வில்பத்து விவகாரம்: சட்டவிரோதமாக மக்கள் வாழும் இடத்தை தவிர்த்தே புதிய எல்லை
மன்றில் சட்டமா அதிபர் சார்பில் சுட்டிக்காட்டு
வில்பத்து தேசிய வன சரணாலயத்தினுள் சட்டவிரோதமாக மக்கள் வாழும் பிரதேசத்தைத் தவிர்த்து வில்பத்து தேசிய வன சரணாலயத்துக்கான புதிய எல்லைகளை அரச வர்த்தமானி மூலம் வெளியிடுவதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு மன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
வில்பத்து தேசிய வன சரணாலயத்தின் அதி பாதுகாப்பு வலயம் உட்பட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சட்டவிரோதமாக துப்புரவு செய்யப்பட்டு மீள்குடியேற்றம் மற்றும் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டுள்ள நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி சுற்றாடல் நீதி மையம் தாக்கல் செய்திருந்த ரிட்மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சிரேஷ்ட சட்டத்தரணி மனோகர ஜயசிங்க இவ்வாறு தெரிவித்தார். நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இந்த ரிட்மனு ஜகத் டி சில்வா மற்றும் பந்துல நிஸ்ஸங்க கருணாரத்ன ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வில்பத்து வன சரணாலயத்தின் பெரும் எண்ணிக்கையிலான ஏக்கர் நிலம் துப்புரவு செய்யப்பட்டு சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களையும் நிர்மாணங்களையும் அகற்றுவதற்கு உத்தரவு பிறப்பிக்கும்படி கோரி அப்போதைய அமைச்சர் ரிசாத் பதியுதீன் உட்பட்ட குழுவினருக்கு எதிராக சுற்றாடல் நீதி மையத்தினால் இம்மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இம்மனுவின் தீர்ப்பினை அறிவிப்பதற்கு நீதிவான் விருப்பம் தெரிவிக்காமையின் காரணமாக இவ்வழக்கினை மேன்முறையீட்டு நீதிமன்றில் மீண்டும் விசாரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.2015 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு விசாரணையின் பின்பு தீர்ப்பு வழங்குவதற்கு திகதி குறிக்கப்பட்டும் மூன்று தடவைகள் அது பிற்போடப்பட்டது. சுற்றாடல் நீதி மையத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த ரிட மனுவில் பிரதிவாதிகளாக வனசீவராசிகள் பணிப்பாளர் நாயகம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, மன்னார் மாவட்ட செயலாளர், அமைச்சர் ரிசாத் பதியுதீன் உட்பட 9 பேர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தேசிய சுற்றாடல் சட்டத்தை மீறி வில்பத்து சரணாலயப் பகுதி துப்புரவு செய்யப்பட்டுள்ளதால் சரணாலயத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் ரிசாத் பதியுதீனின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ள இந்த சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் சுமார் 1500 குடும்பங்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளன என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையினால் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய சுற்றாடல் சட்டம் மீறப்பட்டுள்ளது. வரண்ட வலயத்துக்குள் அமைந்துள்ள இந்த வில்பத்து வனசரணாலயம் மனிதர்கள் குடியேறுவதற்கு உகந்ததல்ல.
அதனால் இப் பிரதேசத்தில் காடுகளை அழிப்பது, சட்டவிரோத கட்டடங்களை நிர்மாணிப்பதில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கும்படியும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த அரச சிரேஷ்ட சட்டத்தரணி மனோகர ஜயசிங்க, வில்பத்து வனசரணாலயத்தின் எல்லைகளைக் குறிப்பிட்டு 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1779/15 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலை நீக்கிவிட்டு அகதிகள் தற்போது வாழும் பிரதேசத்தைத் தவிர்த்து வில்பத்து வன சரணாலயத்தின் புதிய எல்லைகளைக் குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தலொன்றினை வெளியிடுவதாகத் தெரிவித்தார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ. பரீல்