தேர்தல்களின் போது மதத் தலங்களை தேர்தல் நடவடிக்கைகளுக்கான நிலையங்களாகப் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படவேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்க பெப்ரல் அமைப்பு தீர்மானித்திருப்பதாக அவ் அமைப்பின்நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டிஆராச்சி தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சில ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்களது பிரசார நடவடிக்கைகளுக்காக மதத்தலங்களை பயன்படுத்தியது தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளின்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ரோஹண ஹெட்டிஆராச்சி இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
மதஸ்தலங்கள் புனிதமானவை. அவை சுயாதீனமாக இருக்கவேண்டும். கட்சி மற்றும் நிறங்கள் அடிப்படையில் வேறுபடக்கூடாது. மதஸ்தலங்கள் இவ்வாறு செயற்படுவதால் சுதந்திரமானதும் சுயாதீனமானதுமான தேர்தலொன்றை நடத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அத்தோடு சில பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு வாக்களிப்பதற்கு பல கிலோ மீற்றர் தூரம் பயணிக்க வேண்டியிருந்தமை இந்த ஜனாதிபதித் தேர்தலில் கண்காணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்கும் தேர்தல் ஆணைக்குழு தீர்வு காணவேண்டும் என்றார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்