நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின்படி சிங்களப் பெரும்பான்மை வாக்குகளை அதிகம் பெற்று சிறிதளவான சிறுபான்மை வாக்குகளால் நாட்டின் ஏழாவது ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக் ஷ தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
இந்த தேர்தல் முடிவும் கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்றியும் சிறுபான்மை சமூக அரசியலில் உற்றுநோக்கக்கூடிய பல கேள்விகளையும் மீளாய்வு செய்ய வேண்டிய பல படிப்பினைகளையும் ஏற்படுத்தியிருப்பதாகப் பலரும் பல்வேறுவிதமான கருத்துக்களையும் பகிர்ந்துகொள்கின்றனர்.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களும் மலையகம் உட்பட நாட்டிலுள்ள தமிழர்களும் பெரும்பான்மையாக ஒருமித்த வாக்குகளை சஜித் பிரேமதாசவை ஆதரித்து அளித்திருந்தார்கள்.
மறுபுறம், சிறுபான்மை சமூகங்களான தமிழ், முஸ்லிம்களின் வாக்குகள் தேவையில்லை என்ற ஆரம்பத்தோடுதான் கோத்தாபய தரப்பினர் தங்கள் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டதாகப் பேசப்பட்டன. அதன்படி, கடந்தகால தேர்தல்கள் மூலம் அவர்கள் பெற்ற சிங்கள வாக்குகளைக் கணித்து, சிங்கள மக்கள் மத்தியில் அவர்களுக்கிருந்த செல்வாக்கில் நம்பிக்கை வைத்து, சிறுபான்மை வாக்குகளை எதிர்பார்க்காமல் சிங்கள வாக்குகளால் இத்தேர்தலில் வெற்றி கண்டிருக்கிறார்கள்.
இந்த வெற்றி சிறுபான்மை சமூகங்களை இந்த ஆட்சியின் எதிரிகளாக்கி இருக்கின்றது? சிறுபான்மை சமூகங்கள் ஆதரித்த சஜித் பிரேமதாச தோற்றுப் போனதனால், எமது தெரிவும் முடிவும் தூர நோக்கற்றதாகிவிட்டது? அல்லது பிழையான ஒரு முடிவாகிவிட்டது? என்றெல்லாம் விமர்சிக்கும்படி எம்மில் சிலரின் கருத்துக்களும் பேச்சுக்களும் இருப்பதாகவும் தெரிகிறது.
இந்தக் கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் பின்னாலுள்ள ஒரேயொரு மனோபாவம் என்னவென்றால், நாம் வாக்களித்த வேட்பாளர் எப்படியும் வெற்றிபெற வேண்டுமென்ற மரபான சிந்தனை முறைமை எமக்குள் மேலோங்கி இருப்பதேயாகும். இந்தப் பின்னணியில்தான், நாம் வாக்களித்தவர் வெற்றி பெற்றால் எமது முடிவு சரி என்றும் தோல்வியடைந்தால் எமது முடிவு பிழையென்றும் தீர்ப்புக் கூறிப் பழகிக்கொண்டோம்.
ஆனாலும், மேற்படி வழிமுறையின்படி, வெற்றி தோல்வியை வைத்து எமது முடிவு சரியா? பிழையா? என்று பார்ப்பதென்றால், இந்த ஜனாதிபதித் தேர்தலில் JVPக்கு வாக்களித்த நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் JVP நிச்சயம் வெற்றி பெறுமென்ற முடிவெடுத்தா வாக்களித்தார்கள்? இதில் கோத்தாவோ, சஜித்தோ வெற்றி பெறுவார்கள் என்ற நிலை தெரிந்தும் நிச்சயம் தோற்றுப் போகும் JVP க்கு வாக்களித்தவர்கள் எல்லோரும் தூரநோக்கற்றவர்களா? அவர்களின் முடிவு பிழையானதா? என்று கேட்டால் இதற்கு என்ன பதில் கூறமுடியும்?
ஆக, தேர்தலின் வெற்றி என்பது வாக்குகளால் தீர்மானிக்கப்படுவதாக வரையறுக்கப்பட்டாலும், கொள்கையின் வெற்றி, சமூகத்தின் வெற்றி என்றும் நாம் அதற்குள் இன்னும் பல வெற்றிகளைக் காணலாம். இதன்படி தேர்தல்களில் வெற்றிக்காக வாக்களிப்பதிலும் பார்க்க கொள்கைக்கு வாக்களிப்பவர்களும் சமூகத்திற்காக வாக்களிப்பவர்களும் தங்களின் நிலைப்பாட்டில் வெற்றி பெற்றவர்களே! இங்கு அவர்கள் வாக்களித்த வேட்பாளர் தோற்றாலும் வாக்களித்த அவர்களது கொள்கை தோற்காமல் வாழும்.
இதன்படி பார்த்தால், இத்தேர்தலில் சிறுபான்மைச் சமூகங்கள் வாக்களித்த சஜித் பிரேமதாச தோற்றாலும்; சமூகம் என்ற கொள்கையில் ஒருமித்து தங்கள் வாக்குப் பலத்தினை ஒன்றுபடுத்திக் காட்டியதில் இத்தேர்தலில் முஸ்லிம், தமிழ் சமூக அரசியலும் வெற்றி பெற்றுத்தான் இருக்கிறது.
இதேபோன்று, கோத்தாபயவின் வெற்றி என்பதும் இந்த நாட்டின் ஜனாதிபதிக்கான வெற்றி மாத்திரமல்ல. அது சிங்கள சமூகத்திற்கான வெற்றியாகவும் பௌத்த அரசொன்றை மிகப் பலமாக நிறுவும் அவரது கொள்கைக்கான வெற்றியாகவும் இருப்பதையும் நாம் ஆழ்ந்து பார்க்க வேண்டியிருக்கின்றது.
ஏனெனில், முஸ்லிம் சமூகம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற சமூகக் கட்சியில் ஒன்றிணைவதுபோல், தமிழர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று ஒன்றிணைவதுபோல், மலையகத் தமிழர்கள் மலையக அரசியலாக ஒன்றிணைவதுபோல் சிங்கள மக்களும் தங்களுக்கான ஒரு சமூகக் கட்சியை கொள்கையளவில் உருவாக்கியதன் வெற்றிதான் கோத்தாபயவின் வெற்றியாகும். பௌத்த மதத்தை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட இந்தக் கட்சியின் வெற்றியில் முஸ்லிம் சமூகமோ சிறுபான்மை சமூகமோ எந்த இடத்தை அடைய முடியுமென்ற பெரும் கேள்வி எம்முன் எழுந்து நிற்கிறது.
இதில் கோத்தாபயவுக்கு ஆதரவளித்து அவர் பக்கம் நின்ற சிறுபான்மை சமூகத்தவர்கள் பெரும் மகிழ்ச்சி கொள்வதும் தாங்கள் தூரநோக்குடன் வெற்றியின் பக்கம் நின்றுவிட்டோம் என்று மார் தட்டுவதும் நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்குமா? என்ற கேள்வியையும் வைத்துக்கொள்ள வேண்டும்.
இதற்கு மேலாக, சிறுபான்மைச் சமூகங்கள் கோத்தாபயவை ஆதரிக்காமல் தனித்து நின்றது பெரும் ஆபத்தான விடயம் என்றும் நாங்கள் தனியாக எங்களைப் பிரித்துக் காட்டியது இலங்கை தேசியத்தின் இறைமைக்கே பிழையானது என்பது போன்றும் சிறுபான்மை அரசியல் தலைவர்கள் இந்த தவறை செய்துவிட்டார்கள் என்றும் இன்னும் சிலரின் பிரசாரங்கள் எல்லை இல்லாமலும் பேசப்படுகின்றது.
இது எந்தவித அடிப்படையுமில்லாத ஒரு பேச்சாகும். ஏனெனில், தேசியக் கட்சிகளின் வேட்பாளர்களை முற்றாக நிராகரித்து, சிறுபான்மைச் சமூக, அரசியல் தலைவர்கள் தங்கள் முஸ்லிம், தமிழ் சமூகங்களுக்குள் ஒரு வேட்பாளரை நிறுத்தி தனி நாடு கேட்பதுபோல் அவர்களுக்கு ஒன்றுபட்டு வாக்களிக்கும்படி இந்த தேர்தலை எதிர்கொண்டிருந்தால் நாம் நாட்டின் தேசியத்திற்கு மாற்றமானவர்கள் என்று கூறலாம். ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யாமல் இந்த நாட்டின் தேசியக் கட்சியொன்றின் பௌத்த சிங்கள வேட்பாளரான சஜித் பிரேமதாசவைத்தான் ஆதரித்து வாக்களித்தோம். கோத்தாபயவைப் போன்று சஜித்தும் ஒரு தேசியக் கட்சியினதும் சிங்கள சமூகத்தினதும் வேட்பாளர்தான்.
இதற்கமைய நாங்கள் மாத்திரமல்ல, எங்களோடு சேர்த்து இந்த நாட்டின் பௌத்த சிங்கள மக்கள் சுமார் 35 இலட்சம் வாக்குகளை சஜித் பிரேமதாசவுக்கு அளித்திருக்கிறார்கள்.
இதன்படி பார்த்தால் இந்த 35 இலட்ச சிங்கள மக்களும் கோத்தாபயவுக்கு வாக்களிக்காதுவிட்டது ஆபத்தான விடயமா? இவர்கள் இந்த நாட்டின் தேசியத்திற்கு எதிரானவர்களா?
ஆக, முஸ்லிம், தமிழ் சமூகங்கள் ஒன்றுபட்டு ஒருபக்கமாக தங்கள் வாக்குகளை அளித்தாலும் அவர்கள் இந்த நாட்டின் சிங்கள மக்களோடும் தேசிய அரசியலோடும் இணைந்துதான் இந்த தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றார்கள். இந்த நாட்டின் ஜனநாயக வழிமுறையில் ஒரு ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக கொள்கை அடிப்படையில் பொருத்தமானவராக சஜித் பிரேமதாச சிறுபான்மை சமூகத்தின் அரசியல் தலைவர்களால் அடையாளம் காட்டப்பட்டார். அந்தக் கொள்கையின் பின்னால் எமது மக்களும் சமூகமும் நின்றது.
மறுதலையாகப் பார்த்தால் மக்களின் தீர்ப்புகள்தான் தலைவர்களின் கொள்கைகளாகவும் மாறுகின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் முடிவினை மக்கள் ஒன்றுபட்டு எடுத்து தலைவர்களை அதன் வழியில் பின்வரச் செய்தார்கள்.
அப்போது மக்கள் எடுத்த இந்த முடிவுக்கு மஹிந்தவின் ஆட்சியில் காணப்பட்ட ஆபத்தும் அச்சமும்தான் மிக முக்கிய காரணமாகத் தெரிந்தது. இம்முறையும் அதனை முன்னனுபவமாகக் கொண்டு அத்தகைய ஆபத்தும் அச்சமும் நிறைந்த ஒரு ஆட்சி உருவாகுவதை எமது சிறுபான்மை சமூகத்தினர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அத்தகைய ஒரு வேட்பாளருக்கு எமது சமூகம் ஆதரவளிக்காது என்ற கடந்தகால அனுபவங்களும் எமது தலைவர்கள் சஜித் பிரேமதாசவை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டதற்கும் மிக முக்கிய காரணமாகலாம்.
எனவே, தேர்தலின் வெற்றி எது எனக் கேட்டால், அதிகூடிய வாக்குகளைப் பெறுபவர் வெற்றிபெற்றவரானாலும் தலைவர்களின் பின்னால் அந்தச் சமூகமும் மக்களும் நிற்பதுவும் கொள்கையளவில் பெற்ற வெற்றியே ஆகும். இங்கு நாம் ஆதரவளித்த வேட்பாளர் தோற்றாலும் கொள்கையில் நாம் தோற்காது நிற்கின்றோம் என்ற செய்தி மிகவும் கனதியானது. எதிர்கால சமூக அரசியலுக்கு அது உறுதியான ஓர் அடித்தளத்தை உடையது.-Vidivelli
- நவாஸ் சௌபி