எமது நாட்டின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக் ஷ நேற்று ஜனாதிபதி செயலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். என்றாலும்— ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிந்ததன் பின்பும் நாட்டின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலின் பின்பு நாட்டின் பல இடங்களில் இடம்பெறும் சம்பவங்கள் சிறியதாயினும் அவை நாட்டின் சமாதானத்துக்கும், மக்களின் சகவாழ்வுக்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையில் மாற்றம் பெறலாம். அதனால் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தும்படியும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையம் பதில் பொலிஸ் மா அதிபரைக் கோரியுள்ளது.
தேர்தல் தினத்தன்றும் அதற்கு மறுதினமும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையத்துக்கு 16 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவை தாக்குதல், தீயிடல், பட்டாசு கொளுத்தி அச்சுறுத்தல், வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், தொலைபேசியூடாக கொலை அச்சுறுத்தல் என்பனவற்றுடன் தொடர்புடையனவாகும். இவ்வாறான சிறு சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் பெரிதுபடுத்தப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுவதால் பாரிய கலவரங்கள் உருவாகும் நிலைமை ஏற்படலாம். எனவே பொலிஸார் இது தொடர்பில் விஷேட கவனம் செலுத்தி மக்களினதும், சொத்துகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
பண்டாரகம, வாரியபொல, வென்னப்புவ, செட்டிக்குளம், தளுபன, வெல்லவாய ஆகிய பகுதிகளிலே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொதுஜன பெரமுன கட்சியின் கட்சியின் ஆதரவாளர்களுக்கு எதிராகவே முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையத்தின் தேசிய இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை காலி, இரத்தினபுரி மாவட்டங்களில் இரு பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காலி மாவட்டம் தலாபிட்டிய பள்ளிவாசல் மீது கடந்த 16 ஆம் திகதி இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்தோடு இரத்தினபுரி மாவட்ட ம், நிவித்திகல கெடனிகேவத்த பள்ளிவாசல் மீது நேற்று முன்தினம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இரு பள்ளிவாசல்களும் கற்களினால் தாக்கப்பட்டு கண்ணாடி ஜன்னல்கள் சேதப்படுத்தப்பட்டன.
காலி தலாபிட்டிய பள்ளிவாசல் இனந்தெரியாத நபர் ஒருவரினால் தாக்கப்பட்டது. இது குறித்த சட்ட நடவடிக்கை அவசியமில்லை என பள்ளிவாசல் நிர்வாகம் பொலிஸாருக்கு அறிவித்தது. கெடனிகேவத்த பகுதியில் பள்ளிவாசல் மீது மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் நிவித்திகல பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இருவரைக் கைது செய்தனர். சி.சி.ரி.வி. கமெரா காணொலி பதிவுகளை மையப்படுத்தி பொலிஸார் அவர்களைக் கைது செய்தனர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை கேகாலை – எட்டியாந்தோட்டை கணேபல்ல தோட்டக்குடியிருப்புகளுக்குள் 18 ஆம் திகதி இரவு பலாத்காரமாக உட்புகுந்த கும்பல் தமிழ் மக்களின் வீடுகளைச் சேதப்படுத்தியுள்ளது. ‘நீங்கள் இம்முறை யாருக்கு வாக்களித்தீர்கள்?’ என்று வினவியே வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் அநாகரிகமான முறையில் செயற்பட்டுள்ளனர். இது தொடர்பில் எட்டியாந்தோட்டை பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்று வருவதாகவும் மக்கள் அச்சுறுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இம்முறை ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் ஆணைக்குழு உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
என்றாலும் தேர்தல் நிறைவுற்று ஜனாதிபதி தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் உடன் தடுக்கப்பட வேண்டும். அதற்கான உத்தரவினை ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்க வேண்டும்.-Vidivelli