ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ கடந்த வெள்ளிக்கிழமை குறைந்த எண்ணிக்கை கொண்ட அமைச்சரவையொன்றினை நியமித்துள்ளார். 1956 ஆம் ஆண்டின் பின்பு நியமனம் பெற்ற சிறிய அமைச்சரவை இதுவாகும். 1956 ஆம் ஆண்டில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை 14 பேரைக் கொண்டதாகவே இருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் 15 பேர் அமைச்சர்களாகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். நிமல் சிறிபால டி சில்வா, ஆறுமுகம் தொண்டமான், தினேஷ் குணவர்தன, டக்லஸ் தேவானந்தா, பந்துல குணவர்தன, ஜனக பண்டார தென்னகோன், சமல் ராஜபக் ஷ, டலஸ் அழகப்பெரும, ஜோன்ஸ்டன் பெர்ணாந்து, விமல் வீரவங்ச, மஹிந்த அமரவீர, எஸ்.எம். சந்ரசேன, ரமேஷ் பதிரன, பிரசன்ன ரணதுங்க மற்றும் பவித்ரா வன்னிஆரச்சி ஆகியோரே அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவுக்கும் பல அமைச்சுகள் கையளிக்கப்பட்டுள்ளன.
அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரேனும் நியமிக்கப்படவில்லை என சிலர் குறைபடுகின்றனர். எனினும் மிகக் குறைந்த எண்ணிக்கை கொண்ட இந்த அமைச்சரவையில் உள்ளீர்ப்பதற்குப் பொருத்தமான முஸ்லிம்கள் எவரும் இல்லை என்ற யதார்த்தத்தையும் புரிந்து கொள்வது அவசியமாகும். எம்.பி.க்களான பைசர் முஸ்தபா மற்றும் மஸ்தான் ஆகியோர் தற்போதைய அரசுக்கு ஆதரவளிக்கின்ற போதிலும் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் இருக்கத்தக்க இவர்களுக்கு வழங்குவதென்பது சாத்தியமற்றதாகும்.
எனினும் இன்று இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தெரிவித்திருக்கிறார். இந்த இராஜாங்க அமைச்சர்களின் நியமனத்தின் போது முஸ்லிம் சமூகத்தின் சார்பில் ஓரிருவர் நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியமிக்கப்படவுள்ள இராஜாங்க அமைச்சர்கள் சுதந்திரமாக தமது கடமைகளைச் செய்வதற்கு அமைச்சர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென ஜனாதிபதி புதிய அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வினையடுத்து நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சியின்போது இராஜாங்க அமைச்சர்கள் முழுநாளும் கையொப்பம் இடும் அதிகாரிகள் போன்றே இயக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஒருவரை திருப்திப்படுத்துவதற்காக மாத்திரம் இராஜாங்க அமைச்சர்கள் போன்ற அமைச்சுப் பதவிகள் வழங்கப்படக்கூடாது. அதனால் நாட்டின் நிதியும் வளங்களுமே வீண் விரயமாக்கப்படும். எனவே வேலைப்பளு அதிகமுள்ள அமைச்சுக்களுக்கே இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கும் வகையில் பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 25 நிர்வாக மாவட்டங்களிலும் முப்படையினரை கடமையில் ஈடுபடுத்தும் வகையில் ஜனாதிபதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இச்சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் ஊடாக பொது மக்களின் பாதுகாப்பை தொடர்ந்தும் பேணும் நோக்குடன் முப்படையினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விசேட அரசாங்க வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ பதவிப் பிரமாணம் செய்து கடமைகளைப் பொறுப்பேற்றதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஜனாதிபதி செயலகம் உட்பட தனக்கான உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை 2500 இலிருந்து 250 ஆகக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் தனது செயலாளரைக் கேட்டுள்ளார். தனது வாகனப் பேரணியின் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்குமாறும் கோரியுள்ளார். தனது படங்களை அரச அலுவலகங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் எனவும் உத்தரவிட்டுள்ளார். அவரது ஆரம்பம் அனைவராலும் பாராட்டப்படுகிறது.
எனினும் அவர் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பினைப் பலப்படுத்துவதற்கு முப்படையினரின் பங்களிப்பினைப் பெற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி மூவின மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதிலும் தனது கவனத்தைச் செலுத்த வேண்டும். அவரது முன்னெடுப்புகள் இன, மத பேதங்களுக்கப்பால் மக்கள் மனங்களை வெல்வதாக அமைய வேண்டும்.-Vidivelli