ஜனாதிபதி தேர்தல் தோல்வியுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அரசாங்கத்தை கொண்டுநடத்த முடியாது என்பது உறுதியாகிவிட்டது. வெகு விரைவில் மஹிந்த ராஜபக் ஷவின் தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைப்போம் எனக் குறிப்பிட்ட தினேஷ் குணவர்தன எம்.பி. தாம் அமைக்கும் புதிய அரசாங்கத்தில் ரிஷாத், – ஹக்கீம் ஆகியோருக்கு இடம் கொடுக்கப்போவதில்லை எனவும் கூறினார்.
அரசியல் நெருக்கடி நிலைமைகள் தொடர்கின்ற நிலையில் புதிய அரசாங்கம் அமைப்பது குறித்து கருத்துக்கனை முன்வைக்கையில் அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி தேர்தல் தோல்வியுடன் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருக்க இனியும் தகுதியில்லை என்பது தெரிந்துவிட்டது. ஜனாதிபதி தேர்தலில் எமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியின் மூலமாக எமக்கான அரசாங்கமொன்றை அமைக்க நாம் தயாராக உள்ளோம். இன்று மக்கள் ஒரு தீர்ப்பை கொடுத்துள்ளனர். இதற்கு அடிபணிந்து அரசாங்கத்தை எம்மிடம் ஒப்படைக்க வேண்டியது பிரதமர் ரணில் மற்றும் அவரது அரசாங்கத்தின் கடமையாகும். அவர்களுக்கு இனியும் அதிகாரத்தில் இருக்க எந்த தகுதியும் இல்லை.
அதேபோல் கோத்தாபய ராஜபக் ஷவை ஜனாதிபதியாக்கி விட்டோம். அடுத்ததாக மஹிந்த ராஜபக் ஷவின் தலைமையில் புதிய அரசாங்கத்தை உருவாக்கவே நாம் கடுமையான முயற்சிகளை எடுக்கின்றோம். அதற்கான முயற்சிகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ முன்னெடுத்து வருகின்றார்.
பலதரப்புடன் அவர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தும் வருகின்றார்.
எவ்வாறிருப்பினும், அடுத்தாண்டு பெப்ரவரி மாதம் வரையில் பாராளுமன்றத்தை கலைக்க முடியாத சட்ட சிக்கல்கள் உள்ளன. 19 ஆவது திருத்தத்திற்கு அமைய பாராளுமன்றம் அடுத்த ஆண்டு முதல் இரு மாதங்கள் வரையில் கொண்டுசெல்லப்பட வேண்டும். ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை அமர முடியாது.
எனவே, காபந்து அரசாங்கமொன்றை அமைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. எம்மால் அரசாங்கத்தை பொறுப்பேற்க முடியும்.
எமது அரசாங்கத்தில் எவரையும் புதிதாக இணைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. பெரும்பான்மைப் பலம் எம்மிடம் உள்ளது. அரசாங்கத்தை அமைப்பதில் எண்ணிக்கையில் பிரச்சினை ஒன்றும் இல்லை. நாட்டினை பிளவுபடுத்த முயற்சிக்கும் உறுப்பினர்களுக்கு நாம் எமது அணியில் இடமளிக்க மாட்டோம். ரவூப் ஹக்கீம்,- ரிஷாத் பதியுதீன் இருவரையும் எமது அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ள நாம் தயாரில்லை. அதேபோல் வடக்கு, கிழக்கை இணைக்கும் நாட்டினை துண்டாடும் பயங்கரவாதத்தை உருவாக்கும் நபர்களுக்கு நாம் ஒருபோதும் அங்கீகாரம் கொடுக்க மாட்டோம் என்ற உறுதியான நிலைப்பாட்டில் உள்ளோம் என்றார்.-Vidivelli