ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சி இனி அதன் கூட்டணிகளை பாதுகாத்துக்கொள்ள அதன் கட்டமைப்பில் மாற்றுவழி பற்றி அவசியம் சிந்தித்தாக வேண்டும். இதுவே இன்றைய தேசிய அரசியலின் புதிய சமன்பாடாகுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நிந்தவூரில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்குமான பொதுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்து எமது கரங்களைப் பலப்படுத்தியுள்ளனர். இந்த ஒற்றுமையானது இப்போது சமூக வலைத்தளங்களில் சிலரால் ஆபத்தானதென்று விமர்சிக்கின்றனர்.
ஆனால் சிறுபான்மையினரான தமிழர்களும் முஸ்லிம்களும் மாற்றுத் தரப்புக்கு எதிராக ஏன் வாக்களித்தனர் என்பது பற்றி இங்கு சிந்திக்கத் தவறிவிட்டனர்.
கடந்த 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிராகவே வாக்களித்தனர். 2015 இல் இப்போக்கு மேலும் பலமடைந்திருந்தது. ஆக, தொடர்ச்சியாக நடைபெற்ற 3 ஜனாதிபதித் தேர்தலிலும் சிறுபான்மை மக்கள் ஆணையானது மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிராகவே இருந்து வந்தது. இந்தப் போக்கினை இப்போதைக்கு ஆபத்தானதென்று கூறுவது வேடிக்கையானது. ஆனால் இதனை வென்ற தரப்பாகிய மஹிந்த ராஜபக் ஷ அணியினரே ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும்.
அதனைப்போல் இந்தக் கட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்த வெற்றியையும் பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டும். மைத்திரி வெற்றியடைந்தது சிறுபான்மை மக்களின் ஏகோபித்த வாக்குகளினாலேயாகும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற அமைப்பு தற்போதைய அரசியலில் சிங்களப் பேரினவாதத்தின் முகவராகவே பார்க்கப்படுகின்றது. அவர்கள் சிறுபான்மையினரின் வாக்குகள் இல்லாமல் வெற்றிபெறுவதைப் பற்றி கடந்த 5 ஆண்டுகளாக சிந்தித்து வந்துள்ளனர்.
ஆனால், ஐக்கிய தேசிய கட்சியானது சிங்களப் பெரும்பான்மையின் ஆதரவு தமக்கு ஏன் கிடைக்கவில்லை என்பது பற்றி சிந்தித்து நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக மஹிந்த மற்றும் கோத்தாபய ஆகியோர் தனியே நின்று வெற்றியடையும் வைராக்கியத்துடன் இந்தத் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலைமை தொடர்ந்தால் மட்டுமே சிறுபான்மையினங்களுக்கு ஆபத்தானது என்பதைத் தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அவருடன் இருந்த சிறுபான்மையைச் சேர்ந்த ஒரு கும்பல் இந்தத் தேர்தலில் படுதோல்வி அடைந்தவர்களாவர். எனினும், அவர்களே பட்டாசு கொளுத்தி மகிழ்கிறார்கள். ஆனால் நம்முடைய பிராந்தியங்களில் ஒற்றுமையின் மூலம் நாம் வெற்றியடைந்துள்ளதை மறந்து நம்மில் சிலர் சோர்வடைந்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவு என்பது தற்போது அடுத்த பிரச்சினையாக உருவாகியுள்ளது. மக்களின் உணர்வுகளும் இனி ரணிலோடு வரவேண்டாம் என கட்டளையிடுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும்கூட ஐக்கிய தேசியக் கட்சி தங்கள் குழப்பங்களை தீர்க்காதுவிட்டால் மீதியை தாங்கள் மஹிந்த ராஜபக் ஷவுடன் பேசிக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆகவே கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவை அவர்கள் சரிசெய்தாக வேண்டும்.
எவ்வாறாயினும், சிறுபான்மை மக்களின் உணர்வுகளை புதிய ஜனாதிபதி நன்கு புரிந்துகொண்டு தனது அடுத்தகட்ட அரசியலின் புதிய வியூகத்தை திட்டமிட்டாக வேண்டும். அதுமாத்திரமின்றி சிறுபான்மை அரசியல் அமைப்புக்களும் தங்களுக்கான அடுத்தகட்ட அரசியலின் புதிய வியூகங்களை தடுமாற்றமின்றி திட்டமிட்டாக வேண்டும். அதுவே விவேகமான அரசியல் வழிமுறையாக இருக்க முடியுமே தவிர சரணாகதி அரசியலைச் செய்ய முடியாது. சிறுபான்மையினரைப் பொறுத்தவரையில் சரணாகதி அரசியலைத் தவிர்த்து ஆரோக்கியமான இயக்க அரசியல் வாய்ப்புக்கள் பற்றி சிந்திக்க வேண்டும்.
பதிலாக மாற்றமான முடிவுகளை எடுத்திருக்க வேண்டுமென்பது கேவலமானதாகும்.
முதலில் ஐக்கிய தேசியக் கட்சி தன்னுடைய தலைமைத்துவ மாற்றம் பற்றி தீர்க்கமான முடிவுகளை எடுக்கட்டும். அதன் பின்னர் சிறுபான்மை அடுத்தகட்ட அரசியல் பற்றியும் அடுத்த தேர்தலில் தனித்தா, பிரிந்தா அல்லது கூட்டுச் சேர்ந்தா என்பதை சிந்திக்க முடியும். விகிதாசார தேர்தல் முறையின் உச்சக்கட்ட பயனையும் முஸ்லிம்களின் காப்பீடு தொடர்பான உச்சகட்ட ஊர்ஜிதப்படுத்தல் தொடர்பிலும் நாம் திட்டமிடல் வேண்டும். இந்த செயற்பாட்டில் நம்மிடமிருந்து பிரிந்து சென்றவர்களை இணைத்துக்கொண்டு நம் பயணத்தை தொடருதல் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.-Vidivelli