இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டமையையிட்டு பாராட்டுத் தெரிவிப்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கையின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டுத் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் தலைமைத்துவம் மற்றும் தூரநோக்கு பார்வையில் இலங்கை மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை இந்தத் தேர்தல் பிரதிபலிக்கிறது என்றும் ஜனாதிபதி கோத்தாபயவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையும் அதன் மக்களும் அதிக வெற்றிகளையும் செழிப்பையும் அடைவார்கள் என்றும் பிரதமர் இம்ரான்கான் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், பாகிஸ்தான் – இலங்கை இரு தரப்பினதும் நீண்டகால உறவு பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டதோடு இரு தலைவர்களும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்காக ஒருவருக்கொருவர் தமது விருப்பத்தையும் பரிமாறிக் கொண்டனர்.
மேலும், பிரதமர் இம்ரான்கான், தமது வசதிற்கேற்ப முடியுமான விரைவில் பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கு அழைப்பு விடுத்ததோடு, அவ்வழைப்பை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ ஏற்றுக்கொண்டார்.
இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையேற்று, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ எதிர்வரும் 29 ஆம் திகதி புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ளார். இதுவே புதிய ஜனாதிபதியின் முதலாவது வெளிநாட்டுப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.-Vidivelli