புர்கா அணிந்து வாக்களிக்க வந்த முஸ்லிம் பெண்களுக்கு சில இடங்களில் அசௌகரியம்
தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம்
புர்கா ஆடை அணிந்து வாக்களிக்க வரும் முஸ்லிம் பெண்களை ஆள்அடையாளத்தை உறுதிப்படுத்தும் அதிகாரியிடம் மாத்திரம் முகத்தை திறந்து காட்டுமாறு ஆணைக்குழு தெரிவித்திருந்த போதும், சிலர் அந்த அறிவுறுத்தல்களை கருத்திற் கொள்ளாது புர்கா அணிந்து வந்த பெண்களை பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கூறப்பட்டிருந்த அனைத்து அறிவுறுத்தல்களும் முறையாக உரிய அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்றதா என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
2015 ஆம் ஆண்டு தேர்தலையும் விட இம்முறை தேர்தலின் போது குறைவான தேர்தல் முறைகேடுகளே பதிவாகியுள்ளன. இம்முறை தேர்தலை நியாயமானதாகவும், சுதந்திரமானதுமாக நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவும் பெரும் உதவிகளை வழங்கியது. தேர்தல் பிரசார காலங்களையும் விட தேர்தலின் போது ஆணைக்குழு மிகவும் வினைத்திறனுடன் செயற்பட்டது.
தேர்தல் தினத்தன்று மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் மாத்திரம் 196 தேர்தல் முறைகேடுகள் பதிவாகியிருந்தன. கடந்த 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது இதேபோன்ற 222 முறைகேடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதேவேளை அனைத்து மாவட்டங்களையும் முன்னிலைப்படுத்தி நோக்கும்போது இம்முறை வன்முறைச் சம்பவங்கள் மிகவும் குறைவாகவே பதிவாகியிருந்தன. இந்நிலையில் இரு வன்முறை சம்பவங்கள் இம்முறை பதிவாகியிருந்ததுடன், இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தேர்தல் தினத்தன்று புத்தளத்திலிருந்து மன்னாருக்கு வாக்களிப்பதற்காக வாக்காளர்களை அழைத்துச் சென்ற பேருந்து மீது சிலரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளளோம். அதேவேளை இவ்வாறான நிலைமைகளின் போது வாக்காளர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணைக்குழு செயற்பட வேண்டும் என்றும் நாம் எதிர்பார்க்கிறோம்.
வாக்களிப்பு நிலையங்களில் இம்முறை மோசடிகள் பெரிதாக இடம்பெறாவிட்டாலும் , சில கட்சிகளின் ஆதரவாளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகைதந்த வாக்காளர்களின் எண்ணத்தில் மாற்றம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டிருந்தமையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. அதேவேளை இதன்போது சட்டத்திற்கு புறம்பான பிரசார செய்பாடுகளும் இடம்பெற்றிருந்தன.
முக்கிய தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் சமூகவலைத்தளங்களிலும் பொய்யான மற்றும் இனவாதத்தை தூண்டும் வகையிலான பல செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. இது தொடர்பில் நாம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு தெரிவித்திருந்த போதும் அவர்களால் இதற்கெதிராக நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்கள் காணப்பட்டதுடன் சில முறைகேடுகள் தொடர்பில் ஆணைக்குழுவுக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றும் நடவடிக்கை எடுக்காமை குறித்தும் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம்.
அதேவேளை பலாலி வீதி தடுப்பு சர்சைகுறித்து உடன் அவதானம் செலுத்தி பொலிஸார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli