சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் 122 பேருக்காகவே செயற்படுகிறார். நாம் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்தால் அந்த 122 பேரும் அவரைக் காப்பாற்றுவார்கள். சபாநாயகர் அந்த 122 பேரையும் காப்பாற்றுவார். சபாநாயகர் அரசாங்கம் ஒன்று இருப்பதாக நினைத்து செயற்படுதில்லை. அதனாலே சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை பற்றி நாம் சிந்திக்கவில்லை என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில்; சபாநாயகர் அரசியலமைப்புக்கு அமைவாக பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் படி ஒரு நிலையாக செயற்பட வேண்டும். ஐக்கிய தேசியக்கட்சியின் பேச்சாளராக செயற்படக்கூடாது.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும், விலகி எம்முடன் இணைந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஆனால் அவர் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அது ஏனென்று தெரியவில்லை.
கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்படவில்லை. இராஜாங்க அமைச்சராகவே நியமிக்கப்பட்டார். அதனால் அவர் அமைச்சரவை கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை.
பாராளுமன்றில் கலவரங்களில் ஈடுபட்டு சேதங்களை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் சபாநாயகரால் இதற்கான கமிட்டிகள் நியமிக்கப்பட்டிருக்கவில்லை. இதுவே பிரச்சினை. இதனால் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் குண்டுத் தாக்குதல் ஏற்படுவதற்கும் சந்தர்ப்பம் உள்ளது. எனவே அவ்வாறான சம்பவங்கள் ஏற்பட்டாலும் நடவடிக்கை எடுக்க முடியாமற்போகும் என்றார்.
-Vidivelli