சட்டியிலிருந்து தான் அகப்பைக்கு வரும் என்பார்கள், அது போன்றுதான் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதித் தேர்தலும் நிகழ்ந்து முடிந்திருக்கிறது. அதாவது சிங்கள மக்கள் இன அடிப்படையிலேயே தமது தீர்மானங்களை எடுத்து வாக்களித்திருந்தார்கள். 2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜனாதிபதித் தேர்தலில் இவர்களின் வாக்குகளில் தளம்பல் இருந்ததால் தான் சிறுபான்மைகளின் வாக்குகள் ஆதிக்கம் செலுத்தி இவர்களின் அடிப்படைத் தெரிவு தோல்வியுற்றது. இதனால்தான் அந்த அரசை சிறுபான்மைகளின் அரசு என அடிக்கடி இவர்கள் கூறி வந்தார்கள். சிறுபான்மைகளும் நம்மால் தெரிவான அரசு எனக் கூறிக் கொண்டிருந்தார்கள்.
எனினும், வெறுமனே ஆட்சி மாற்றத்துக்கு மட்டுமே சிறுபான்மைகளின் வாக்குகள் உதவினவே தவிர எந்த உருப்படியான பலன்களும் சிறுபான்மைகளுக்குக் கிடைக்கவில்லை. சிறுபான்மைகளின் வாக்குகளால் பயன்பெற்று ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன சிறுபான்மைகளை மறந்து ரணிலுக்கும் முட்டுக்கட்டைகளை போட்டார். சிறுபான்மைகளுக்கு சார்பு இல்லாதவராகவும் இருந்தார். உண்மையில் இவரது பாத்திரம் ஒருவரைப் பாதுகாக்க அவரைத் தோற்கடிப்பது போன்றே அமைந்திருந்தது. எதிர்தரப்பு வலிமை பெறாமல் அதைக் கட்டுக்குள் வைத்திருப்பதாகவுமே அமைந்திருந்தது.
* பல கட்சிகளினதும் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சிகளினதும் வாக்குகளையும் பெற்று பொது அபேட்சகராகப் போட்டியிட்டு வென்ற இவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையை ஏற்றுக் கொண்டார். அன்றே போட்டி அரசியல் ஆரம்பமாகி விட்டது.
* அதிலிருந்து கொண்டே ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான நிலைப்பாடுகளை மும்முரமாக முடுக்கிவிட்டார். சில சமயங்களில் கட்டு மீறியும் சென்றார்.
* முதலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு விசுவாசமாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள சில நடவடிக்கைகளை எடுத்த பிறகு மறைமுகமாக முழுமூச்சில் மகிந்த தரப்பை வளர விட்டார்.
* அவற்றில் ஓர் உச்சகட்டம் தான் தன்னிடம் தோல்வியுற்ற மகிந்த ராஜபக் ஷவைப் பிரதமராக்கி ரணிலை எம்பியாக்கியமையாகும்.
*தமிழ் தரப்பை ஆசுவாசப்படுத்த ரணிலை அமைத்துக் கொண்டு முஸ்லிம்களையும் அதில் சேரவிட்டு தேசிய ரீதியில் முழு நாடும் இணைந்திருப்பதாக ஐ.நாவிடம் எண்பித்துப் போர்க் குற்றத்தையும் ஏற்றுக் கொண்டு, பொறுப்புக்கூறவும் ஒப்புக்கொண்டு இணை அனுசரணையையும் பெற்றுக் கொண்டு, 30/1 ஆம், 34/1 ஆம் நிபந்தனைகளுக்கும் இணங்கி விசாரணையையும் தண்டனையையும் முடுக்கிவிட்டார்.
* எமது ஆட்சி இப்போது தான் பொறுப்பேற்றிருக்கிறது. கால அவகாசம் தேவை. சர்வதேசத் தலையீடு அனர்த்தங்களை ஏற்படுத்தும். நாமே எமது பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள அனுமதி தேவை என்றார்.
இப்படியெல்லாம் கூறியவர் போர் வீரர்கள், நாட்டின் தியாகிகள் இத்தகையோரை உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ விசாரிக்கவும் தண்டிக்கவும் இடமளிக்க மாட்டோம் எனவும் கூறித் தனது ஆட்சி காலம் முழுவதும் எதுவும் செய்யவில்லை. இறுதியாக ஐ.நாவில் குற்ற விலக்கை மட்டும் பெற்று ஏனையவற்றுக்குத் தவணை பெற முயன்று அது பலிக்காது எனத் தெரிந்ததும் திரும்பிவிட்டார். இப்போது ஐ.நாவின் நிபந்தனைகள் முழுமையாக நிறைவேற்றப்படாமல் அப்படியே கிடப்பில் இருக்கின்றன.
இந்நிலையிலேயே சிங்கள வாக்குகளை 90 வீதம் பெற்ற புதிய அரசு இம்முறை நிகழ்ந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவின்படி ஆட்சிக்கு வந்திருக்கிறது. குற்றத்தின் பங்காளிகள் எனப்பட்டோரிடமே ஆட்சி கிடைத்திருப்பதும் எதிர்பாராத ஒரு மாற்றமாகவே இருக்கிறது. இவர்கள் ஐ.நாவுக்கு என்ன முன்வைக்கப் போகிறார்கள்.
* குற்றத்தை ஒப்புக் கொள்வார்களா?
* பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்ளப் போகிறார்களா?
* இணை அனுசரணையைப் பெற்றுக் கொள்ளப்போகிறார்களா?
* 30/1 ஆம், 34/1 ஆம் நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றப்போகிறார்களா?
* பல்லின வடிவிலான புதிய யாப்பை இயற்றுவார்களா?
* வடக்கு, கிழக்குப் பிரச்சினைக்கான தீர்வை வழங்குவார்களா?
* இவை யாவற்றையும் நீர்த்துப் போகச் செய்யும் உபாயங்களை ஐ.நாவில் கையாளுவார்களா?
* ஐ.நாவும் பெரும்பான்மை சிங்கள மக்களும் எதிரும் புதிருமாக இரு முனைகளில் இருந்தால் இவர்களின் நிலை எவ்வாறு அமையும்?
* தற்போதைய அரசு முற்றிலும் பேரின வடிவத்தைப் பெற்றிருப்பதால் அந்தப் பேரின கட்டமைப்பை மீறும் வாய்ப்பு அமையாது என்றே நான் நினைக்கின்றேன்.
* கடந்த அரசில் ஓரளவு பல்லினக் கட்டமைப்பு இருந்த நிலையிலேயே இனப்பிரச்சினைக்கான தீர்வைக் கண்டிருக்க வேண்டும். 100 திட்டத்தின் போது அதிக வாய்ப்பு இருந்தது.
தற்போது நிகழ்ந்திருக்கும் ஜனாதிபதித் தேர்தல் இனங்களின் மத்தியில் பிரதேசங்களை வேறுபடுத்தியிருப்பதோடு இனப்பாகுபாட்டையும் கூராக்கியிருக்கிறது. ஒத்தொருமித்த நாட்டில் சகல இனங்களும் அதிகாரப் பகிர்வு மூலம் நல்லுறவோடு வாழும் இணக்கப்பாட்டை நீக்கி நாங்கள் வேறு நீங்கள் வேறு என்னும் ரீதியில் வேண்டாம் எனத் தனித்தனியாகப் பிரித்து விட்டிருக்கிறது. மனம் பிரிந்து நிலம் பிரிய விட்டிருக்கிறது. எவரையும் வலுக்கட்டாயமாக ஆள முடியாது.
1977 ஆம் ஆண்டு நிகழ்ந்த பொதுத் தேர்தலில் 168 பாராளுமன்ற ஆசனங்களில் ஜே.ஆர் 140 ஆசனங்களைப் பெற்றிருந்தார். இது ஆறில் ஐந்து பங்காகும்.
எனினும் வடக்கு, கிழக்கில் தமிழ் தரப்பே 18 ஆசனங்களையும் பெற்றிருந்தது.
அதற்கு சுயநிர்ணய இறைமைக் கோரிக்கையோடுதான் மக்களாணை கிடைத்திருந்தது. எனவே ஜே.ஆர். தான் பெற்ற அதிகப் பெரும்பான்மையைக் கருதாமல் ஜனநாயக ரீதியில் மக்களாணைக்கு மதிப்பளித்து வடக்கு, கிழக்குத் தமிழ் தரப்பினரை அழைத்துப் பேசி தீர்வு கண்டிருந்தால் அப்போதே இனப்பிரச்சினை இலங்கையில் ஒழிந்து போயிருக்கும்.
அதே சூழல்தான் இப்போது மீளவும் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். தற்போதைய அரசுக்கு சிங்கள மக்கள் 90 வீதம் வாக்களித்த போதும் கூட கட்சி பேதமின்றி வடக்கு கிழக்கு தமிழ் தரப்பின் மக்களாணையை ஏற்று இணக்கப்பாட்டுக்கு வந்தாக வேண்டும். 1956 ஆம் ஆண்டு சிங்களப் பேரினவாதத்தைக் கையாண்டே எஸ்.டபிள்யூ.ஆர்.டிபண்டாரநாயக்க பிரதமரானார். பின்னர் பேரின வடிவில் நாட்டை ஆளமுடியாது எனத் தெரிந்து கொண்டு தந்தை செல்வாவோடு ஒப்பந்தம் செய்ய முயன்றதும் சிங்களப் பேரினவாதம் அவரது உயிரையே பறித்துவிட்டது. எனவே அதைப்போஷித்து வளர்த்துக் கொண்டு இனப்பிரச்சினையைத் தீர்க்க முயல்வது உசிதமல்ல.
ஆக 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இலங்கையில் நிகழ்ந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவு முற்றிலும் எதிர்பாராததாகும். 2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலின்படி வடக்குக்கும் கிழக்குக்கும், மலையகத்துக்கும் வெளியேயுள்ள சிங்கள வாக்குகள் இருபெரும் தேசியக் கட்சிகளுக்கும் ஓரளவு கூட குறையப் பிரிந்தாலும் வடக்கு, கிழக்கு மலையக சிறுபான்மை வாக்குகள் குறைநிரப்பு செய்யும் கட்சியே வெற்றிபெறும் என்னும் நிலையே அன்று அமைந்திருந்தது.
அதனால்தான் அப்போது மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்திருந்த அநுரகுமார திஸாநாயக்க இம்முறை தனியாகப் போட்டியிட்டு இரு தரப்புக்களும் வெற்றிபெற 51% வீதம் பெற முடியாத நிலை ஏற்படுமாயின் இரண்டாம் கட்டக் கணக்கெடுப்புத் தெரிவு மூலம் தனக்குக் கிடைக்கும் வாக்குகளால் ஒருவரைத் தீர்மானிக்கும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் அதன் மூலம் தனது கட்சிக் கொள்கைகளை வலுப்படுத்திக் கொள்ளலாம் எனவும் அவர் எண்ணியிருக்கலாம்.
1982 ஆம் ஆண்டு ரோஹன விஜேவீரவும் 1988 ஆம் ஆண்டு நந்தன குணதிலக்கவும் ஜே.வி.பி.யின் சார்பில் தனியாகப் போட்டியிட்டுப் பெற்ற வாக்குகளை விடவும் பெரிதாக அநுரகுமார திசாநாயக்கவுக்குக் கிடைக்கவில்லை.
மொத்தம் 4 இலட்சம் வாக்குகளை மட்டுமே இவர் பெற்றிருந்தார். 37 ஆண்டுகளுக்கு முன் ரோஹன விஜேவீர பெற்றிருந்த வாக்குகளை விடவும் 31 ஆண்டுகளுக்கு முன்பு போட்டியிட்டிருந்த நந்தன குணதிலக சிறிதளவு வாக்குகளை அதிகமாகப் பெற்றிருந்தார்.
அப்படியானால் ஜே.வி.பியின் சார்பில் தனியாக இம்முறை போட்டியிட்டிருந்த இதன் தலைவர் இம்முறை 37 ஆண்டுகள் கழிந்த நிலையில் ஆளும் கட்சியாகவோ எதிர்க்கட்சியாகவோ அமையாவிட்டாலும் கூட இந்த ஜனாதிபதித் தேர்தலில் குறைந்த அளவு 10 இலட்சம் வாக்குகளையாவது பெற்றுக் காட்டியிருக்க வேண்டும். காரணம் இத்தேர்தலில் முந்திக் கொண்டு 1 இலட்சம் பேரை கொழும்பு காலி முகத்திடலில் கூட்டிக் காட்டியிருந்தார். அதைக் கண்டதும் பாரிய வெற்றியை அது பெறும் என்றே எல்லோரும் நினைத்தனர்.
காத்தான்குடி நல்லாட்சிக்கான முன்னணியின் நஜா முஹம்மத் இதன் எழுச்சியைப் பற்றி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் 1988 ஆம் ஆண்டு அஷ்ரபுக்கு கிழக்கில் இருந்த அமோக வரவேற்பே தற்போது அங்கு அநுரகுமார திசாநாயக்கவுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். தற்போது கிடைக்கப் பெற்றிருக்கும் வாக்குகளைப் பார்க்கையில் முழு நாட்டிலும் ஒவ்வொரு தேர்தல் தொகுதிகளிலுமிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாகப் பெற்றுத்தான் அநுரகுமார திஸாநாயக்க 4 இலட்சம் வாக்குகளை மொத்தமாகப் பெற்றிருக்கிறார்.
1988 ஆம் ஆண்டு அஷ்ரப் ஜனாதிபதி பிரேமதாசவுடன் பேசி விகிதாசாரத் தேர்தல் முறையிலிருந்த 12.5 வெட்டுப்புள்ளியை 5 ஆகக் குறைக்காதிருந்தால் சிறு கட்சிகளும் சிறுபான்மைக் கட்சிகளும் பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றிருக்கவே முடியாது. ரோஹன விஜேவீரவின் காலத்திலும் நந்தன குணதிலக்கவின் காலத்திலும் இந்த வாய்ப்பு இருக்கவில்லை. ஆக அநுரகுமார திசாநாயக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியே பாராளுமன்ற ஆசனங்கள் சிலவற்றைப் பெற்றுக் கொண்டு வந்திருக்கிறார்.
முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ அண்மையில் 5% வெட்டுப்புள்ளியை 12.5% வீதமாக்க ஒரு தனிநபர் பிரேரணையைப் பாராளுமன்றத்தில் கொண்டுவரப் போவதாகக் கூறியிருந்தார். அது நடைமுறையாகும் பட்சத்தில் அக்கட்சிக்கும் பாராளுமன்ற ஆசனங்கள் கிடைக்க வழியில்லை.
அதைத்தான் இப்போது பேரினவாதிகள் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
* வடக்கையும் கிழக்கையும் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பிரித்தது ஜே.வி.பி என்பதால் வடக்கு, கிழக்குத் தமிழரின் வெறுப்புக்கு அது ஏற்கனவே ஆளாகியிருந்தது.
* வடக்கு கிழக்கு தமிழ் தரப்பின் 13 கோரிக்கைகளில் இணைப்பைத் தவிர ஏனைய 12 கோரிக்கைகளையும் ஏற்கிறோம் எனக்கூறியது சிங்களவர்களை விட்டும் அதைத் தனிமைப்படுத்திவிட்டது.
* 37 ஆண்டுகளும் ஜே.வி.பி.க்கு முஸ்லிம்களோடு எந்த பங்களிப்பும் இல்லை. 1971 ஆம் ஆண்டு அது உருவாகி இத்தனை காலமும் இந்நிலையே இருந்தது. காரணம் ஆரம்பம் முதல் சிங்கள வாக்கு வங்கியையே மூலதனமாகக் கொண்டிருந்ததாகும்.
* 2013 ஆம் ஆண்டு முதல், பிக்குகளின் தலைமையில் முஸ்லிம்கள் பரவலாக இம்சைப்படுத்தப்பட்டார்கள். ஜே.வி.பி. அவற்றை எதிர்த்துப் போராடவுமில்லை. நீதியின் பக்கம் நின்று முஸ்லிம்களை ஆதரிக்கவும் இல்லை. பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நிவாரணம் வழங்கவுமில்லை. அண்மையில் நிகழ்ந்த ஜனாதிபதித் தேர்தலில்தான் முஸ்லிம் வாக்குகளுக்காகப் பரவலாக முஸ்லிம்களை நெருங்கியது.
பாராளுமன்ற ஒதுக்கீட்டுப் பணத்தின் மூலமோ தனி முயற்சிகளின் மூலமோ அவர்கள் பொது சேவைகள் செய்ததாகத் தெரியவில்லை. வெறும் பேச்சு வன்மையாலும் தர்க்கக் கேள்விகளாலுமே ஒரு வட்டத்துக்குள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் விடுதலை எனப் பெயருள்ள போதும; ஒரே இனத்தின் அடிப்படையிலேயே கட்சியின் நிர்வாகிகள் அமைந்திருக்கிறார்கள்.
பல்லினம் சார்ந்து தலைவரும், செயலாளரும், பொருளாளரும் அமைந்திருக்க வேண்டும். அவர்கள் பல்வேறு மத, கலாசார, மொழி விழுமியங்களையும் கொண்டிருக்க வேண்டும்.
பொருளியலில் இறுக்கமான நிலைப்பாடற்றதும் ஏற்ற தாழ்வற்றதுமான இலகுவான சமநிலைப்பாட்டை கையாள வேண்டும்.
சமதர்ம முன்னோடி நாடுகளான ரஷ்யாவும் சீனாவும் கூடத் தற்போது இறுக்கமான நிலைப்பாட்டைக் கைவிட்டிருப்பதால் எம்மிடமும் நெகிழ்வு தேவை.
1971 ஆம், 1988 ஆம், 1989 ஆம் ஆண்டுகளிலும் கிளர்ச்சி நிகழ்ந்ததாலேயே அச்சம் மேலிட்டு அங்கத்தவர் இணைப்பு நீண்ட காலமாக வளரவில்லை.
பொருளூக்கம் கொண்டவர்கள் செஞ்சட்டையையும் புரட்சி தாடியையும் கண்டு மிரண்டே பாமர மக்களை ஜே.வி.பிக்கு எதிராக உசுப்பேற்றினார்கள். எனினும் பல்லினங்களினதும் நாட்டினதும் அடிப்படை அவசியத்தேவைக்கேற்ப அது தனது நிலைப்பாடுகளை மாற்றி புனரமைத்துக் கொள்ள வேண்டும்.
இரு பெருந்தேசிய கட்சிகளிலும் பேரினவாதிகளின் ஆளுமை இருப்பதால் அவற்றிலான சிறுபான்மைகளின் இருப்பு கேள்விக் குறியாகியுள்ளது.
ஒரு பல்லின யாப்பை இயற்றினாலன்றி சகல இனத்தினரும் சமமாக வாழ முடியாது.
ஒரு மத, ஒரு இன, ஒரு மொழி முன்னுரிமைகள் பிரஜைகள் மத்தியில் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துகின்றன. இது கூடாது.
அரச தொழில்களிலும் தேச வளங்களிலும் விகிதாசாரப் பகிர்வு இல்லாதிருக்கிறது. இந்நிலை நீக்கப்பட வேண்டும்.
ஒரே தேசம் ஒரே சமூகம் என்னும் நிலையில் எல்லோரும் இன வித்தியாசங்களின்றி இலங்கையர் என்னும் நிலைப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும்.
ஜனநாயகமும் மனித உரிமையும் சமூக நீதியும் சட்டவாக்கத்தின் நியாயாதிக்கமும் நிலை பெறவேண்டும்.
தேங்கியிருக்காத பொருளாதாரப் பரவலாக்கலும் தொழில் பெருக்கமும் அமைய வேண்டும்.
இவற்றை சாதனையில் கொண்டு வர வேண்டுமாயின் பல்லின தேசிய ஒருமைப்பாடு அவசியமாகிறது. தனித்தனி இன மத அமைப்புகளால் இது சாத்தியமாக போவதில்லை. அத்தகைய முறையில் முழு இலங்கையரைக் கூட்டிணைக்கவும் முடியாது. சிங்களவர் சார்பில் மக்கள் விடுதலை
முன்னணியும் வடக்கு, கிழக்கு தமிழர் அமைப்புகளும் தனித்துவ முஸ்லிம் அமைப்புகளும் மலையகக் கட்சிகளும் ஒப்பந்தம் செய்து கொண்டு ஒருவர் ஒன்றிணைந்து இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் மூன்றாம் தரப்பினராக வென்று பெருந்தேசியக் கட்சிகளிலிருந்து ஒருவருக்கு நிபந்தனைகள் விதித்து 51% வீதத்தை அடையச்செய்திருக்கலாம்.
உண்மையில் சிறுபான்மைகளில் எவரும் தனித்து நின்று முழு நாட்டுக்குமான இந்த தேர்தலில் ஜனாதிபதியாக முடியாது. காரணம் 74 வீதம் சிங்கள மக்கள் வாழுகையில் 26 வீதமே சிறுபான்மைகள் வாழ்கிறார்கள்.
எனவே அனைத்து சிறுபான்மைகளும் ஜே.வி.பியோடு இணைந்து போட்டியிட்டிருப்பார்களாயின் மூன்றாம் இடத்திற்கு வருபவருக்கு தக்க அதிகாரத்தை வழங்கியிருக்கலாம். அதன்படி நிபந்தனைகளை விதித்து ஒப்புதல் வாங்கி சிறுபான்மைகள் தமது அபிலாஷைகள் யாவற்றையும் நிறைவேறச் செய்திருக்கலாம். இது தவறவிடப்பட்டதால் சிறுபான்மைகள் வழங்கிய சஜித்துக்கான வாக்குகள் வீணாகி விட்டன. சிங்கள வாக்குகள் மட்டுமே தனக்கு கிடைத்ததாக கோத்தாபய கூறிவிட்டார்.-Vidivelli
- ஏ.ஜே.எம்.நிழாம்