வாக்களித்த விதம் சமூகங்களுக்கிடையிலான ஆழமான துருவப்படுத்தலை காட்டுகின்றது.
நீக்க நடவடிக்கை எடுங்கள் : புதிய ஜனாதிபதிக்கு மு.கா தலைவர் கடிதம்.
இந்த ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியீட்டியுள்ள கோத்தாபய ராஜபக் ஷவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அதே வேளையில், எமது கட்சியின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த எமது ஆதரவாளர்களுக்கும்.நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடு தழுவிய ரீதியில் அதிகூடிய வாக்களிப்பு வீதம் பதிவாகியுள்ளமையானது பொதுமக்கள் ஜனநாயகத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கின்றது. ஆனாலும் வாக்களிப்பு நடந்த விதம் எமது சமூகங்களுக்கு இடையிலான ஆழமான துருவப்படுத்தலை வெளிக்காட்டுகின்றது.
ஆனாலும், சகல இலங்கையர்களினதும் நலன் கருதிய செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான கடினமான முடிவுகளை எடுப்பதில் பலத்த சவால்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுதல், சட்டத்தின் ஆட்சி, நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகத்தின் பெறுமதிகள் என்பவற்றை போஷிப்பதற்கான செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியுள்ளது. உங்களது நிர்வாகத்தின் கீழ் அமைதி, ஒற்றுமை, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் சகல இனங்களுக்கும் மத்தியில் நிலைத்து நிற்கக் கூடிய நல்லெண்ணம் என்பவற்றுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று நம்புகின்றோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது சமூக ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு என்பவற்றில் மன்னிக்க முடியாததும், அழிக்க முடியாததுமான வடுவை ஏற்படுத்தியுள்ளது. அத்தகைய பாரதூரமான அனர்த்தத்தின் உண்மைத்தன்மையை கண்டறிவதற்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் முயற்சிகளில் எதிர்க்கட்சி பங்குபற்றாமை ஒரு கறையாகப் படிந்துள்ளது. அத்துடன், தேர்தல் பரப்புரைகளின் போது தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் மீது அநீதியானதும், அடிப்படையற்றதுமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதும் வருந்தத்தக்கவை.
எவ்வாறாயினும், தேர்தல் பெறுபேறுகளை உற்றுநோக்குகையில், பெரும்பான்மை மேலாதிக்க மனோபாவமுள்ள நாட்டில் சகல சமூகத்தினரையும் உள்ளடக்கிய ஒன்றுபட்ட தேசமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான புதிய வாய்ப்பொன்று கிட்டியுள்ளது. தேர்தலோடு ஒட்டியதான இனங்களுக்கிடையான துருவப்படுத்தலை நீக்கும் முயற்சிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும். வெவ்வேறு சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கப்பதற்கான சந்தர்ப்பமொன்று உங்களுக்கு வாய்த்துள்ளது. இலங்கை முஸ்லிம்களின் அதிகபட்ச ஆணையப் பெற்ற கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள உங்களை வாழ்த்துகின்றது.
வரலாறு அதற்கான சாளரமொன்றை மீண்டும் ஒருமுறை உங்களுக்குத் திறந்து தந்துள்ளது. இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் 2009 ஆம் ஆண்டில் யுத்த நிறைவின் பின்னர் உங்களுக்கு முன்னொரு தடவையும் கிட்டியிருந்தது. உங்களது வெற்றியில் பங்கெடுக்காத சிறுபான்மை மக்களின் கணிசமானோரின் மனங்களை வென்றெடுத்து, இனங்களுக்கிடையிலான இணைப்புப் பாலமாக அமைவதற்கும், குறுகிய வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மக்களும் சமமானவர்கள் என்ற மனப்பதிவை ஏற்படுத்துவதற்கும் முன்வருவீர்கள் என்று நம்புகின்றோம்.-vidivelli