தமிழ் முஸ்லிம்கள் சஜித்துக்கு அளித்த வாக்குகள் தேசிய அரசியலில் நியாயம் தேடும் நோக்கத்திலானது
இடதுசாரி குரல் அமைப்பு அறிக்கை
சிங்கள தேசியவாத வெற்றியை முன்னிலைப்படுத்திய தேர்தல் பிரசாரங்களின் விளைவாக இன்றைய சமூக சூழமைவு தோற்றுவிக்கப்பட்டிருந்தாலும், தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தங்களது சொந்த இனத்தை சார்ந்த வேட்பாளருக்கு வாக்களிக்காமல் சிங்கள வேட்பாளரான சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்தன் மூலம் தேசிய அரசியலில் தங்களுக்கு நியாயத்தைப் பெறும் நோக்கிலேயே செயற்பட்டிருக்கிறார்கள் என்று ‘இடதுசாரி குரல்’ அமைப்பு தெரிவித்திருக்கிறது.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் மிகப் பயங்கரமானவை என்ற நிலையில் இடதுசாரிக் குரல் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
இலங்கையில் ஏழாவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் பெறுபேறுகள் நாட்டில் இதுவரை இடம்பெற்ற அரசியல் பயணத்தின் தீர்மானகரமான மாற்றத்தைக் குறித்துரைக்கின்றது என நாம் நம்புகிறோம். தேர்தல் பெறுபேறுகள் இலங்கையில் வேறு எப்போதைக் காட்டிலும் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே பாரதூரமான விரிசலை ஏற்படுத்தி இருப்பதாகத் தோன்றினாலும், அது முழுமையான உண்மையல்ல. சிங்களத் தேசியவாத வெறியை முன்னிலைப்படுத்திய தேர்தல் இயக்கத்தின் விளைவாக இன்றைய சமூக சூழமைவு சிருஷ்டிக்கப்பட்டாலும், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமது சொந்த இனத்தைச் சார்ந்த வேட்பாளர்கள் இருக்கத்தக்கதாக, சிங்கள வேட்பாளரான சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்ததன் மூலம், தேசிய அரசியலில் தமக்கு நியாயத்தைப் பெறும் நோக்குடனேயே செயற்பட்டுள்ளனர் என்பது தெளிவு.
வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பிரதேசங்களில் பெரும்பான்மையான வாக்குகள் ஒரே முகாமாக இணைந்து தேர்தலில்; பயன்படுத்தப்பட்டுள்ளதோடு, தென்னிலங்கை வாழ் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியை முன்னிலைப்படுத்திய, ஐக்கிய தேசிய முன்னணியை தோல்வியுறச் செய்துள்ளனர்.
மைத்திரி -– ரணில் போலி நல்லாட்சி அரசாங்கம் 2015இல் மக்கள் எதிர்பார்த்த சமூக சுதந்திரத்தை ஏலத்தில் விற்பனை செய்துவிட்டு, கடந்த நாலரை ஆண்டுகளாக மக்களை பாரதூரமான பொருளாதாரக் கஷ்டங்களில் சிக்கவைத்தமை இரகசியமானதொன்றல்ல. தடுத்திருக்கக் கூடிய, 2019 ஏப்ரல் பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக, தென்னிலங்கை மக்கள் அத்துமீறி தமது பாதுகாப்புக் குறித்து அச்சமடைந்திருந்தனர். இந்நிலைமையை சிறப்பாக முகாமை செய்து, ஏப்ரல் தாக்குதலை தமது தேர்தல் இயக்கத்தின் முக்கிய போராட்டச் சுலோகமாக்குவதில் கோத்தாபயவின் அணி வெற்றி கண்டது.
தென்னிலங்கையின் பௌத்த பிக்குகளை முன்னிலைப்படுத்திய விகாரைகளை முன்னணியாகக் கொண்ட சிங்கள மக்கள் மத்தியில் ‘எல்லாவற்றிற்கும் மேலாக வாழ்வதற்கு எமக்கு ஒரு நாடு இருக்க வேண்டும்’ என்ற தேர்தல் சுலோகம் பிரபல்யப்படுத்தப்பட்டது.
‘சிங்கள தேசிய இனத்திற்கு ஒரு நாடு’ என்ற கோஷம் முன்னுரிமைப்படுத்தப்பட்டு, தென்னிலங்கையில் சமூகமயப்படுத்தப்பட்டது. கத்தோலிக்க மக்களில் பெரும்பான்மையினர் இந்த அலையை மையப்படுத்தி ஒன்று குவிந்தனர்.
ஜனாதிபதித் தேர்தலின் முடிவில் கோத்தாபய முகாம் மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளது. இன்று தமிழ் -– சிங்கள மக்களை ஒன்றிணைப்பது பெரும் சவாலாகவே அமைந்துள்ளது. சர்வதேச அழுத்தத்தின் முன்னே கோத்தாபய வெறுமனே பித்தலாட்டங்களை அலட்டியவாறு, வெறும் சிங்கள பௌத்த அரசை நிறுவுவது இலகுவான செயல் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, வெளிநாட்டு இராணுவ முகாம்கள் இலங்கையில் ஊடுருவத் திட்டமிட்டுள்ள உடன்படிக்கைகள் என்பன முன்னெடுக்கப்படும் அதேவேளை, மக்கள் மறந்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம், தொழிலாளர்களுக்கான புதிய சட்டம், உட்பட ஒட்டுமொத்தமாக மக்களை ஒடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் ஆபத்து எம்முன் உள்ளது.
எதிர்காலத்தில் நாம் எதிர்நோக்கும் பொதுத் தேர்தல் நடவடிக்கைகள், இந்த அனைத்துக் கொடூரமான நடவடிக்கைகளையும் மறக்கச் செய்வதற்கு இன்றைய அரசியல் நிலைமை உதவும். வடக்கிலும் தெற்கிலும் வாழும் மக்களுக்கு இந்த அரசியல் ஆபத்துக்களையிட்டு’ இடதுசாரிக் குரல்’ எச்சரிக்கை செய்கிறது.-Vidivelli