கொள்கை ரீதியில் மஹிந்த அரசைவிட நல்லாட்சி அரசு முஸ்லிம்களுக்கு சாதகமாக இருந்தது சஜித் ஜனாதிபதியானால் கசப்பான சம்பவங்களுக்கு இடமளிக்கமாட்டார்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்.

0 1,607

தேர்­த­லுக்கு இன்னும் மூன்று நாட்கள் மாத்­தி­ரம்தான் இருக்­கின்­றன. இந்­நி­லையில் புதிய ஜன­நா­யக முன்­னணி சார்பில் அன்னம் சின்­னத்தில் போட்­டி­யிடும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­தித்­த­லைவர் சஜித் பிரே­ம­தா­சவின் வெற்றி வாய்ப்­புகள் எப்­படி இருக்­கின்­றன?

உண்­மையை கூற­வேண்­டு­மென்றால் சஜித் பிரே­ம­தாச ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்ட பின்னர் நாம் பிர­சா­ரத்தை ஆரம்­பிக்­கும்­போது எமக்கு இந்தப் பயணம் மிகவும் சவா­லா­கவே காணப்­பட்­டது. அதுவும் உயிர்த்த ஞாயிறு தாக்கு­த­லின்பின் பெரும்­பான்மை மக்கள் மத்­தியில் இன­வாதம் பரப்­பப்பட்­டது. அதைத் தொடர்ந்து நாட்டின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த கோத்­தா­பய ராஜபக் ஷவே பொருத்­த­மா­னவர் என்ற மன­நி­லையை பெரும்­பான்மை சமூகம் மத்­தியில் அவர்கள் விதைக்க அவர்கள் பாரிய இன­வாத பிரச்­சா­ரங்­களை முன்­னெ­டுத்­தனர்.

ஆனால் இந்த தடைகள் அனைத்­தையும் தகர்த்­தெ­றி­யு­மு­க­மாக சஜித் பிரே­ம­தாச நாடு முழு­வதும் மேற்­கொண்ட பிர­சா­ரங்கள் எமக்கு பாரிய வெற்­றி­ய­ளித்­துள்­ளன. குறிப்­பாக சொல்ல வேண்­டு­மானால் பெரும்­பான்மை அடி­மட்ட மக்கள் மத்­தியில் இந்தப் பிர­சாரம் பாரிய மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இதனால் நாம் தேர்தல் பிர­சா­ரத்தை ஆரம்­பிக்­கும்­போது இருந்­த­தை­விட எமக்கு ஏழு தொடக்கம் பத்து சத­வீத வாக்­குகள் அதி­க­ரித்­துள்­ளன.

அத்­துடன் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா பாது­காப்பு அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­ப­டு­வா­ரென அறி­விக்­கப்­பட்­டமை, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னால் கோத்­தா­ப­யவே உள்­ள­தாக தற்­போது பர­வ­லாக பேசப்­ப­டு­கின்­றமை, ரதன தேரர், ஹிஸ்­புல்லாஹ், ராசிக் போன்றோர் ஒரே அணியில் இருக்­கின்­றமை போன்­றன அவர்கள் மேற்­கொண்ட இன­வாத பிர­சா­ரத்தின் தாக்­கங்­களை குறைத்­துள்­ளன,

அது­போன்று கோத்­தா­பய ராஜபக் ஷவின் செய்­தி­யாளர் சந்­திப்பை அடுத்து அவர்­மீது பெரும்­பான்மை மக்கள் கொண்­டி­ருந்த மாயை தகர்க்­கப்­ப­ட்டுள்­ளது. மேலும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க உள்­ளிட்ட சுதந்­திரக் கட்சி செயற்­பாட்­டா­ளர்­களின் இணைவு ஆகி­யன சஜித் பிரே­ம­தா­சவின் வாக்கு வங்­கியில் பாரிய அதி­க­ரிப்பை உண்­டு­பண்­ணி­யுள்­ளது.
எனவே, தற்­போ­துள்ள சூழ்­நி­லையில் சஜித் பிரேம­தா­சவே முன்­னி­லையில் உள்ளார்.

சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களை நம்­பி­யி­ருக்கும் ஐக்­கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் சிங்­கள மக்­களின் வாக்­கு­களை பெறத் தவறி வரு­கின்­றது. இம்­முறை புதிய தலை­மை­யொன்றை கள­மி­றக்­கி­ய­மையால் சிங்­கள வாக்­காளர் மத்­தியில் மாற்­றங்கள் ஏதும் நிகழ வாய்ப்­பி­ருக்­கி­றதா?

ஆம், நிச்­ச­ய­மாக நான் மேலே குறிப்­பிட்­டது போன்று சஜித் பிரே­ம­தாச மேற்­கொண்ட தேர்தல் பிர­சா­ரங்கள் மூலம் இப்­பொ­ழுதே பெரும்பான்மை வாக்­குகள் ஏழு தொடக்கம் பத்து வீதம் அதி­க­ரித்­துள்­ளன.

அவரின் பிர­சா­ரங்கள் அடி­மட்ட சிங்­கள மக்கள் மத்­தியில் பாரிய மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. அதை நீங்கள் தேர்தல் முடி­வுகள் வெளி­வ­ரும்­போது உணர்­வீர்கள்.

அத்­துடன் சஜித் பிரே­ம­தாச ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வு­செய்­ய­ப்பட்ட பின் அவரின் தந்­தை­போன்று அவரும் பெரும்­பான்­மை­யினர் மதிக்கும் ஜன­ரஞ்­சகம் மிக்க தலை­வ­ராக உரு­வெ­டுப்பார். இது ஐக்­கிய தேசியக் கட்­சியின் பெரும்­பான்மை வாக்கு வங்­கியில் பாரிய அதி­க­ரிப்பை ஏற்­ப­டுத்தும்.

அது சஜித் பிரே­ம­தா­சவின் வெற்­றி­வாய்ப்பை இல­கு­ப­டுத்­து­மென எதிர்­பார்க்­கி­றீர்­களா?

நிச்­ச­ய­மாக. சிறு­பான்­மை­யி­னரின் எண்­பது சத­வீ­தத்­துக்கு மேற்­பட்ட வாக்­கு­களை பெற்­றுக்­கொள்­ள­வுள்ள சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு பெரும்­பான்மை வாக்கு வங்­கியில் ஏற்­படும் அதி­க­ரிப்­பா­னது அவ­ருக்கு கிடைக்கும் வெற்றி வீதத்தை மேலும் அதி­க­ரிக்கும்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் மீதும் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீதும் அதி­ருப்­தி­யி­ருப்­பதால் இம்­முறை முஸ்லிம், தமிழ் மக்கள் மத்­தியில் செல்­வாக்கு குறை­வ­டைந்­தி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கின்­றது. இதனை நீங்கள் எப்­படி நோக்­கு­கின்­றீர்கள்?

ஆட்­சி­யி­லுள்ள அரசின் மீது பொது­மக்­க­ளுக்கு அதி­ருப்தி ஏற்­ப­டு­வது வழ­மையே. ஆனால் சிறு­பான்­மை­யினர் மத்­தியில் குறிப்­பாக, முஸ்லிம் மக்கள் மத்­தியில் அதி­ருப்­தி­யேற்­படக் காரணம் திகன, குரு­நாகல், மினு­வாங்­கொ­டையில் ஏற்­பட்ட கல­வ­ரங்­க­ளின்­போது அதைக் கட்­டு­ப்ப­டுத்த அரசு தவ­றி­ய­மை­யாகும்.

ஆனால், இந்த தாக்­கு­தல்­களின் சூத்­தி­ர­தா­ரிகள் ராஜபக் ஷ சகோ­த­ரர்கள் என்­பதை மக்கள் அறிந்­துள்­ளார்கள். அத்­துடன் மைத்­தி­ரி­பால சிறி­சேன, சஜித் போன்­ற­வர்­க­ளல்ல என்­பதை மக்கள் அறி­வார்கள். ஆகவே சஜித்தின் ஆட்­சியில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் ஏற்­பட அவர் இட­ம­ளிக்­க­மாட்­டா­ரென நான் நம்­பு­கிறேன். மக்­களும் அதை நம்­பு­வார்கள் என நினைக்­கிறேன்.

இந்த தாக்­கு­தலை கட்­டு­ப­டுத்த எமது அர­சாங்கம் உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை என்­ப­தை­விட இந்த தாக்­கு­தலை மேற்­கொண்­ட­வர்­களை தோற்­க­டிக்க வேண்டும் என்­பதில் மக்கள் உறு­தி­யாக உள்­ளார்கள். எனவே, கடந்த முறை மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அளிக்­கப்­பட்ட வாக்­கு­க­ளை­விட இம்­முறை சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு அதி­க­மான சிறு­பான்மை வாக்­குகள் கிடைக்கும்.

பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வம்­கொண்ட சிறு­பான்மை கட்­சி­களின் முழு­மை­யான ஆத­ரவு ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு இருக்­கி­றது. எனினும், கடந்த கால தாக்­கு­தல்கள் மற்றும் வன்­மு­றை­களை மையப்­ப­டுத்தி முஸ்­லிம்கள் அநு­ர­கு­மார திசா­நா­யக்க, கோத்­தா­பய ராஜபக் ஷ போன்ற வேட்­பா­ளர்கள் பக்கம் நகர்­வதை அவ­தா­னிக்க முடி­கி­றதே?

இந்த தாக்­கு­தலை காரணம் காட்டி முஸ்­லிம்கள் கோத்­தாவின் பக்கம் செல்­வார்கள் என நம்­ப­வில்லை.
ஏனெனில், அந்த தாக்­கு­தல்­களின் சூத்­தி­ர­தா­ரிகள் ராஜபக் ஷவி­னரே என்­பதை முழு முஸ்லிம் சமூ­கமும் அறியும்.ஆனால், மிகவும் குறைந்­த­ளவு வாக்­குகள் அநு­ர­கு­மா­ரவின் பக்கம் செல்­லலாம்.

ஆனால் அநு­ர­கு­மா­ரவின் பெரும்­பான்மை வாக்­கு­களில் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு செல்­ல­வுள்ள வாக்­கு­களை பிரிப்­பதால் முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து அவ­ருக்கு செல்லும் சொற்­ப­ள­வி­லான வாக்­குகள் எமது வெற்­றியில் தாக்கம் செலுத்­தா­தென நினைக்­கிறேன்.

நல்­லாட்சி அர­சாங்கம் இருந்­த­போது முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இந்த தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில் பொது­ஜன பெர­மு­ன­வினர் இருப்­ப­தாக குற்றம் சாட்­டப்­ப­டு­கின்­றது. எனினும், இந்த தாக்­கு­தல்கள் இடம்­பெற்­ற­போது நல்­லாட்சி அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­காது வேடிக்கை பார்­த்த­தாகக் குற்றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில், சஜித் பிரே­ம­தா­சவின் ஆட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டாது என எப்­படி நம்­பலாம்?

நான் அதை முழு­மை­யாக நம்­பு­கிறேன். நான் அர­சியல் வாழ்வை ஆரம்­பித்த ஒன்­பது வரு­டங்­க­ளாக அவ­ருடன் இணைந்து அர­சியல் செய்­துள்ளேன். நான் பார்த்­ததில் அவர் ஒரு சிறந்த பௌத்தர். அனைத்து மதங்­க­ளையும் சம­மாக மதிக்­கின்­றவர். இன­வாதம், மத­வாதம் போன்­ற­வற்றில் நம்­பிக்கை இல்­லா­தவர். அவரின் முழு­மை­யான நோக்­கமும் வறுமை ஒழிப்பே.

இந்த இன­வாதத் தாக்­கு­தல்கள் அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக செய்­யப்­பட்­டவை என்­பது அனை­வ­ருக்கும் தெரியும். இந்த தேர்­தலில் கோத்­தா­பய ராஜபக் ஷ தோல்­வி­யுற்றால் இலங்­கையில் இன­வாதம் மூலம் அர­சி­யலை மேற்­கொண்டு வெற்­றி­பெ­ற­மு­டி­யாது என்ற செய்தி உல­குக்கு சொல்­லப்­படும். கோத்தாப­யவின் தோல்வி என்­பது இன­வா­தத்­துக்கு கிடைத்த தோல்­வி­யாகக் கரு­தப்­படும். அதன்பின் யாரும் தேர்­தலில் வெற்­றி­பெற இன­வா­தத்தை கையி­லெ­டுக்க மாட்­டார்கள்.

நீங்கள் மேலே குறிப்­பிட்ட தாக்கு­தல்­க­ளின்­போது அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. ஆனால் அதை கட்­டு­ப்ப­டுத்த விரை­வாக நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. அளுத்­கம கல­வ­ரத்தை மேற்­கொண்டோர் யாரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை. ஆனால் திகன, மினு­வாங்­கொடை கல­வ­ரத்தில் ஈடு­பட்டோர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இந்தக் கல­வ­ரத்தை கட்­டு­ப்ப­டுத்த அர­சாங்கம் விரை­வாக நட­வ­டிக்கை மேற்­கொள்­ளா­த­தற்கு முழுப் பொறுப்­பையும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே ஏற்க வேண்டும். பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்த அவர் இதற்­கான நட­வ­டிக்கை எடுப்­பதில் அச­மந்­த­மாக இருந்தார் என்­பதே உண்மை.

கொள்­கை­ரீ­தி­யாக மஹிந்த அர­சை­விட நல்­லாட்சி அரசு முஸ்­லிம்­க­ளுக்கு சாத­க­மா­கவே இருந்­தது. மஹிந்த ராஜபக் ஷ பீ.பீ.சீ. நேர்­கா­ணலின் போது அளுத்­கம கல­வ­ரங்­க­ளுக்­கான பொறுப்பை முஸ்­லிம்கள் மீதே சாட்டும் வகையில் பேட்­டி­ய­ளித்தார்.

ஆனால் நல்­லாட்சி அர­சாங்­கத்­தின்­போது அதி­லி­ருந்த சம்­பிக ரண­வக கூட அவ்­வாறு முழுப் பொறுப்­பையும் முஸ்­லிம்கள் மீது சாட்டும் வகையில் கருத்து வெளி­யி­ட­வில்லை.

ஆகவே, சஜித் பிரே­ம­தாச போன்று தைரி­ய­மாக முடி­வெ­டுக்கும் ஒருவர் ஜனா­தி­ப­தி­யா­கும்­போது இந்த கசப்­பான சம்­ப­வங்கள் நடை­பெற இட­ம­ளிக்­க­மாட்டார்.

தீர்க்­கப்­ப­டாத முஸ்லிம் சமூகப் பிரச்­சி­னைகள் பல­வற்­றிற்கு தீர்வைப் பெற்­றுத்­த­ரு­வ­தாக சஜித் பிரே­ம­தாச வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருக்­கிறார். குறிப்­பாக, சாய்ந்­த­ம­ருது உள்­ளூ­ராட்சி மன்ற கோரிக்கை, ஒலுவில் துறை­முக விவ­காரம் குறித்த பிரச்­சி­னைகள், நுரைச்­சோலை வீட்­டுத்­திட்டம், அரு­வாக்­காலு திண்­மக்­க­ழிவு சர்ச்சை அத்­துடன், தொல்­பொருள் திணைக்­க­ளத்­துடன் தொடர்­பு­டைய காணிப்­பி­ரச்­சி­னைகள் என வாக்­கு­று­திப்­பட்­டியல் நீண்­டு­கொண்டே செல்­கி­றது. இவற்­றிற்கு தீர்வு கிட்­டு­மென எதிர்­பார்க்க முடி­யுமா?

சஜித் பிரே­ம­தா­சவின் கடந்­த­கால வர­லாற்றை எடுத்து நோக்­கினால் அவர் சொல்வதை செய்பவர். இருந்தும் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா இல்லையா என்பதற்கு காலமே பதில் சொல்லும். ஆனால் முன்னைய ஆட்சியாளர்கள் இந்தப் பிரச்சினைகளை கையாண்டதைவிட சஜித் பிரேமதாச இவற்றைத் திறம்படக் கையாள்வார் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

கடந்த தேர்தலின்போதும் முஸ்லிம்களின் உரிமைகள், பாதுகாப்பு என்பவற்றை கருத்திற்கொண்டே மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தனர். இந்த தேர்தலிலும் துரதிஷ்டவசமாக தீர்க்கப்படாத அந்தப் பிரச்சினைகள் மேலும் தீவிரமடைந்திருக்கின்றன. இம்முறையாவது முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு, உரிமைகள் நிலைநாட்டப்படும் என எதிர்பார்க்கலாமா?

ஆம், நான் மேலே குறிப்பிட்டது போன்று சஜித் ஒரு சிறந்த பௌத்தர். அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கின்றவர்.

இனவாதம், மதவாதம் போன்றவற்றில் நம்பிக்கையில்லாதவர். அவர் ஒரு காலத்திலும் இனவாதத்தை கையிலெடுக்க மாட்டார். இனவாத நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிக்கமாட்டார்.

ஆகவே, சஜித்தின் ஆட்சியில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து இனத்தவர்களின் உரிமை, பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என நான் நம்புகிறேன்.-Vidivelli

  • நேர்­காணல்:
    எஸ்.என்.எம்.ஸுஹைல்

Leave A Reply

Your email address will not be published.