ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவியிலிருந்தும் ஓய்வு பெற்றுச் செல்ல சில தினங்கள் இருக்கும் நிலையில் ‘ரோயல் பார்க்’ கொலைக் குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கியமைக்கு பலதரப்புகளிலிருந்தும் கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஜனாதிபதியின் தீர்மானம் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
ராஜகிரிய ரோயல் பார்க் சொகுசு குடியிருப்புத் தொகுதியின் படிக்கட்டுகளில் வைத்து 2005 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 30 ஆம் திகதி சுவீடன் பிரஜையான 19 வயதான இவொன் ஜொன்சன் எனும் யுவதி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொடூர கொலை தொடர்பில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இருவேறு ஜனாதிபதி மன்னிப்புகளின் அடிப்படையில் கடந்த 10 ஆம் திகதி அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட யுவதி ஜயமஹவின் காதலியான கரோவின் சகோதரியாவார். நாட்டில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய இந்தக் கொலையைப் புரிந்த நபருக்கு 14 வருடங்களின் பின்பு ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்டு குருவிட்ட சிறைச்சாலையிலிருந்தும் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட போது வயது 19. அவரது 34 வயதில் மன்னிப்பின் கீழ் விடுதலை வழங்கப்பட்டுள்ளது.
ஜயமஹவை குற்றவாளியாகக் கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு 2012 இல் 12 வருட கடூழியச் சிறையும், 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. ஜயமஹ தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தார். வழங்கப்பட்ட தண்டனை போதுமானதாக இல்லை என சட்டமா அதிபரும் மேன்முறையீடு செய்திருந்தார். மேன்முறையீட்டு நீதிமன்றம் ஜயமஹவின் மனுவை நிராகரித்து சட்டமா அதிபரின் மேன்முறையீட்டினை ஏற்று அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. அத்தோடு மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கு எதிராக அவர் உயர்நீதிமன்றுக்கு செய்த விஷேட மேன்முறையீடும் உயர் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் விஷேட பொது மன்னிப்பின் கீழ் இவரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையிலே ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் தற்போது அவர் விடுதலையாகியிருக்கிறார்.
ஜயமஹ இவோனை குடியிருப்புத் தொகுதியின் 23 ஆம் மாடியிலிருந்து துரத்திச் சென்று 20 ஆவது மாடியின் படிக்கட்டுகளில் வைத்து அவரைக் கொலை செய்துள்ளார். இவோனின் தலையை படிக்கட்டுகளில் மோதியுள்ளார். இதனால் இவோனின் மண்டை ஓடு 64 இடங்களில் நொறுங்கியுள்ளதாக நீதிமன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட குரூர கொலையாளியை மன்னித்த ஜனாதிபதியின் இத்தீர்மானத்திற்கு பல தரப்புகளிலிருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மரண தண்டனைக் கைதி விடுதலை செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டித்துள்ளார். ‘ஒரு கையெழுத்தின் மூலம் விடுதலை செய்வது துன்பகரமான செயல், பிழையான முன்மாதிரி’ என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
‘மன்னிப்பு வழங்கியமைக்கு காரணம் பணப் பரிமாற்றமா? ராஜபக் ஷாக்களுக்கு நன்றிக் கடனா? அல்லது அவர் ஜனாதிபதியின் உறவினரா?’ என பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க சபையில் கேள்வி எழுப்பியுள்ளார். பொது மன்னிப்பு வழங்க தகுதியானவர்கள் பலர் சிறையில் உள்ளனர். தூக்குத் தண்டனையை அமுல்படுத்துவதாக வீர வசனம் பேசிய ஜனாதிபதியா இவ்வாறான கொலையாளிக்கு விடுதலை வழங்கியுள்ளார்? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
அரசியலமைப்பின் 34 (1) உறுப்புரைக்கமைய இலங்கையில் எந்தவொரு நீதிமன்றினாலும் குற்றவாளியாகக் காணப்படும் ஒருவருக்கு மன்னிப்பளிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குள்ளது என்றாலும் மரண தண்டனை கைதியொருவருக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்க முடியுமா? என்பது குறித்து அரசியலமைப்பின் 34 (ஈ) உறுப்புரைக்கு அமைய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி அவ்வாறான குற்றவாளி ஒருவரை விடுவிப்பதற்கு முன்னர் குறித்த வழக்கை விசாரித்த நீதிபதியிடமிருந்து அறிக்கை பெறவேண்டும். அவ்வறிக்கை ஜனாதிபதிக்கு கிடைத்த பின்னர் அது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்விதிகள் பின்பற்றப்படவில்லை என்றே தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு ஜயமஹவின் விடுதலையை நியாயப்படுத்தியுள்ளது. மதத் தலைவர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், சட்டத்தரணிகள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் எழுத்து மூல கோரிக்கைகளை கருத்திற் கொண்டே ஜயமஹவுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவதற்கு தகுதியானவர்கள் நூற்றுக்கணக்கில் சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் ஜனாதிபதி தனது பதவியின் இறுதிக் காலத்தில் கொடூர கொலையாளி ஒருவருக்கு மன்னிப்பு வழங்கியமை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததும் கண்டிக்கத்தக்கதுமாகும்.-Vidivelli