ஏ.எல்.எம்.றிஸ்வி (CGO)
காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையம்
பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுவதையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகின்றது.
இன்றுடன் முஸ்லிம்களின் புனித பூமியான பலஸ்தீன் இஸ்ரேலினால் ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்டு 70 வருடங்கள் நிறைவடைகின்றன. 1948 மே மாதம் 15ஆம் திகதி சர்வதேச முஸ்லிம்களின் துக்க தினமாகும். அதாவது, எமது முதல் கிப்லாவான பைத்துல் முக்கத்தஸ் அமையப் பெற்றுள்ள புனித தலமான பலஸ்தீன் நாட்டினை உலகில் அடையாளமின்றி இருந்த இஸ்ரேல் கபடத்தனமாக சுவீகரிப்புச் செய்த தினமே இத்தினமாகும்.
முஸ்லிம் உம்மாவின் முதல் கிப்லாவும், மூன்றாவது புனிதஸ்தலமுமான பைத்துல் முகத்தஸினை, மஸ்ஜிதுல் அக்ஸாவை இன்றுவரை இஸ்ரேலிய இராணுவம் பல முறைகள் ஆக்கிரமிப்புச் செய்து துவசம் செய்துள்ளது. இதேவேளை இன்று வரை இஸ்ரேல் இராணுவத்தினரே முஸ்லிம்களின் முதல் கிப்லாவினை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர்.
இலங்கை மற்றும் சர்வதேசமெங்கும் பலஸ்தீன் மக்களின் துன்ப நிகழ்வினையும், அவர்கள் யூத சியோனிஸ்டுகளால் தமது சொந்த இடத்தினை விட்டு விரட்டியடிப்புச் செய்யப்பட்டதையும் நினைவு கூர்ந்து கடந்த 15 மே மாதம் நக்பா தினம் கொண்டாடப்பட்டது. உலகளவில் பலஸ்தீன மக்கள் தமது உடைமைகள், உறவுகள், சொந்தங்கள், உயிர்களை தொலைத்து நிற்கின்ற நிலையில் அவர்களின் உணர்வுகளோடு இரண்டறக் கலக்கின்றோம் என்று பறைசாற்றவே சர்வதேசமெங்குமுள்ள முஸ்லிம் உம்மத் இத்தினத்தினை கொண்டாடுகின்றது.
அதேவேளை, இன்று 29, நவம்பர் மாதத்தினை ஐக்கிய நாடுகள் சபையானது சர்வதேச பலஸ்தீன் மக்களின் ஒருமைப்பாட்டு தினமாக (International Day of Solidarity with the Palestinian People) பிரகடனப்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய இந்த முக்கியத்துவமிக்க தினத்தில் பலஸ்தீன் வரலாற்றின் அறிமுகம் பற்றி சிறிது நோக்குவோம்.
தள அமைவிடம்
பலஸ்தீன், ஜோர்தான், லெபனான், சிரியா போன்ற நாடுகளை உள்ளடக்கிய நிலப்பிரதேசமே ‘ஷா சாம்ராஜ்யம்’ என அழைக்கப்படுகின்றது. ஷாம் நாட்டின் தென்மேற்குப் பிரதேசமே பலஸ்தீன் புனித பூமியாகும். ஆசியாவின் மேற்குப் புறத்தில் மத்திய தரைக்கடலில் அமைந்துள்ளது. ஆசியாவினதும் ஆபிரிக்காவினதும் இணைப்புக் கேந்திரமாக இது அமைந்துள்ளது.
பலஸ்தீன் எல்லைகள்
வடக்காக லெபனான் நிலப் பிரதேசமும் வட கிழக்காக சிரியாவும் மற்றும் கிழக்காக ஜோர்தான், தெற்காக எகிப்தும் அமைந்துள்ளன.
பலஸ்தீன் பூமி முஸ்லிம் உம்மாவின் உறுதிப்படுத்தப்பட்ட பூர்வீகம்
பலஸ்தீன் பிரதேசம் உலகின் நாகரிக வரலாற்றில் மிகப் புராதனமான அரீஹா (ஜெரிக்கோ) என்ற பிரதேசமாகும். வரலாற்று ஆய்வறிக்கைகளின்படி கி.மு.8000ஆம் ஆண்டளவில் இப்பிரதேசத்தின் வரலாறு அமையப்பெற்றுள்ளது என்ற தகவல்கள் காணப்படுகின்றன. ஆனால் இன்றைய நவீன தொல்பொருள் ஆய்வுகளின்படி கி.மு.9000 ஆண்டுகளில் இப்பிரதேசத்தில் மனிதர்களின் வாழ்வாதாரம் மற்றும் விவசாய நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.
“கன்ஆன் தேசம்” என்ற புராதனப் பெயரினைக் கொண்டே பலஸ்தீன் பூமி ஆரம்பகாலங்களில் அனைத்து மக்களாலும் அறியப்பட்டது. இப்பிரதேசத்தின் புராதன குடிகள் தமது தேசத்தின் பெயரின் மூலம் “கன்ஆனியர்” என்றே அழைக்கப்பட்டனர். இவர்களும் “ஜஸீரதுல் அரப்” எனும் அரபுப் பிரதேசத்தின் தீபகற்பத்திலிருந்து இங்கு கி.மு. 3000 வருடங்களுக்கு முன்னரான காலப்பகுதியில் வந்து குடியேறியவர்கள். இன்றைய வரலாற்று ஆய்வாளர்களின் ஆய்வுகளின்படி கன்ஆனியர்கள்தான் இன்றுள்ள பலஸ்தீனர்களாவர். காலப்போக்கில் மத்திய தரைக்கடலின் கிழக்குப் பிரதேசவாசிகளும் இங்கு குடியேறினர். இவர்கள்தான் அன்றைய அரபுக் கோத்திர சமூகத்தவர்களுமாவர். பின்னர் இஸ்லாத்தின் வருகையின் பிற்பாடு இக்கோத்திரத்தவர்கள் இஸ்லாத்தினை தமது புனித மதமாக ஏற்றுக்கொண்டனர். அறபு மொழியினையும் தமது தாய்மொழியாக இவர்கள் ஏற்று பேசத்தொடங்கினர். பலஸ்தீன் பிரதேசம் இஸ்லாத்தின் புனித பூமி என்பதற்கான அடையாளங்கள் ஹிஜ்ரி 15 முதல் இன்றுவரை காணப்படுகின்றது.
புனித பூமியின் போராட்ட வரலாறு
அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தினை அபகரிப்பதற்கும், அவற்றினை தனது கண்காணிப்பின் கீழ் நிலை நிறுத்திக்கொள்வதற்கும் அமெரிக்காவிற்கு ஒரு குழுவினர் தேவைப்பட்டனர். இதற்கிடையே பிரிட்டிஷ் ஏகாதிபத்திய உருவாக்கத்தின் காரணமாக உலகெங்கும் எடுப்பார் கைப்பிள்ளைகளாக மதிப்பற்றுக்கிடந்த யூதர்களை இங்கு சதிவலையின் மூலம் குடியேற்றியது. இதனால் இருப்பிற்கான இடமும் வளமான எண்ணெய் வயல்களைக் கொண்ட நாடுகளின் தூவானமும் இஸ்ரேல் என்ற நாட்டிற்கு கிடைக்கப்பெறுகின்றது. தம்மை குடியேற்றிய விசுவாசத்திற்கு வேலை செய்பவர்களாக இவர்கள் காலப்போக்கில் மாறுகின்றனர். இவர்களை இங்கு அமரச் செய்தவர்களின் நோக்கமும் நிறைவேறுகின்றது.
பலஸ்தீனின் இன்றைய நிலை
பேராசிரியர் எட்வார்ட் ஸைத் சர்வதேச அரங்கில் பலஸ்தீனத்தின் விடிவுக்காக குரல் கொடுத்தவராவார். இவர் “ஒரு நாடு கைப்பற்றப்பட்டு அங்கு வாழும் மக்கள் கூட்டம் அடிமையாக்கப்பட்டவுடன் அம்மக்களை இழிவானவர்களாகவும், வரலாறு அற்றவர்களாகவும் ஆக்குவது ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கும் ஒரு வழிமுறை” என்றார். இந்த அவல நிலையே பலஸ்தீன் மக்களுக்கு இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இன்று உலகில் எந்தவொரு மக்களும் இதுவரை அனுபவித்திராத சொல்லொணாத் துயரங்களை இங்கு வாழ்கின்றவர்கள் எதிர்கொள்கின்றனர். தமது சொந்த வீடு தன் மேல் இடிந்து விழும். சிறுவர்கள் என்ற பராபட்சமின்றி குழந்தைகள் கைதாகுகின்றனர். துப்பாக்கியின் முன் பெண்கள், குழந்தைககள், வயோதிபர்கள் என்ற வித்தியாசமின்றி சுட்டுத்தள்ளப்படுவர். ஆனால் அவர்களது தூய ஈமான் அவர்களை அசையச் செய்யாது. இன்று சிறைகளில் சிறார்கள் 8000 பேர் கைதிகளாக உள்ளனர். மருத்துவ வசதிக்காக செல்ல முடியாது.
உலகின் மெத்தனப் போக்கு
இன்று பலஸ்தீன் மக்கள் கடந்தத 70 வருடங்களாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால் பாதிப்புற்றுள்ளமையினை கண்டும் காணாதவர்களாக உலகம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. நாளாந்தம் அங்கு நடைபெறுகின்ற நிகழ்வுகளை ஒருசில ஊடகங்கள் வாயிலாகப் பார்க்கின்றபோது நாம் ஒரு நாகரிக உலகில்தான் வாழ்கின்றோமா? என்ற கேள்வியினை எம்மை நோக்கியே கேட்க வேண்டியவர்களாக உள்ளோம்.
பலஸ்தீன நிலம் யூதர்களின் சியோனிஸ்டுகளின் மூதாதையர் பூமி. இதில் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ இவர்களுக்கு உரிமையுண்டு என சவூதிய இளவரசர் முஹம்மத் ஸல்மான் கூறியுள்ளார். அதேவேளை, சவூதி – இஸ்ரேல் பொருளாதார மற்றும் ராஜதந்திர உறவுகள் மலரும் மங்களகரமான வாய்ப்புக்களும் கனிந்துள்ளதாகவும் தனது விசுவாசத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மாவின் சாபத்திற்கு ஆளாகியுள்ளார். இதனைவிட வெட்கக்கேடான செயல் உலகில் எங்குமிருக்காது என்பதுவே இஸ்லாமிய அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகும்.
குற்றமற்று குற்றம் செய்யும் இஸ்ரேல்
இஸ்ரேல் தான் செய்யும் குற்றங்களை மறைப்பதற்கும், தண்டிப்பதற்கும் எவரும் இல்லையென்ற நிலையில் தான்தோன்றித்தனமாக உலக அரங்கில் செயற்படுகின்றது. இஸ்ரேல் இழைக்கின்ற அநியாயங்களுக்கு எதிராக உலக அரங்கில் துருக்கியின் அர்துகானை விட வேறு எவரும் குரல் கொடுக்கவில்லை எனலாம்.
தான் என்ன போர்க்குற்றங்கள் புரிந்தபோதும் தனக்கு விசாரணை இல்லை என்றே கருதிக்கொண்டிருக்கின்றது இஸ்ரேல். ஊடகங்கள் எதுவும் தனது இரும்புத் திரையினை விலக்காத அளவிற்கு வேலியமைத்து செயற்படுகின்றன. ஐ.நா. சபையானது தனது கடமைக்கு வாய்வழிக் கண்டனத்தோடு மாத்திரம் நின்றுவிடுகிறது.
பலஸ்தீன் மக்களின் அவல ஓலங்களை காது சாய்க்காமலே உலகம் செவிடாகிவிட்டது. அனைத்து நிகழ்வுகளையும் திட்டமிட்டு இஸ்ரேல் அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றது. தற்பாதுகாப்பு நடாத்தும் அப்பாவி பலஸ்தீன சிறார்கள் குற்றவாளிகள், பயங்கரவாதிகள் என்று மேற்கத்தைய ஊடகங்கள் முத்திரை குத்துகின்றன. ட்ரம்ப் குருட்டுத்தனமாக அறிக்கை விடுகின்றார். இஸ்ரேலுக்கு இரண்டு பில்லியனை வழங்கும் வொஷிங்டன், பலஸ்தீனர்களின் உயிர்களின் மதிப்பை கணக்கெடுப்பதில்லை.
மனித வரலாறு இதுபோன்றதொரு போராட்டத்தினை இதுவரை கண்டிராது. துப்பாக்கி அரக்கர் கூட்டம் ஒருபுறம் , மறுபுறம் யுத்த கவசங்கள். ஆனால் இவை யாவற்றின் முன்னே கற்களோடும், ஈமானிய இறை நாமத்தின் உச்சரிப்போடும் அப்பாவிச் சிறுவர்கள். இறை நிராகரிப்பாளன் ஆப்ரஹாவின் பெரும் யானைப் படைகளை அபாபீல் பறவைகளைக் கொண்டு அழித்தொழித்த இறைவன், பத்ர் யுத்தத்தில் மலக்குகளைக் கொண்டு உதவியளித்த இறைவன் அவனது புனித பூமியினை மீட்டெடுக்கும் சக்தியினை இவர்களுக்கு வழங்குவான் என்பதுவே எமது ஈமானின் எதிர்பார்ப்பாகும்.
இறைவா எமது பலஸ்தீன் மக்களின் விடிவுக்காய் உனது உதவிக் கரத்தினை நீட்டிடுவாயாக! ஆப்ரஹாவின் யானைப் படையினை அபாபீல் பறவைகளைக் கொண்டு அழித்தொழித்த இறைவன் நீயே! பத்ர் யுத்தத்தில் மலக்குகளைக் கொண்டு உதவியளித்த இறைவன் நீயே! எனவே, எங்களது பலஸ்தீன் மக்களுக்கும் இதுபோன்ற உதவியினை வழங்கிடுவாயாக!
-Vidivelli