ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தில் இனவாதத்தை ஒழிப்பதாக கோத்தா உறுதியளித்திருக்கிறார்
அக்குறணை பிரதேச சபை தலைவர் இஸ்திஹார்
கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசம் அக்குறணையாகும். அக்குறணையில் உள்ளூராட்சி நிர்வாகம் அக்குறணை பிரதேச சபையினாலேயே முன்னெடுக்கப்படுகிறது.
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் அக்குறணை பிரதேச சபைக்கென ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பு (PMJD) ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.
30 உறுப்பினர்களைக் கொண்ட அக்குறணை பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள் இவ்வாறு அமைந்தன.
ஐக்கிய தேசியக் கட்சி 12
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 7
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 4
பிஎம்ஜேடி 4
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 3
இந்நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், பிஎம்ஜேடியும் இணைந்து ஆட்சியமைக்கத் தீர்மானித்தன. மூன்று கட்சிகளும் இணைந்தும் உறுப்பினர் தொகை ஆட்சியமைப்பதற்கு 15 ஆக இருந்தது. இதேவேளை அடுத்த தரப்பு எண்ணிக்கையும் 15 ஆக இருந்தது. எனவே நாணய சுழற்சி மூலமே தற்போதைய அக்குறணை பிரதேச சபை பதவிக்கு வந்தது.
அக்குறணை பிரதேச சபையின் தலைவராக பெரும்பான்மை இன உறுப்பினர்களின் ஆதரவுடன் இஸ்திஹார் இமாதுதீன் நியமிக்கப்பட்டார்.
அக்குறணை பிரதேச சபையின் தலைவர் உட்பட பிஎம்ஜேடி கட்சியினர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷவை ஆதரிக்க தீர்மானித்துள்ளனர். அது தொடர்பில் அக்குறணை பிரதேச சபைத் தலைவர் தனது நேர்காணலின் போது இவ்வாறு தெரிவிக்கிறார்.
Q: உங்கள் தீர்மானம் தொடர்பில் அக்குறணை மக்களின் ஆதரவு இருக்கிறதா?
2018 ஆம் ஆண்டு நான் சுயேச்சையாக அக்குறணை பிரதேச சபைக்குப் போட்டியிட்ட போது எங்களை ஆதரிப்பவர்களை விட எதிர்ப்பவர்களே கூடுதலாக இருந்தார்கள். எங்களுக்கு சுமார் 5 ஆயிரம் பேர் வாக்களித்தார்கள். சபையில் நல்லதோர் பெறுமானத்தை எடுப்பதற்காகவே பொதுஜன பெரமுன அதிகாரத்தைப் பெறுவதற்கு நாம் உதவினோம்.
2011 ஆம் ஆண்டிலிருந்து நான் பிரதேச சபை உறுப்பினராக இருக்கிறேன். அந்தக் காலத்தில் பிஎம்ஜேடியும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் சேர்ந்து களத்தில் இறங்கியிருந்தோம். சுயேச்சையாக முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்திருந்தோம்.
அந்தக் காலத்திலிருந்தே நாங்கள் மாற்றுமத உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பினைப் பேணி வந்தோம். அவர்களுக்கு எம்மீது நம்பிக்கை இருந்தது. இந்த சபையை சிறந்த முறையில் எம்முடன் இணைந்து முன்னெடுக்க முடியும் என்று அவர்கள் நம்பினார்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரும் என்னுடன் பேசினார்கள். எந்தவித நிபந்தனைகளுமின்றி சபையின் தலைமைப் பொறுப்பை எனக்குத் தந்தார்கள். இன்று கோத்தாபய ராஜபக் ஷவை ஆதரிப்பதற்கு நாம் மேற்கொண்ட முடிவு எங்களது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கோ அல்லது தனிப்பட்ட சுய நலன்களுக்கோ அல்ல. முழுக்க முழுக்க முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால நலன்களைக் கருத்திற் கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானமாகும். அக்குறணை மக்கள் எங்கள் தீர்மானத்தை ஆதரிக்கிறார்கள்.
Q: கோத்தாவை ஆதரிக்கும் தீர்மானத்துக்கு பிஎம்ஜேடியின் ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ளதா?
ஆம், இத்தீர்மானம் பிஎம்ஜேடி உயர்பீடத்தில் கலந்துரையாடி மேற்கொள்ளப்பட்டது. நாங்கள் அக்குறணையிலுள்ள சமூக நல இயக்கங்கள், மார்க்க இயக்கங்கள், அரசியல் முதிர்ச்சியுள்ளவர்கள், வழிகாட்டிகளுடன் கலந்துரையாடியே இத்தீர்மானத்தை மேற்கொண்டோம்.
Q: ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஏதும் ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளீர்களா?
ஆம், அவர்களுடன் பலதரப்பட்ட விடயங்களை கலந்துரையாடினோம்.
பிரதேச அரசியல் தலைமைத்துவம் என்ற வகையில் நாம் அவர்களுடன் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம்களிடம் பரவலாக விவாதிக்கப்படுவது இவர்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு உத்தரவு வழங்கப்படுமா என்பதுதான். இது தொடர்பில் நாங்கள் பஷில் ராஜபக் ஷவுடன் கலந்துரையாடியுள்ளோம்.
இன்றைய அரசியலே இனவாதத்துக்கு வித்திட்டுள்ளது என பஷில் ராஜபக் ஷ கூறினார். இந்த அரசியல் மூலமாகவே இனவாதத்தை இல்லாமற் செய்ய வேண்டுமென அவர் கூறினார்.
அன்றைய ஆட்சியில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. கொழும்பு நகரம் பாரிய அபிவிருத்திக்குள்ளானது. அவ்வாறானவர்களால் யுத்தத்தை இல்லாமல் செய்ய முடியாதா! அபிவிருத்திக்கு தடையாக உள்ள இனவாதத்துக்கு தீர்வு வழங்குவதாக கோத்தாபய ராஜபக் ஷ உறுதியளித்திருக்கிறார்.
அக்குறணையின் முக்கிய தேவைகளை நிறைவேற்றித் தரவேண்டும் என்று ஒப்பந்தம் செய்துள்ளோம். கடந்த 25 வருட காலமாக நாம் வெள்ளப்பெருக்குக்கு உட்பட்டு வருகிறோம். அதனைக் கட்டுப்படுத்துவதற்கு உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது. அக்குறணை நகரம் நவீன நகரமாக மாற்றம் செய்யப்படும்.
அக்குறணை சந்தைத் தொகுதியை நவீன சந்தைத் தொகுதியாக நிர்மாணித்துத் தருவதற்கும் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது.
Q:அமைச்சர் ஹலீம் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தார் அல்லவா?
ஆம், அக்குறணையின் வெள்ளப்பெருக்குக்கு தீர்வு காண்பதற்கும் அக்குறணையை நவீன நகரமாக்குவதற்கும் அமைச்சர் ஹலீமினால் கமிட்டி நியமிக்கப்பட்டது. ஆனால் அக்கமிட்டி செயற்படவே இல்லை.
Q: கோத்தாவை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டுமென நீங்கள் கூறும் காரணங்கள் என்ன?
ஒரு கட்சியால் மாத்திரம் நாட்டை முன்னேற்ற முடியாது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரியான தலைமைத்துவம் இருக்க வேண்டும். அப்போதே நாட்டை முன்னேற்ற முடியும். அந்த சரியான தலைமைத்துவ ஆளுமை கோத்தாவிடம் இருக்கிறது.
இலங்கையில் கெரில்லா இயக்கத்தை அழித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பெருமை கோத்தாவுக்கு இருக்கிறது. அவர் சொந்த இராணுவத்தை வைத்தே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். அமெரிக்கா கூட பன்னாட்டுப் படையினர் மூலமே இவ்வாறான கெரில்லா யுத்தங்களை முன்னெடுக்கிறது. யுத்த வெற்றி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாவையே சாரும்.
அவர் ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்தில் இனவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக உறுதியளித்திருக்கிறார். அபிவிருத்திக்கு இடையூறாக உள்ள இனவாதத்தை அனைத்து மக்களின் ஆதரவுடன் இல்லாமற் செய்வார். எனவே முஸ்லிம்கள் அவரை ஆதரிக்க வேண்டும்.
Q: அதிகாரத்தைப் பெறுவதற்கு உங்களுக்கு உதவிய பொதுஜன பெரமுனவுக்கு நன்றிக் கடனா உங்கள் ஆதரவு?
ஆம், இதுவும் ஒரு காரணம்தான். அத்துடன் எமது பிரதேச அபிவிருத்தி, முஸ்லிம்களின் பாதுகாப்பு கருதியே நாம் கோத்தாபயவை ஆதரிக்கின்றோம்.
Q: ஐக்கிய தேசியக் கட்சி அக்குறணைக்கு செய்யாத அபிவிருத்திகளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன செய்யும் எனக் கருதுகிறீர்களா?
அக்குறணையில் ஐக்கிய தேசியக் கட்சியிடம் ஒரு மனப்பான்மை இருக்கிறது. நாம் சேவை செய்தாலும், செய்யாவிட்டாலும் வாக்கு எங்களுக்குத்தான் என்ற மனப்பான்மைதான் அது. எமது சமூகம் ஏதோ ஒரு காரணத்துக்காகவே வாக்களிக்கிறார்கள். இப்போது இங்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தளம்பல் நிலை உருவாகியுள்ளது. இந்நிலை மாகாண சபைத் தேர்தல், பொதுத் தேர்தலிலும் தாக்கத்தைச் செலுத்தும்.
நிச்சயம் பொதுஜன பெரமுன ஐக்கிய தேசியக் கட்சி செய்யாத அபிவிருத்திகளைச் செய்யும். இதற்கு உத்தரவாதமளிக்கின்றோம்.
நாம் ஊரில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். மக்கள் எங்களை எதிர்க்கவில்லை. எமது கருத்துகளை நாம் விளக்கினால் ஆதரிக்கிறார்கள். எங்களைப் புரிந்து கொள்கிறார்கள்.
Q: கோத்தாபயவின் மீது பூரண நம்பிக்கை இருக்கிறதா?
அரசியலில் எமக்கு அவ்வாறு கூற முடியாது. நூற்று நூறு எனக் கூற முடியாது. நல்லதோர் தலைமைத்துவம் வழங்குவாரெனவும், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்குவாரெனவும் நம்பிக்கை இருக்கிறது.
Q: தீர்மானம் மேற்கொள்வதற்கு முன்பு அக்குறணை அரசியல் தலைமைத்துவங்களுடன் பேசினீர்களா?
ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் தலைமைத்துவத்துடன் பேசவில்லை. பிரமுகர்களுடன் பேசினோம். எமது தீர்மானம் தவறானதென எவரும் கூறவில்லை.
ஆனால் சமூக வலைத்தளங்களில் அவ்வாறான கருத்துகள் பதியப்படுகின்றன. வாலிபர்களிடம் கூடிய வரவேற்புள்ளது. காலத்துக்கேற்ற தீர்மானம் என வரவேற்கிறார்கள். ஆரம்பத்தில் எமது தீர்மானம் தொடர்பில் அதிர்ச்சியடைந்ததைத் தெரிவித்த வாலிபர்கள் நாம் தெளிவுபடுத்தியதன் பின்பு ஏற்றுக் கொண்டார்கள்.
Q: உங்கள் எதிர்கால அரசியல் பொதுஜன பெரமுனவுடன்தான் தொடருமா?
நாட்டுக்கும், முஸ்லிம் சமூகத்துக்கும் பயனுள்ளதாக இருக்குமென்றால் அவர்களுடன் தொடர்ந்து பயணிப்பதற்கு ஆட்சேபனையில்லை. எமக்கு நம்பிக்கை இருக்கிறது.
4/21 ஆம் திகதிய தாக்குதல்களின் பின்பு பிஎம்ஜேடி நீண்ட காலம் கலந்துரையாடியது. எமது அரசியல் கொள்கைகள் முன்னெடுப்புகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளது. சில ஒழுங்குமுறைகளை நாம் செய்ய வேண்டியுள்ளது.
ஏப்ரல் 21 இன் பின்பு முஸ்லிம் சமூகத்தின் பயணம் கேள்விக்குறியாக உள்ளது. எமது அரசியல் நகர்வுகளில் நாம் நிதானப் போக்கினை கடைப்பிடிக்கவுள்ளோம்; தீர்மானிக்கவுள்ளோம்.
Q: கோத்தா பொதுபலசேனாவின் ஆதரவாளர் எனக் கூறப்படுகிறதே?
இவ்வாறாக பல குற்றச்சாட்டுகள் கோத்தாவுக்கு மாத்திரமல்ல ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மீதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மீதும் இருக்கின்றன. விமர்சனம் இருக்கிறது. வேடிக்கை என்னவென்றால் இனவாதம் பேசுபவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும் போது அது பூரணமாக மறைக்கப்படுகிறது. நல்லவர்களாகக் காட்டப்படுகிறார்கள். அதே நபர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்தால் இனவாதிகளாகக் காட்டப்படுகிறார்கள். இதனை எமது சமூகம் கண்டு கொள்வதில்லை.
பொதுஜன பெரமுன வேட்பாளர் மீதான குற்றச்சாட்டுகள் முஸ்லிம் சமூகத்தைப் பயமுறுத்தி வாக்குகள் பெற்றுக் கொள்வதற்கானவைகளாகும்.
அக்குறணை பிரதேச சபையை அனைத்து இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் சபையாக மாற்றுவதே எமது இலக்கு. இந்த எமது தீர்மானம் வரலாற்றில் இடம்பெறும்.
எமது சமூகம் உணர்ச்சிவசப்படும் சமூகம். பிரதிபலனை உடனடியாக எதிர்பார்க்கும் சமூகம். பிரதிபலன்களை உடனடியாக எதிர்பார்க்க முடியாது. அதற்கு காலம் தேவை.-Vidivelli
- நேர்காணல் ஏ.ஆர்.ஏ.பரீல்