சிங்கள பெளத்த பெரும்பான்மை ஆதரவில் ஆட்சி அமைத்தாலும் தமிழ், முஸ்லிம் மக்களை இணைத்துக்கொண்டு பயணிக்கும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவிற்கு ராமஞ்ச பீடாதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ நேற்று காலை தலதாமாளிகை வழிபாட்டில் ஈடுபட்ட நிலையில் ராமஞ்ச பீட வழிபாட்டிலும் ஈடுபட்டார். இதன்போதே பிரதமருக்கு ராமஞ்ச பீடாதிபதி நாபான்னே பேமசிறி தேரர் இந்த அறிவுரைகளை வழங்கினார்.
அவர் கூறுகையில்,
இந்த நாட்டில் தேசியத்திற்கு ஏதேனும் அழிவுகள் இடம்பெறும் நிலையில் அவற்றில் இருந்து காப்பாற்றும் பொருத்தமான தலைவர்கள் உருவாகும் அதிஷ்டம் எமது நாட்டிற்கு உள்ளது. இப்போதும் நாடு இரண்டாக பிளவுபட இருந்த நிலையில், சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் அரசியலமைப்பின் மூலமாக நாடு பிளவுபடவிருந்த நிலையில்தான் இந்த அரசியல் மாற்றம் உருவாகி உங்களின் தலைமைத்துவம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் சிங்கள பெளத்த பெரும்பான்மை ஆதரவு உங்களுக்கு கிடைத்து உங்களின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏனைய இனத்தவரும் இனியும் பிளவுபட்டு நிற்காது சிங்கள மக்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும். ஆனால் இன்னமும் அவ்வாறான எந்த முயற்சிகளும் முன்னெடுக்கப்படுவதை காணமுடியாதுள்ளது.
தமிழர், முஸ்லிம்கள் என தனித்து பார்க்காது அனைவரும் இலங்கையர்கள் என்ற உணர்வுடன் செயற்பட அவர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த செய்தியை அவர்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும். உண்மையில் இப்போதுதான் நல்லாட்சி ஒன்று உருவாக்கப் பட்டுள்ளதாக உணர முடிகின்றது. ஆகவே நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்ற ஆட்சியொன்று உருவாக்க நீங்கள் முன்வர வேண்டுமென அவர் கூறினார். -Vidivelli