலம் பெற்றிருந்தார். ஒரு சிப்பாயாக இராணுவத்தில் பிரவேசித்து போர்க்கள அனுபவத்தின் பின்பே அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பொறுப்பேற்றிருந்தார். விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக மௌனிக்கச் செய்ய வேண்டும் அல்லது நிர்மூலமாக்க வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக் ஷ இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருந்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான தீவிரப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மஹிந்த ராஜபக் ஷவுக்கு தோளோடு தோள் கொடுத்து கோத்தாபய ராஜபக் ஷ செயற்பட்டிருந்ததால் சுயமாக முடிவெடுத்து செயற்படுவதற்கு அவருடைய மூத்த ஜனாதிபதியின் கூடப்பிறந்த சகோதரன் என்ற குடும்ப உறவு முறை அவருக்குப் பேருதவி புரிந்தது.
யுத்தத்தில் கிடைத்த வெற்றி ஜனாதிபதி ராஜபக் ஷவை மட்டுமல்லாமல், அவருடைய சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ உள்ளிட்ட ராஜபக் ஷ குடும்பத்தினருக்கு அரசியலில் ஒரு மேன்மை நிலைமையை வழங்கியிருந்தது. இந்த வெற்றியைத் தனது அரசியல் மூலமாக பயன்படுத்திய மஹிந்த ராஜபக் ஷ மூன்றாம் முறையாகவும் ஜனாதிபதியாக பதவி வகிக்க மேற்கொண்ட முயற்சி 2015 ஆம் ஆண்டு அவரை தோல்வியடையச் செய்தது. ரணில் –சந்திரிகா மற்றும் சிறுபான்மை இணைந்து கூட்டமைப்பு வெற்றியை தேடிக்கொண்டது. இலங்கை சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவராக இருந்த மைத்திரிபால சிறிசேன மஹிந்தவுக்கு எதிரான நிலைப்பாட்டில் ஜனாதிபதியாகத் தெரிவாகினார்.
2015 இல் மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஏற்பட்ட தோல்வியுடன் அம்பாந்தோட்டை, மெதமுலனவில் தனது பொதுவாழ்கையை முடித்துக் கொள்ளச் சென்ற சகோதரர்களை மீண்டும் அரசியல் பிரவேசத்திற்குள் அழைத்து வந்ததில் கடந்த முறை அமைந்த மைத்திரி –- ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திற்கும், சிறுபான்மை சமூக அரசியல் தலைவர்களுக்கும் குறிப்பாக முஸ்லிம் தீவிரவாதக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் பெரும் பங்குண்டு என்பதை மறுக்கமுடியாது.
பாதுகாப்பான நாடு, பிளவுபடாத நாடு, வளர்ச்சிப் பாதையில் நாடு என்ற நம்பிக்கைகளை ராஜபக் ஷ சகோதரர்களாலே உருவாக்க முடியும் என்று பெரும்பான்மை மக்களில் பெரும் பான்மையினரும் சிறுபான்மை மக்களில் சிறுபான்மையினரும் நம்பிய நிலையில் கோத்தாபயவின் வெற்றி அமோகமானதாக அமைந்திருக்கிறது.
முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரைக்கும், யுத்தத்திற்குப் பின்னர் அவர்களுடைய அரசியல், சமூக, கலாசார மற்றும் பொருளாதார ரீதியில் பல்வேறு சவால்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் குறித்து எதிர்ப்புப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களுடைய அரசியல், சமூக, பொருளாதார இருப்புக்கள் அழிவுக்குட்படுத்தப்படுகின்ற சூழ்நிலைகள் தோன்றியிருக்கின்றன.
அதேவேளையில், கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலானது, முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. முஸ்லிம்களின் இருப்பின் மீதும், அவர்களின் சுதந்திரமான வாழ்வுரிமை மற்றும் மனித உரிமைகள் மீதும் பல பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில்தான், இலங்கையினுடைய ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளதோடு, அதில் கோத்தாபய ராஜபக் ஷ வெற்றி பெற்றுள்ளார்.
இலங்கையில் ஜனாதிபதிகளைத் தீர்மானிக்கின்ற சக்திகளாக சிறுபான்மையினர் முக்கிய பங்களிப்பை செய்து வந்திருக்கின்றனர். ஆனால் இந்தத் தேர்தலிலே சிங்கள மக்கள் ஒன்றிணையப் போகிறார்கள் என்பதையும், அந்த ஒன்றிணைவு 50 வீதத்தைத் தாண்டிச் செல்லப் போகிறது என்பதையும் முஸ்லிம்களை வழிநடத்தி வரும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அனுமானிக்கவில்லையா என்கிற கேள்வி எழுகிறது.
1990களிலே அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசவுடன் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் இணைந்திருந்த காலம் மற்றும் ஜனாதிபதி சந்திரிகாவுடன் அஷ்ரப் இணைந்திருந்த காலங்களில் ஜனாதிபதிகளைத் தீர்மானிக்கின்ற சக்தியாக சிறுபான்மையின மக்கள் இருந்து வந்துள்ளார்கள். 2015 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் இதனை மிகத் தெளிவாகக் கண்டோம்.
ஆனால், கோத்தாபய ராஜபக் ஷ வெற்றியீட்டியுள்ள இந்தத் தேர்தல் முடிவானது, சிறுபான்மையினரின் ஆதரவில்லாமலேயே, ஜனாதிபதியொருவரை பெரும்பான்மை இனத்தவர்கள் தெரிவு செய்வதற்கானதொரு நிலையினை ஏற்படுத்தியிருக்கின்றது.
வடக்கு, கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்கள் ஆங்காங்கே கோத்தாபய ராஜபக் ஷவுக்கு வாக்களித்திருந்தாலும்கூட, வடக்கு, கிழக்கிலே தமிழர்களுடன் ஒன்றிணைந்து வாழ்கின்ற முஸ்லிம்கள், பெரும்பாலும் தமது வாக்குகளை சஜித் பிரேமதாசவுக்கு வழங்கினர். இதன் காரணத்தினால், முஸ்லிம்களுடைய பங்குபற்றுதல் இல்லாமலேயே சிங்கள ஜனாதிபதியொருவரை சிங்கள சமூகம் தெரிவு செய்திருக்கிறது. எனவே, முஸ்லிம் தலைமைகள் மீண்டும் மிகக் கவனமாக சிந்தித்து, தங்கள் அரசியல் செயல்முறைமையினை கொண்டு நடத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இந்த நாட்டின் இனத்துவ விகிதாசாரப் புள்ளி விபரத்தின்படி, 74 வீதத்தினர் சிங்களவர்களாக இருக்கின்றனர். அதன் காரணத்தினால் சிறுபான்மையினர் அரசியலில் பெரும் செல்வாக்கைத் தொடர்ந்தும் செலுத்த முடியாத நிலைமை இருப்பதனாலும், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைககள் அதிகரித்துக் காணப்படுவதனாலும், முஸ்லிம்கள் ஒத்தியங்கிப் போய் தங்களின் வாழ்க்கையையும் தம்முடைய எதிர்கால சமூகத்தின் வாழ்க்கையையும் நிலைப்படுத்துவதற்கான தேவையைத் தேடவேண்டியுள்ளது.
கோத்தாபய வெற்றியடைந்தமைக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் காரணமாக அமையவில்லையாயினும் அவர் வெற்றி பெறுவதற்கு சிறுபான்மை மக்கள்தான் காரணம் என்பதை ஈண்டு கூறமுடியும். அதாவது சஜித் பிரேமதாசவுடன் சேர்ந்த முஸ்லிம் தமிழ் பிரதான கட்சிகளின் கூட்டு தான் கோத்தாபய ராஜபக் ஷ வின் வெற்றியை பேரின சமூகத்துக்கிடையில் ஜனாதிபதி தேர்தலில் இலகுவாக்கியது என்று அரசியல் அவதானிகள் குறிப்பிடுகிறார்கள்.
தேர்தல் முடிவு கோத்தாபயவிற்கு தமிழ் பேசும் மக்கள் தரப்பில் இருந்து சென்ற செய்தி; நாம் இன்னமும் தங்களை அதிகம் நம்பவில்லை என்பதே. அது 2009 முள்ளிவாய்கால் யுத்தமாக இருக்கலாம், யுத்தத்திற்குப் பின்பு 2015 வரையிலான காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கு அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு எதிராக செயற்பட்ட தேரர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தாமல் இருந்தமை, தமிழ் பகுதிகளில் திட்டமிட்ட வகையில் நடக்கும் சிங்கள மக்களின் குடியேற்றம் மற்றும் பெளத்த விகாரைகளின் தோற்றம் போன்ற பல காரணங்களை குறிப்பிட முடியும்.
இந்த தாற்பரியங்களை ராஜபக்ஷவினர் சரியாகப் புரிந்துகொண்டு கிடைத்திருக்கும் ஆட்சி வாய்பை சரியாகப் பயன்படுத்தி இலங்கை வாழ் சகல இன மக்களும் சரிசமமாக வாழ்வதற்குரிய நாடு. இங்கு யாரும் பிரத்தியேக உரிமைகள் உள்ளவர்கள் என்றில்லை. சிறுபான்மை, பெரும்பான்மை என்று உரிமைகளில் உசத்தி, குறைவு என்றில்லாமல் யாவரும் சமம் என்று செயற்படுவார்களானால் எதிர் காலத்தில் ராஜபக்ஷவினரின் அரசியல் ஸ்திரத்தன்மையை யாராலும் தடுக்க முடியாது.
அன்றேல் இடையிடையே இன்னொரு ‘நல்லாட்சி’ ஏற்பட்டுத்தான் ஆகும். 2009 இற்கும் 2015 இற்கும் இடைப்பட்ட தமது ஆட்சிகால செயற்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்து தவறுகளை திருத்தி, சிறப்புக்களை மேலும் செயற்பாட்டுத் திறனுள்ளவையாக மாற்றினால் இலங்கை நாட்டின் அரசியல் வரலாறு பல்தேசிய இனம் வாழும் முன்மாதிரி நாடுகளில் ஒன்றாக எழுதப்படும்.-Vidivelli
- எம்.ஐ.எம் அன்வர் (ஸலபி)