நாளை மறுதினம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரசாரப் பணிகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ளன. இந் நிலையில் இன்றும் நாளையும் அமைதி பேணுவதற்கான காலப்பகுதியாகும். அந்த வகையில் வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் இவ்விரு நாட்களிலும் சட்டவிரோதமான முறையில் பிரசாரங்களில் ஈடுபடுவதிலிருந்தும் தவிர்ந்திருத்தல் அவசியமாகும். குறிப்பாக சமூக வலைத்தளங்களை தேவையற்ற விதத்தில் பயன்படுத்துவதிலிருந்து சகலரும் தவிர்ந்து கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும்.
இன்று சமூக வலைத்தளங்கள் ஊடாக மாத்திரமன்றி பிரதான ஊடகங்கள் வாயிலாகவும் தேர்தலை மையப்படுத்திய போலியான செய்திகள் பரப்பப்படுகின்றன. இது மக்கள் மத்தியில் பாரிய குழப்பங்களைத் தோற்றுவித்துள்ளது. குறிப்பாக அரசியல்வாதிகள் கூறாத விடயங்களையெல்லாம் கூறியதாக சில ஊடகங்கள் அறிக்கையிட்டு வருகின்றன. தேர்தல் ஆணைக்குழு நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் இதுபற்றி விசனம் தெரிவிக்கப்பட்டமையும் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
முன்னெப்போதுமில்லாதவாறு இம்முறையே தேர்தலில் ஊடகங்கள் அதிகம் பக்கச்சார்பாக நடந்துள்ளன. குறிப்பாக அரச மற்றும் தனியார் இலத்திரனியல் ஊடகங்கள் இதுவிடயத்தில் எல்லை கடந்து செயற்பட்டுள்ளதை தேர்தல் ஆணைக்குழுவின் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இது இலங்கையில் ஊடகத்துறையின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்குவதாக அமைந்துள்ளது.
எனவேதான் இந்த மோசமான போக்கை எதிர்காலத்திலாவது கட்டுப்படுத்துவது குறித்து தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
அதேபோன்றுதான் இத் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் வாக்களிப்பது தொடர்பிலும் சில தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக முகத்திரை அணியும் பெண்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது எனும் பிரசாரத்தை சிலர் முன்னெடுத்துள்ளனர். இது தவறானதாகும்.
இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலும் தெளிவுகளை வழங்கியுள்ளனர்.
”தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகைதரும் முஸ்லிம் பெண்கள் முகம் மூடும் வழமை உள்ளவர்களாக இருந்தால் முகத்தை மூடி வரலாம். ஆனால், வாக்களிப்பு நிலையத்திலுள்ள அதிகாரிகளுக்கு முகத்தை திறந்து அடையாளப்படுத்தினால் போதுமானது” என்று தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் அண்மையில் காத்தான்குடியில் நடைபெற்ற சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.
அதேபோன்றுதான் ”வாக்குச் சாவடிகளுக்கு புர்கா, நிகாப் அணிந்து செல்வதற்கு எதுவித தடையுமில்லை. வாக்களிப்பு நிலைய அதிகாரிகளுக்கு தமது அடையாளத்தைக் காட்டுவதற்காக மட்டும் அந்த இடத்தில் அவற்றை அகற்றவேண்டும்” என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் தெரிவித்துள்ளார். வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக வரிசையில் நிற்கும்போதுகூட முகத்திரையை அகற்ற வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருந்தபோதிலும் முஸ்லிம் பெண்கள் வாக்களிக்க வரும்போது முகத்திரை அணிவதை தவிர்த்துக் கொண்டு, தலையை மாத்திரம் மறைக்கும் ஆடைகளை அணிந்து வந்தால் அது தேர்தல் திணைக்கள அதிகாரிகளுக்கும் வாக்காளர்களுக்கும் உதவியாக அமையும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் சுட்டிக்காட்டியுள்ளதையும் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் முகத்திரை அணியும் பெண்கள் வாக்குச்சாவடிக்குள் நுழையும்போது அவர்களது முகங்களை திறந்து, ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி, தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வாக்குச் சாவடிக்குச் செல்லும்போது தனியாகச் செல்லாமல் மஹ்ரமான ஆணுடன் செல்லுமாறும் முடிந்தளவு வாகனத்தில் செல்வதற்கு ஒழுங்கு செய்து கொள்ளுமாறும் வாக்களித்தவுடன் தாமதிக்காது தத்தமது வீடுகளுக்கு திரும்புமாறும் அறிவுறுத்தியுள்ளதையும் முஸ்லிம் வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் முகத்திரை அணிந்து சென்ற பெண்கள் அசௌகரியங்களுக்குள்ளாக்கப்பட்ட பல சம்பவங்கள் பதிவானதை நாம் அறிவோம். தேர்தல் தினத்தன்றும் அவ்வாறான அசௌகரியங்கள் ஏற்பட நாம் வழிசமைப்போமாயின் அது தேவையற்ற முரண்பாடுகளுக்கு வித்திடலாம். சில தீய சக்திகள் அதனை சாதகமாக பயன்படுத்தி வன்முறைகளைக் கூட தோற்றுவிக்கலாம். எனவேதான் நமது பெண்கள் இது விடயத்தில் சமயோசிதமாக நடந்து கொள்ள வேண்டும்.
அதற்காக வாக்களிக்கச் செல்லாதிருப்பது அதை விடவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.-Vidivelli