பல தசாப்தங்களாக இந்த நாட்டில் கட்டமைக்கப்பட்டு வந்த ஜனநாயக விழுமியங்களை புதிய ஜனாதிபதி நிலைநிறுத்துவார் என்பதே எமது நேர்மையான எதிர்பார்ப்பு என முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அதன் தலைவர் என்.எம். அமீன் மற்றும் செயலாளர் எஸ்.ஏ. அஸ்கர்கான் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சம்பந்தப்பட்ட அனைவரின் ஒத்துழைப்புடனும் அமைதியான ஒரு தேர்தலை நடத்துவதற்கு நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
பல தசாப்தங்களாக இந்த நாட்டில் கட்டமைக்கப்பட்டு வந்த ஜனநாயக விழுமியங்களை புதிய ஜனாதிபதி நிலைநிறுத்துவார் என்பது எங்கள் உண்மையான விருப்பமாக காணப்படுகின்றது. அனைத்து கட்சிகளும், வேட்பாளர்களும் சட்டத்தின் ஆதிபத்தியத்தை எற்றுக் கொண்டுள்ளதனாலும் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகளின் அடிப்படையில் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படுவதை புதிய அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
இலங்கை பல வளங்கள் கிடைக்கப்பெற்ற ஒரு நாடாகும். இருப்பினும், அரசியல் நன்மைகளை மதிப்பிடும் ஒரு கலாசாரத்தின் காரணமாக நமது உண்மையான இலக்கினை அடைவதில் தடைகளை எதிர்கொள்கிறோம். இது தேசத்தின் முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக இருந்து வருகின்றது. இலங்கையர்களான நாங்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து புதிய ஜனாதிபதி அனைத்து தடைகளையும் தாண்டி இடைவெளியினை நிரப்புவதற்காக புதிய மாற்றங்களை கொண்டுவருவார் என எதிர்பார்க்கிறோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சோகமான நிகழ்வுகளானது, தீர்க்கப்பட முடியாத சூழ்ச்சிகள், குரோதங்கள் மற்றும் வரலாற்று வன்முறைகள் என்பவற்றினை இதன் பின்விளைவாக உருவாக்கியது. ஒவ்வொரு இலங்கை குடி மகனினதும் நீதி, பாதுகாப்பு மற்றும் கண்ணியம் ஆகியவற்றை நிலைநிறுத்தும் திறன் கொண்ட ஒரு தலைவரே இலங்கைக்கு தேவையாக இருக்கிறது. அவர் குடிமக்கள் அனைவரினதும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடிய ஒருவராகவும் மற்றும் அனைத்து சமூகங்களிடையேயும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதைக்குரிய சூழ்நிலையை உருவாக்கி, ஒன்றாக இணைந்து எல்லோரினதும் கூட்டு நோக்கத்தினை அடைவதற்காக செயற்படக்கூடியவராகவும் செயற்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli