இனவாத பிரசாரத்தை முன்னெடுத்த: சிறுபான்மையின அரசியல்வாதிகளுக்கு தென்னிலங்கை மக்கள் சரியான பதிலடி
லக்ஷ்மன் யாப்பா அபேகுணவர்தன
தமது அரசியல் இலாபத்துக்காக இனபேதத்தை ஏற்படுத்தும் வகையில் வடக்கு, கிழக்கு மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளில் பிரசாரங்களை முன்னெடுத்த சிறுபான்மை அரசியல்வாதிகளுக்கு தெற்கிலுள்ள மக்கள் சரியான பதிலடியைக் கொடுத்துள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேகுணவர்தன, எதிர்வரும் பொது தேர்தலின்போது சிறுபான்மையின மக்களை தம்முடன் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
பத்தரமுல்ல – நெலும் மாவத்தையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
நாங்கள் தெரிவித்ததை போன்றே 16 தேர்தல் மாவட்டங்களிலும் பெரும்பான்மை வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சியினர் வடக்கு, கிழக்கு வாக்குகளை எம்மால் பெறமுடியாது என்றும், அங்கு அவர்கள் பெருபான்மையை பெற்று விட்டால் ஏனைய பகுதிகளில் கிடைக்கும் வாக்குகளை கொண்டு வெற்றிபெற முடியும் என்றுமே எண்ணியிருந்தனர். ஆனால் பெரும்பான்மை மக்கள் அவர்களுக்கு சிறந்த பதிலடியைக் கொடுத்துள்ளனர்.
சிறுபான்மை இனவாத அரசியல் தலைவர்களின் பிரசாரங்களுக்கு தெற்கில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை மக்கள் இனிவரும் காலங்களில் இனவாதிகளுடன் இணைந்திருக்காமல் எம்முடன் இணைந்து செயற்படுங்கள் என்று நாங்கள் அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.
பொதுத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு ஐ.தே.கவினர் எமக்கு ஒத்துழைப்பு வழங்காமல் உள்ளனர். மக்களின் தீர்மானத்திற்கிணங்க விரைவில் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஐ.தே.க. எமக்கு வழங்க வேண்டும். ஐ.தே.க.வின் பின்வரிசை உறுப்பினர்கள் தங்களின் ஓய்வூதியத்தை மனதிற் கொண்டு செயற்படுகின்றார்கள். அத்துடன் எமது மூன்றுமாத கால ஆட்சியில் ஏதாவது தவறுகள் இடம்பெறுமா என்று எதிர்பார்த்திருக்கும் அவர்கள், அதன்மூலம் பயனடைவதற்கு கனவு காண்கின்றார்கள்.
அதனால்தான் இவர்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு இணக்கம் தெரிவிக்காமல் இருக்கின்றார்கள்.
தற்போது எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதிலும் ஐ.தே.க.வில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எம்மை பொறுத்தவரையில் பாராளுமன்றத்தில் யாருக்குப் பெரும்பான்மை ஆதரவு இருக்கின்றதோ அவரே எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட வேண்டும். அவ்வாறு பார்க்கின்றபோது ரணில் விக்கிரம சிங்கவிற்கே பெரும்பான்மையான ஆதரவிருக்கின்றது. அவரே எதிர்க்கட்சித் தலைவராக இருக்கமுடியும். எங்கள் விருப்பமும் அதுவே.
பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாபா கூறியதாவது, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தின்போது அமைக்கப்பட்ட விசாரணைப்பிரிவுகள் தனிப்பட்ட நபரொருவரின் மீது கொண்டிருந்த குரோதம் காரணமாகவே ஸ்தாபிக்கப்பட்டன. இந்த விசாரணைப் பிரிவுகளால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஐ.தே.க. அரசாங்கத்தினர் தேர்தல் பிரசாரங்களின்போது ஜனாதிபதி கோத்தாபயவிற்கு எதிராக எவ்வளவுதான் சேறுபூசல்களை மேற்கொண்ட போதிலும் மக்கள் அவர்களின் தீர்மானத்தில் உறுதியாக இருந்துள்ளனர்.
இனங்களுக்கிடையில் பேதத்தை ஏற்படுத்தும் வகையில் கடந்த அரசாங்கத்தில் சிறுபான்மையின அரசியல் தலைவர்கள் செயற்பட்டமையின் காரணமாகவே இன்று நாட்டுக்குள் இன பேதம் ஏற்பட்டுள்ளது . இவர்களே சிறுபான்மை மக்கள் மத்தியில் எம்மை இனவாதிகளாகக் காண்பித்தவர்கள்.
அரச ஊழியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் இடையூறுகளின் காரணமாகவே ஜனாதிபதித் தேர்தலின்போது பெரும்பான்மையான அரச ஊழியர்கள் ஐ.தே.க.விற்கு எதிராக வாக்களித்தனர். ஜனாதிபதி கோத்தாபய ஒருபோதும் தன்னை முன்னிலைப்படுத்தி பிரசாரங்களை முன்னெடுக்கவில்லை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம் என்றே அவர் தெரிவித்து வந்தார்.
சிறந்த முறையிலான பிரசாரங்களை அவர் முன்னெடுத்திருந்த அதேவேளை, மக்களும் ஐ.தே.க.வின் செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுடனே இருந்துள்ளனர். இவர்களால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் மற்றும் அப்போதைய அமைச்சர்களால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலும் மக்கள் விழிப்புடன் இருந்துள்ளனர். கடந்த அரசாங்கத்தின் போதே எமது பிக்குகள் பெருமளவு கொச்சைப்படுத்தப்பட்டதுடன், பௌத்த மதம் பிரதான மதமல்ல என்றும் அமைச்சர் ஒருவரால் கூறப்பட்டிருந்தது. இதற்கெல்லாம் மக்கள் தற்போது அவர்களின் பதிலடியை வழங்கியுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்னாயக்க கூறியதாவது,
ஐ.தே.க. அரசாங்கத்தினர் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து நாட்டின்மீது உண்மையான பற்று கொண்டிருந்த தலைவரான மஹிந்த ராஜபக் ஷவை கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது தோல்வியடையச் செய்தனர். ஆனால் இதனால் நாட்டுக்கு ஏற்பட்ட பயன்தான் என்ன? மீண்டும் பயங்கரவாத அச்சுறுத்தல் ஒன்று ஏற்பட்டதுடன் இதனால் சுற்றுலாத்துறையும் பாதிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் நாட்டின் பொருளாதாரத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் சிறுபான்மை அரசியல்வாதிகள் சிறுபான்மையினரின் ஆதரவின்றி நாட்டின் தலைவரை உருவாக்கமுடியாது என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தனர். அதற்கும் தற்போது பெரும்பான்மை மக்களால் பதிலடி வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மை மக்களின் ஆதரவு குறைவதற்கான பிரதான சூத்திரதாரிகளாக சிறுபான்மை அரசியல் தலைவர்களே செயற்பட்டுள்ளனர்.
சிறுபான்மை மக்களை சந்தித்து ஜனாதிபதி கோத்தாபயவையும் அவரை சுற்றி இருப்பவர்களையும் இனவாதிகளாக சித்தி ரித்தனர். இதனாலேயே சிறுபான்மை மக்களின் ஆதரவை பெறுவதில் பெரும் சவால்கள் ஏற்பட்டிருந்தன. இருந்த போதிலும் நாடுமீது பற்றுக்கொண்ட ஒரு சில சிறுபான்மை மக்களின் ஆதரவு எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்காக நாம் அவர்களை வரவேற்கின்றோம். இனிவரும் காலங்களில் எம்முடன் கைகோர்த்து செயற்படுமாறும் நாம் அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.-Vidivelli