குடியுரிமையற்றவர் என உறுதிப்படுத்தப்பட்டால் குறித்த வேற்பாளர் வெற்றி பெற்றாலும் நிராகரிக்கப்டுவார்.

சுயாதீன தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு: ஊடகங்களின் பக்கச்சார்பு குறித்தும் விசனம்

0 1,814

ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பாளர் ஒரு­வரின் குடி­யு­ரிமை தொடர்­பாக தாக்கல் செய்­யப்­பட்ட மனு குறித்த மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தின் தீர்ப்பை சவா­லுக்­குட்­ப­டுத்தி உயர் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள வழக்கு தேர்­தலில் தாக்கம் செலுத்­தாது என்று சுயா­தீன தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று புதன்­கி­ழமை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் வேட்­பாளர் ஒரு­வரின் குடி­யு­ரிமை தொடர்பில் எழுந்­துள்ள சர்ச்சை குறித்து எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அங்கு தொடர்ந்தும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்த ஆணை­யாளர் கூறு­கையில்:

கேள்வி: குறித்த சர்ச்­சைக்­கு­ரிய வேட்­பாளர் தனது வெளி­நாட்டு குடி­யு­ரி­மையை நீக்­கி­ய­தற்­கான ஆவ­ணங்­களை உங்­க­ளிடம் சமர்­ப்பித்­தி­ருப்­ப­தா­கவும், அதனை நீங்கள் ஏற்றுக் கொண்­ட­தா­கவும் அண்­மையில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் அவ­ரது சட்­டத்­த­ர­ணி­யொ­ருவர் கூறினார். எனினும் பிர­பல ஊட­க­மொன்­றுக்கு வழங்­கிய செவ்­வியில் நீங்கள் அதை நிரா­க­ரித்­தி­ருக்­கி­றீர்கள். இவ்­வி­ட­யத்தின் உண்மைத் தன்­மையை தெளி­வு­ப­டுத்த முடி­யுமா?

பதில்: குறித்த வேட்­பா­ளரின் பிர­தி­நி­திகள் சிலர் கடந்த ஆகஸ்ட் மாதம் என்னை சந்­தி­த்திருந்­தார்கள். அதன் போது வேட்­பாளர் தனது வெளி­நாட்டு பிர­ஜா­வு­ரி­மையை நீக்­கி­விட்டார் எனக் கூறி சில ஆவ­ணங்­களை காண்­பித்­தார்கள். அதனை நானும் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் சக உறுப்­பி­னர்­களும் பார்­வை­யிட்டோம். அதன் பின்னர் அந்த ஆவ­ணங்­களை அவர்­க­ளி­டமே கைய­ளித்­து­விட்டோம். அவற்றைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான அல்­லது அதன் உண்மைத் தன்­மையை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான தேவையோ தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்கு கிடை­யாது. காரணம் அர­சி­ய­ல­மைப்பில் ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­வ­தற்­கான உறுப்­பு­ரையில் இவ்­வி­டயம் தொடர்பில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. நாம் அர­சி­ய­ல­மைப்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்­களில் மாத்­தி­ரமே கவனம் செலுத்­துவோம்.

மேலும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட விரும்பும் வேட்­பாளர் ஒரு­வரின் வேட்­பு­மனு நிரா­க­ரிக்­கப்­ப­டு­வ­தற்­கான கார­ணங்கள் அர­சி­ய­ல­மைப்பில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றன. அவற்றில் தற்­போது குறித்த வேட்­பா­ள­ருக்கு காணப்­படும் குடி­யு­ரிமை விவ­காரம் தொடர்பில் எதுவும் கூறப்­ப­ட­வில்லை.

கேள்வி: நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக விரும்பும் வேட்­பா­ளரின் தகு­திகள் பற்றி தேர்­தல்கள் ஆணைக்­குழு ஆராய வேண்­டிய தேவை இல்­லையா?

பதில்: அவ்­வாறு கூற முடி­யாது. காரணம் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பாளர் ஒரு­வ­ருக்கு இருக்க வேண்­டிய தகு­திகள் எவை என்­பன பற்­றியும் அவற்றை யார் உறு­திப்­ப­டுத்த வேண்டும் என்­பது பற்­றியும் தேர்­தல்கள் ஆணைக்­குழு உரிய தரப்­பி­ன­ருக்கு அறி­வித்­துள்­ளது. அதற்­க­மைய வேட்­பா­ள­ருக்கு இருக்க வேண்­டிய தகு­திகள் பற்றி அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட கட்­சி­யொன்றின் செய­லா­ளரே ஆணைக்­கு­ழு­வுக்கு உறு­திப்­ப­டுத்த வேண்டும். அது எமது கட­மை­யல்ல.

கேள்வி: அவ்­வா­றெனில் தேர்­தலில் குறித்த சர்ச்­சைக்­கு­ரிய வேட்­பாளர் வெற்றி பெறும் பட்­சத்தில், அதன் பின்னர் அவர் தனது வெளி­நாட்டு குடி­யு­ரி­மையை நீக்கிக் கொள்­ள­வில்லை என்­பது தெரி­ய­வந்தால் எடுக்­கப்­பட வேண்­டிய நட­வ­டிக்கை என்ன?

பதில்: அந்த வேட்­பா­ள­ரு­டைய வெற்றி நிரா­க­ரிக்­கப்­படும்.

கேள்வி: அப்­ப­டி­யானால் மீண்டும் தேர்தல் நடத்­தப்­ப­டுமா? 

பதில்: அதனை அர­சி­ய­ல­மைப்பை அடிப்­ப­டை­யாகக் கொண்டே அறி­விக்க முடியும்.

இதே­வேளை, தேர்தல் ஏற்­பா­டுகள் குறித்தும் சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய இங்கு கருத்து வெளி­யிட்டார். அவர் தொடர்ந்து கூறு­கையில், சர்­வ­தேச வன்­மு­றைகள் அற்ற தின­மான நவம்பர் 16 ஆம் திகதி சனிக்­கி­ழமை ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­களும் நிறைவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன. ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­காக சுமார் 750 கோடி செல­வி­டப்­பட்­டுள்­ளது.

ஊட­கங்கள் மீது விசனம்

மிக அதி­க­ள­வாக ஊட­கங்கள் பக்­கச்­சார்­பாக செயற்­பட்ட தேர்தல் இது­வாகும். சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் அறி­விப்­புக்கு அமைய பக்கச் சார்­பின்றி செயற்­பட்ட ஊட­கங்­க­ளுக்கு நன்றி தெரி­வித்துக் கொள்­கின்றோம். எனினும் அரச ஊட­கங்கள் உட்­பட ஏனைய பிர­தான ஊட­கங்கள் வெளிப்­ப­டை­யா­கவே குறிப்­பிட்ட வேட்­பா­ளர்­க­ளுக்கு சார்­பா­கவே செயற்­ப­டு­கின்­றன. இவ்­வாறு பக்கச் சார்­பாக செயற்­பட்ட ஊட­கங்கள் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவால் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளன.

இவ்­வாறு இனங்­கா­ணப்­பட்­டுள்ள இரு பிர­தான ஊட­கங்­க­ளுக்கு எதி­ராக தேர்தல் நிறை­வ­டைந்­ததன் பின்னர் நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­யப்­படும். சில சந்­தர்ப்­பங்­களில் அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்­துக்கு இவை தொடர்பில் அறி­வித்து அவற்­றுக்கு தேர்தல் முடி­வு­களை அனுப்­பாமல் இருப்­ப­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். மேலும் கட்சி அல்­லது பிர­தான வேட்­பாளர் தொடர்­பான பாடல்­க­ளையும் ஒலி, ஒளி­ப­ரப்­பப்­படக் கூடாது.

அச்சு ஊட­கங்கள்

இன்று (நேற்று) நடை­பெற்ற அர­சியல் கட்­சி­களின் கூட்­டங்கள் தொடர்­பான செய்­தி­களை நாளை (இன்று) மாத்­தி­ரமே பிர­சு­ரிக்க முடியும். மேலும் விளம்­ப­ரங்கள் அனைத்தும் தவிர்க்­கப்­பட வேண்டும்.

தனியார் வகுப்­புக்கள் மீது முறைப்­பாடு

சில பிர­தே­சங்­களில் நடத்­தப்­படும் தனியார் வகுப்­புக்­களில் குறிப்­பிட்ட வேட்­பா­ளர்­க­ளுக்கு வாக்­க­ளிக்­கு­மாறு ஆசி­ரி­யர்கள் மாண­வர்­க­ளிடம் கூறி­ய­தாக குரல் ஆத­ரத்­துடன் பல முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­றுள்­ளன. இது மிகவும் கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். இவ்­வாறு செயற்­பட்ட ஆசி­ரி­யர்­க­ளுக்கு எதி­ரா­கவும் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

மத­கு­ரு­மார்கள் மீது நட­வ­டிக்கை

செவ்­வாய்க்­கி­ழமை போயா தினத்­தன்று சில மத­கு­ரு­மார்கள் சமய வழி­பா­டு­களின் பின்னர் செய்­கின்ற உப­தே­சத்தில் அர­சியல் பேசி­ய­தா­கவும், குறிப்­பிட்ட வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிக்­கு­மாறு கோரி­ய­தா­கவும் தக­வல்கள் கிடைக்கப் பெற்­றுள்­ளன. இவ்­வாறு மதங்­களை வைத்து அர­சியல் செய்­வது ஏற்றுக் கொள்ள முடி­யா­த­தாகும். எனினும் மத­கு­ருமார் மீது நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு தேர்­தல்கள் ஆணைக்­குழு விரும்­ப­வில்லை என்­பதால் அந்த பொறுப்பு பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

எனினும், இம்­முறை இவ்­வா­றான முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­றி­ருந்த போதிலும் பல வன்­முறைச் சம்­ப­வங்கள் பதி­வா­கி­யி­ருந்த போதிலும் எவ்­வித கொலை சம்­ப­வங்­களும் பதி­வா­க­வில்லை என்­பது சுட்­டிக்­காட்ட வேண்­டிய விட­ய­மாகும்.

கட்சி காரி­யா­ல­யங்கள் மூடப்­பட வேண்டும்

தேர்தல் தொகு­தி­களில் வழ­மை­யாக செயற்­படும் கட்சிக் காரி­யா­ல­யங்­களைத் தவிர தொகு­திகள், கிரா­மங்­களில் அமைக்­கப்­பட்­டி­ருக்கும் காரி­யா­ல­யங்கள் அனைத்தும் வெள்­ளிக்­கி­ழமை மூடப்­பட வேண்டும். இவ்­வா­றான காரி­யா­ல­யங்­களில் வைக்­கப்­பட்­டி­ருக்கும் பதா­தைகள் , ஒட்­டப்­பட்­டி­ருக்கும் சுவ­ரொட்­டிகள் என்­பன இன்­றைய தினம் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

மேலும் ஏதே­னு­மொரு பிர­தே­சத்தில் வாக்­க­ளிப்பு நிலை­ய­மொன்­றி­லி­ருந்து 500 மீற்றர் தூரத்­துக்கு அருகில் வாக்­க­ளிப்பு நிலை­ய­மொன்று அமைந்­தி­ருந்தால் குறித்த தொகுதி காரி­யா­ல­யமும் மூடப்­பட வேண்டும்.

தேர்தல் பணிக்கு வருகை தராதோர் மீது நட­வ­டிக்கை

முறை­யான கார­ணங்கள் இன்றி தேர்தல் பணியில் இணைத்துக் கொள்­ளப்­பட்­டுள்ள அரச அதி­கா­ரிகள் பணிக்கு சமு­க­ம­ளிக்­கா­விட்டால் அவர்கள் மீதும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். இவ்­வா­றான அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். இவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் அப­ராதம் மற்றும் கூடி­யது 3 வருட சிறைத் தண்­டனை வழங்­கப்­படும்.

வெளி­நாட்டு  கண்­கா­ணிப்­பா­ளர்கள் வருகை

தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் அழைப்­பிற்­கேற்ப வெளி­நாட்­டி­லி­ருந்து கண்­கா­ணிப்­பா­ளர்கள் வருகை தந்திருக்கிறார்கள். உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்ட 12 பேரில் 8 பேர் வரை இது வரையில் வருகை தந்திருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து நால்வரும், மாலைதீவி லிருந்து மூவரும், இந்தோனேஷியாவிலிருந்து இருவரும், தென்னா பிரிக்காவிலிருந்து ஒருவரும் வருகை தந்திருக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய அமைப்புக்களிலிருந்தும் மேலும் பல கண்காணிப்பாளர்கள் வருகை தரவிருக்கின்றனர்.

சமூக வலைத்தளங்களிலும் விளம்பரங்கள் நீக்கப்பட வேண்டும்
சமூக வலைத்தளங்களில் சில பக்கங்களில் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. அந்த விளம்பரங்களும் நீக்கப்பட வேண்டும். பேஸ் புக் அல்லது யூடியூப் உள்ளிட்ட ஏனைய சமூக வலைத்தளங்களில் கட்சி அல்லது வேட்பாளர் தொடர்பான சிறு காணொலிகளும் ஒளிபரப்பப்படுகின்றன. அவற்றையும் நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆணைக்குழு கோரிக்கை விடுக்கிறது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.