இலங்கை தமிழரசு கட்சியிடமிருந்து கிடைத்திருக்கும் ஆதரவு சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசாரத்துக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது. சில தமிழ் அரசியல்வாதிகள் பரிந்துரைப்பதைப் போன்று, தமிழ் தேசிய கூட்டமைப்பு நடுநிலையாக இருந்துகொண்டு தமிழ் மக்கள் தாங்கள் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்கலாம் அல்லது தேர்தலில் பங்கேற்காமல் விலகியிருக்கலாம் என்று ஆலோசனை கூறக்கூடிய சாத்தியப்பாடு முனனர் இருந்தது. காணாமல் போனோரைக் கண்டறிவதிலும் குடிமக்களின் காணிகளை திருப்பிக் கையளிப்பதிலும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதை நோக்கி நகர்வதிலும் முன்னேற்றம் இல்லாதிருப்பது குறித்து தமிழச்சமூகம் கடுமையாக கோபமடைந்திருக்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட ஐந்து தமிழ் அரசியல் கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட 13 அம்சக் கோரிக்கைக்கு நேரடியாகப் பதில் தருவதற்கு இரு பிரதான வேட்பாளர்களும் தயாரில்லாமல் இருக்கின்றமை தொடர்பிலும் தமிழ் அரசியல் சமுதாயத்தின் பல பிரிவுகள் மத்தியில் கோபம் இருக்கிறது. ஆனால், அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனங்களை நோக்கினால், அவற்றில் தீர்க்கமான பதிலொன்று இருப்பதை அவதானிக்கமுடியும்.
இலங்கை தமிழரசு கட்சி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.), தமிழ் மக்கள் பேரவை மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகியன தமிழ் மக்களின் முக்கிய கோரிக்கைகளை தெளிவுபடுத்தி மகஜர் ஒன்றில் கைச்சாத்திட்டிருந்தன. சமஷ்டி அடிப்படையிலான அரசியல்தீர்வு, பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழித்தல், தமிழ்த்தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை ஏற்றுக்கொள்தல், இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களை தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்று ரீதியான வாழ்விடமாகவும் பாரம்பரிய தாயகமாகவும் அங்கீகரித்தல், தமிழ் தேசத்தின் இறைமையை ஏற்றுக்கொண்டு சர்வதேச சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதை அங்கீகரித்தல் என்பவை உட்பட 13 கோரிக்கைகள் அந்த மகஜரில் உள்ளடங்கியிருக்கின்றன. இவற்றில் பல கோரிக்கைகள் குறிப்பாக சிங்கள பெரும்பான்மையினத்தவர்களின் வாக்குகள் தீர்க்கமானவையாக அமைகின்ற – நெருக்கமான போட்டியுடைய தேர்தலின் பின்புலத்தில் மிகவும் சர்ச்சைக்குரியவையாகும்.
எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்று தீர்மானத்தை எடுக்கும் விடயத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டு பிரமாணங்களை பயன்படுத்தியிருக்கவேண்டும்.முதலாவது, தேர்தலில் வெற்றிபெறக்கூடிய வாய்ப்பைப் பெருமளவுக்கு கொண்டிருக்கும் கடந்த கால நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வது.கடந்த கால நடவடிக்கைகளும் சிந்தனைகளும் எதிர்காலத்தில் நடக்கக்கூடியவற்றை தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கமுடியும். இரண்டாவது, முன்னணி வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரங்களை நோக்குவதும் இனங்களுக்கிடையிலான உறவுகளைப் பொறுத்தவரை, அவர்களின் வாக்குறுதிகளை மதிப்பிடுவதுமாகும்.
கடந்த ஐந்து வருட காலத்தில், சஜித் பிரேமதாச அமைச்சரவை உறுப்பினராக இருந்துவந்திருக்கும் அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்தைப் பொறுத்தவரை, பெருமளவு உறுதிமொழிகளை வழங்கியிருக்கிறது. உள்நாட்டுப்போருக்கான காரணங்களை கவனத்திற்கெடுத்து பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையில் இனநெருக்கடிக்குத் தீர்வுகாணக்கூடிய புதிய அரசியலமைப்பும் அந்த உறுதிமொழிகளில் அடங்கும். கடந்த காலங்களில் நடந்தவைக்கு பொறுப்புக்கூறுவதுடன் இழப்புக்களை சந்தித்தவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதாகவும் அரசாங்கம் உறுதியளித்தது. ஆனால், அரசாங்கத்தின் செயற்பாடுகள் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் குறைவானதாகவே இருந்தன. அதன் விளைவாக, அரசாங்கத்துக்கு ஆதரவாக இருந்துவந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்க ஆரம்பித்தது. என்றாலும், கடந்த ஐந்து வருடகாலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் அரசாங்கம் பற்றிய பயம் கணிசமானளவுக்கு குறைந்திருந்தது.
மறுபுறத்தில், கோத்தாபய ராஜபக் ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த அரசாங்கம் போரை முழுவீச்சில் முன்னெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. பிரதானமாக தமிழ்ப்பகுதிகளில் இடம்பெற்ற போர் அங்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்தியது. போரின் இறுதியில், அப்போது பதவியிலிருந்த அரசாங்கம் பரந்தளவிலான தேசிய பாதுகாப்பு கட்டமைப்புக்குள் அரசியல் உரிமைகளையும் விட பொருளாதார அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தது. அதன் விளைவாக ஆட்சிமுறையில் பலம்பொருந்திய இராணுவ ஈடுபாடு காணப்பட்டது. அதனுடன் சேர்ந்து பயமும் எதிர்ப்புணர்வும் தோன்றியது. இந்தக் கடந்த காலம் எந்தளவுக்கு எதிர்காலத்தின் மீது செல்வாக்கு செலுத்தும் என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரை முக்கிய கேள்வியாகிறது. கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையிலான பாலம் இரு பிரதான வேட்பாளர்களினதும் தேர்தல் பிரசாரங்களிலும் குறிப்பாக அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் நோக்கப்படும். அந்த விஞ்ஞாபனங்களே கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய அவர்களின் அபிப்பிராயமாகவும் மதிப்பீடாகவும் இருக்கவேண்டும்.
சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியான கையோடு அவருக்கான ஆதரவை தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்திருப்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். பல்லின மற்றும் பலமத சமூகமொன்றில் ஒத்திசைவான உறவுகளை சாதிப்பதற்கு அவசியமானவற்றை அந்த விஞ்ஞாபனம் கணிசமானளவுக்கு விளக்கிக்கூறியிருக்கிறது.” எமது அரசியலமைப்பு எமது நாட்டின் பல்லின, பல்கலாசார, பல்மொழித் தன்மையை – அதாவது பன்முகத்தன்மையை -பிரதிபலிக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டங்களினால் மாத்திரமல்ல மனங்களினாலும் எம்மை ஐக்கியப்படுத்த வேண்டும்” என்று அந்த விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது.
பலம்பொருந்திய தேசமொன்றைக் கட்டியெழுப்பக்கூடிய, ஜனநாயக பன்முக சமூகமொன்றை உருவாக்கக்கூடிய, ஜனாதிபதிகள் ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக் ஷ ஆகியோரின் ஆட்சிகளின் கீழ் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் அடிப்படையில் ஐக்கியப்பட்டதும் பிரிக்கமுடியாததுமான நாட்டுக்குள் மாகாணங்களுக்கு கூடுதல்பட்ச அதிகாரங்களைப் பரவலாக்கக்கூடிய புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவருவதாக ஆளும் கட்சியின் வேட்பாளர் உறுதியளித்திருக்கிறார். மத்தியில் அதிகாரப்பகிர்வை உறுதிசெய்வதற்கு மாகாணசபைகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய (பாராளுமன்றத்தில்) இரண்டாவது சபையொன்றை அமைக்கப்போவதாகவும் அவர் உறுதியளித்திருக்கிறார்.
மேலும், சஜித் பிரேமதாசவின் விஞ்ஞாபனம் மனித உரிமைகளையும் சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளையும் அரசியல் பெரும்பான்மைக்கு கீழ்ப்படிவானவையாக அல்லாமல், பாதுகாப்பதற்கு நிறுவனரீதியான உத்தரவாதங்களை பலப்படுத்தப்போவதாகவும் உறுதியளித்திருக்கிறது.” அரசாங்கத்திடமிருந்து சுயாதீனமானதாக நீதித்துறை விளங்குவது நாடு பலம்பொருந்தியதாக இருப்பதற்கு அவசியமானதாகும். இதை உறுதிப்படுத்துவதற்கு புதிய அரசியலமைப்பு (அரசியலமைப்பு பேரவையினால் நியமிக்கப்படுகின்ற) சுயாதீனமான பொது வழக்குத்தொடுநர் பதவியொன்றை உருவாக்கும்.அரசியலமைப்பை வியாக்கியானம் செய்யும் பொறுப்பு உயர்நீதிமன்றத்திடமிருந்து எடுக்கப்பட்டு புதிய அரசியலமைப்பு நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்படும். அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களுக்கு இடையிலான தகராறுகளை, மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண நிருவாகங்களுக்கும் இடையிலான தகராறுகளை, மாகாணங்களுக்கு இடையிலான தகராறுகளை தீர்த்துவைக்கும் பொறுப்பையும் அரசியலமைப்பு நீதிமன்றம் கொண்டிருக்கும் என்றும் பிரேமதாசவின் விஞ்ஞாபனம் கூறியிருக்கிறது. மாகாண சபைகளிலும் பாராளுமன்றத்திலும் பெண்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அதில் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.
இவற்றுக்கு மாறாக, கோத்தாபய ராஜபக் ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம், “மீண்டும் பயங்கரவாத மற்றும் தீவிரவாத சக்திகளினதும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் எமது தாய்நாட்டை பாதுகாப்பதே எனது பிரதான இலக்கு” என்று கூறப்பட்டிருக்கிறது. “தேசிய பாதுகாப்பு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. பெருமளவு தியாகத்தின் மூலமாக வென்ற சமாதானத்தை நாம் உறுதிப்படுத்தவேண்டியிருக்கிறது. ஒரு சட்டத்தின் கீழ் பிளவுபடாத நாடொன்றில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனைய சமூகங்களும் கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் ஒன்றிணைந்து ஒத்திசைவாக வாழ்வதை நாம் மீண்டும் ஒரு தடவை உறுதிசெய்ய வேண்டியிருக்கிறது. சட்டத்தின்முன் சகல பிரஜைகளும் சமத்துவமானவர்களாக நடத்தப்படக்கூடியதாக, “எவரும் சட்டத்துக்கு மேலானவர்கள் இல்லை” என்ற கோட்பாட்டை உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும். என்னிடமிருந்து எதை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை தெளிவாக விளங்கிக்கொள்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலானது தேசிய பாதுகாப்பு. அதை நாம் நிலைநிறுத்திக் கொண்டதும் பொருளாதார அபிவிருத்தியைச் சாதிப்பது வெற்றிபெறமுடியாத சவாலாக இருக்கப்போவதில்லை. அடுத்து முக்கியமான பணி முற்போக்கான தேசிய பொருளாதாரத்தையும் பன்முக சமூகமொன்றையும் உருவாக்குவதேயாகும் ” என்று விஞ்ஞாபனத்தில் கோத்தாபய கூறியிருக்கிறார்.
சஜித் பிரேமதாசவின் விஞ்ஞாபனத்தை விடவும் கோத்தாபயவின் விஞ்ஞாபனம் வேறுபடுகிறது. அதுவும்கூட ஒரு கோட்பாட்டு அடிப்படையில் நன்கு வரையப்பட்டிருக்கிறது. ஆனால், அதில் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. தேசிய பாதுகாப்பு என்பது இனரீதியான, மதரீதியான சிறுபான்மை சமூகங்களை பலப்படுத்துவதாக இல்லாமல் பிரதானமாக அவற்றை இலக்குவைப்பதை நோக்கமாக கொண்டதாக கருதப்படுவதால் தேசிய பாதுகாப்பை மையமாகக்கொண்டு வரையப்பட்ட விஞ்ஞாபனத்தை சிறுபான்மை சமூகங்களிடம் கொண்டுசெல்வது மிகவும் கஷ்டமானதாகும்.
இனத்துவ மற்றும் மதரீதியான சமூகங்கள் என்ற வகையில் இலங்கையின் அரசியல் சமுதாயத்தின் அங்கங்களாக விளங்கும் சிறுபான்மை சமூகங்களின் தேவைகளில் கோத்தாபயவின் விஞ்ஞாபனம் கவனம் செலுத்தவில்லை.சிறுபான்மையின சமூகங்களை கவருவதில் கோத்தாபயவுக்கு இருக்கின்ற பிரச்சினை, அவர் பத்து வருடங்களாக பாதுகாப்பு செயலாளராக போரையும் போரின் இறுதிக்கட்டங்களையும் போரின் முடிவுக்கு பின்னரான உடனடிக் காலகட்டத்தையும் கையாளவேண்டிய பொறுப்பின் அடிப்படையில் எழுகின்ற ஒன்றாகும்.போரின் முடிவுக்கு பின்னரான காலகட்டத்தில் மனித உரிமை மீறல்கள் பெரும் பிரச்சினையாக வெடித்தன. கடந்த காலத்துடன் தொடர்பை அறுத்துக்கொண்டு நிகழ்காலத்தை அலசி ஆராய்ந்து (இனரீதியாக, மதரீதியாக துருவமயப்பட்டுக்கிடக்கின்ற )அரசியல் சமுதாயமொன்றின் ஒவ்வொரு பிரிவுக்கும் முக்கியமானவையாக இருக்கின்ற விவகாரங்கள் தொடர்பில் நம்பகத்தன்மையான உறுதிமொழிகளை வழங்குவது என்பது பெரிய சவாலாகும்.-Vidivelli
- கலாநிதி ஜெஹான் பெரேரா