பெரும்பான்மை சமூகத்தின் அபிலாஷைகளுக்கு இணங்கி செல்வதே சிறுபான்மைக்கு பாதுகாப்பு
தேர்தல் பெறுபேறு இதனையே உணர்த்தியுள்ளது என்கிறார் அதாவுல்லா
5 வருடங்கள் அபிவிருத்தியில் பின்னோக்கிச் சென்ற எமது நாட்டை மீண்டும் அபிவிருத்திப்பாதையில் முன்கொண்டு செல்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதற்கான சந்தர்ப்பம் இப்போது கிட்டியுள்ளதாக தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.
புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்றி விழாவும் வாக்களித்த மக்களுக்கான நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் பாலமுனையில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்த நாட்டில் மீண்டுமொரு பயங்கரவாத சூழ்நிலை உருவாகக் கூடாது என்பதற்காகவும் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கக் கூடிய, தைரியமுள்ள, சர்வதேச சக்திகளுக்கு அடிபணியாத, நாட்டை நேசிக்கின்ற ஒரு தலைவர் எமது நாட்டுக்கு வேண்டும் என்கின்ற செய்தியை நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் உணர்த்தியுள்ளது.
அதுமாத்திரமன்றி இத்தேர்தல் இன்னுமொரு செய்தியை சிறுபான்மை சமூகத்தினருக்கு சொல்லியிருக்கின்றது. பெரும்பான்மை சமூகம் கூடுதலாக வாழுகின்ற எமது நாட்டில் பெரும்பான்மை சமூகத்தின் விருப்புக்கள் அபிலாசைகளுக்கு இணங்கிச் செல்வது சிறுபான்மை சமூகங்களை பாதுகாக்கும்.
எமது முஸ்லிம் அரசியல் தலைமைகள் அவர்களது சுயநல அரசியலுக்காக இந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தை பெரும்பான்மை சமூகத்தினருக்கு எதிராக சித்திரிக்கின்ற வகையில் அவர்களது தேர்தல் பிரசாரங்களை அமைத்துக் கொண்டனர். இதன் காரணத்தினால் அதன் வெளிப்பாடு பெரும்பான்மை சமூகத்தை கேள்விக்குட்படுத்தியது. மாத்திரமல்லாமல் அவர்களை விழிப்படையச் செய்திருக்கின்றது.
எமது சமூகத்தை வழி நடாத்துகின்ற அரசியல் தலைமைகள் இந்த யதார்த்தத்தை புரிந்து செயல்பட வேண்டும். தங்களது சுயநல அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு எமது சமூகத்தை பிழையாக வழிநடாத்தும் அரசியல் கலாசாரத்தை கையில் எடுப்பதை இனி விட்டுவிட வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளை தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைமைகள் தொடராக செய்து வருகின்றனர். இதனால் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் பெரும்பான்மைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். பல்லின சமூகம் வாழுகின்ற இந்த நாட்டில் இனவாத அரசியல் கலாசாரத்தை விதைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். எமது கட்சியின் முடிவுகளை ஏற்றுக் கொண்டு நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷவுக்கு வாக்களித்து புதிய ஜனாதிபதியின் வெற்றியின் பங்காளர்களாக முஸ்லிம் சமூகம் என்கின்ற ரீதியில் நாமும் திகழ்ந்தமைக்காக வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.-Vidivelli
- ஐ.ஏ.ஸிறாஜ், எம்.ஏ.றமீஸ்