நமது நாட்டின் செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான எட்டாவது தேர்தல் எதிர்வரும்16 ஆம் திகதி நடைபெறவிருப்பது நாமறிந்ததே. இத்தேர்தலில் தீவு முழுவதிலிருந்தும் கடந்த 2018 ஆம் வருடத்திற்கான தேருநர் இடாப்பின் பிரகாரம் 15,992,096 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர்.
இது கடந்த 2018 பெப்ரவரி 10ஆம் திகதி நமது நாட்டில் அமைந்துள்ள 341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 சபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் நாடு பூராகவும் 15,742,371 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுக் காணப்பட்டனர். (அன்று நடைபெறாது தடைபட்டுப்போன எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் கடந்த 11 ஒக்டோபர் 2019 இல் நடைபெற்றது தெரிந்ததே). நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களித்தவர்களை விட 249,725 பேர் இம்முறை புதிதாக வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2010 ஜனவரி 26 இல் நடைபெற்ற ஆறாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலில் மொத்த வாக்காளர்களில் 74.49 வீதமானோர் மாத்திரமே தமது வாக்குகளை பதிவு செய்திருந்தனர். அதுவும் யுத்த வெற்றியை அடுத்து நடைபெற்ற தேர்தலாக இது இருந்த நிலையில் என்பது நமது கவனங்களுக்குரியது. அதுமட்டுமன்றி ஆட்சி மாற்றம் வேண்டும், குடும்ப ஆட்சியின் வலிமை அகற்றப்படல் வேண்டுமென பாரிய பரப்புரைக்கு மத்தியில் இலங்கையின் 7ஆவது செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தல் கடந்த 08 ஜனவரி 2015இல் நடைபெற்றது. அதில்கூட அன்று வாக்காளிக்கத் தகுதி பெற்றிருந்தவர்களில் 81.52 வீதமானவர்கள் தான் தமது வாக்கை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி இருப்பதையும் பார்க்கின்றோம். அதேநேரம், 2018இல் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்கூட 80.20 வீதமானோர்தான் வாக்களித்திருந்தனர். ஆகவே, இம்முறை நடைபெறவிருக்கின்ற எட்டாவது செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலில் 82 வீதத்திற்குள்ளேதான் மொத்த வாக்கு கள் பதிவு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதித் தேர்தலில் வெல்லப் போவது யார் என்பது குறித்து பலரும் பலவிதமான எதிர்வு கூறல்களை முன்வைத்து வருவதும் நாமறிந்ததே. எனது பார்வையின் அனுமானத்தையும் இது விடயத்தில் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் அடிப்படையாகும். மாறாக, இது உறுதிப்படுத்தப்பட்ட கருத்துக்களின் ஆதாரப்படுத்தலாக எழுதப்படுகின்ற ஆக்கமல்ல. நான் அவதானித்தவற்றின் எடுகோளை முன்னிறுத்தி, கணித்து ஆற்றுப்படுத்தும் ஒரு கட்டுரையே இதுவாகும். சிலவேளை இதில் தெரிவிக்கப்படும் எதிர்வு கூறலுக்கு நேரெதிரான முடிவுகளையோ, சரியொத்த பெறுபேறுகளையோ நாம் சந்திக்கவும் வாய்ப்பிருப்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
எது எவ்வாறு இருந்தாலும் நடைபெறவிருக்கின்ற எட்டாவது ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரான சில பின்னணிகளை நமது ஞாபகத்துக்கு கொண்டுவருவது இத்தேர்தலை நிறுத்துப் பார்ப்பதற்கு அனுகூலமாக அமைய முடியும். கடந்த 2010 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த 6,015,934 (57.88%) வாக்குகளைப் பெற்று, 1,842,749 அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். நமது நாட்டில் அமைந்துள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமையப் பெற்றிருக்கும் 5 தேர்தல் மாவட்டங்களும் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள நுவரெலியா ஆகிய மாவட்டத்தோடு மொத்தம் 6 மாவட்டங்களில் தோல்வியுற்ற நிலையில்தான் இந்த வெற்றியை தன்வசமாக்கிக் கொண்டார். இது சிங்கள மக்களின் அதிகரித்த வசீகரிப்பு. இவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியடைந்தவர் என்ற அடையாளம் வழங்கிய மாபெரும் பரிசாகும். அதேநேரம் யுத்த காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை எதிர்த்து போட்டியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த 2010 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த பெற்ற மொத்த வாக்குகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து கிடைத்த மொத்த வாக்குகள் 345,221 ஆகும். இதனை அவர் பெற்ற மொத்த வாக்குகளிலிருந்து கழித்தால் 5,670,713 வாக்குகள் சிங்கள மக்களை பெருவாரியாகக் கொண்ட ஏனைய 17 மாவட்டங்களிலும் இருந்து பெற்றதாகும். அதேநேரம் சரத் பொன்சேகா பெற்ற 4,173,185 மொத்த வாக்குகளிலிருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து பெற்ற 684,944 வாக்குகளை கழித்தால் வரும் 3,448,241 வாக்குகளே சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டத்திலிருந்து அவரால் பெற முடிந்திருக்கிறது.
பொன்சேகா வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து மஹிந்தவை விட அரைப்பகுதிக்கு மேல் பெற்றிருந்தும் அவரால் வெல்ல முடியவில்லை. இது எதனை நமக்குச் செய்தியாகத் தருகிறது என்றால், இந்த 5 தேர்தல் மாவட்டங்களிலிருந்து சிறுபான்மை மக்களான தமிழர், முஸ்லிம்களின் அதிகரித்த ஆதரவு என்பது சிங்கள மக்களின் அதிகரித்த ஆதரவு இல்லாதபோது பயனில்லை என்பதைத்தான்.
இதனை அடுத்து 2010 ஏப்ரல் 8ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 4,846,388 (60.33%) வாக்குகளைப் பெற்று மாவட்ட ரீதியாக 127 ஆசனங்களையும் தேசியப்பட்டியலில் இருந்து 17 ஆசனங்களுமாக மொத்தம் 144 நாடாளுமன்ற உறுப்பினர்களை உரித்தாக்கி கொண்டது. இதில் ஐ.தே.முன்னணி 2,357,057 (29.34%) வாக்குகளைப் பெற்று மாவட்ட ரீதியாக 51உம் தேசிய பட்டியலில் 9மாக மொத்தம் 60 பாராளுமன்ற உறுப்பினர்களையே பெற்றெடுக்க முடிந்திருக்கிறது. இது மஹிந்தவின் மக்கள் செல்வாக்குக்கு முன்னால் ஐக்கிய தேசிய முன்னணி மிகவும் பலவீனப்பட்டிருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
கடந்த 2015 ஜனவரி 8 ஆந் திகதி நடைபெற்ற நமது நாட்டின் செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு நடைபெற்ற 7 ஆவது தேர்தலில் மைத்திரி பெற்ற மொத்த வாக்குகள் 6,217,162 (51.28%) ஆகும். இதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து கிடைத்த 978,111 வாக்குகளை கழித்தால் ஏனைய சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட 17 மாவட்டங்களிலிருந்து 5,239,051 வாக்குகளையே மைத்திரியால் பெற முடிந்திருக்கிறது. அதேநேரம் மஹிந்த சிங்கள மக்களை பெருவாரியாகக் கொண்ட 17 மாவட்டங்களிலிருந்து 5,544,490 வாக்குகளையும் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து 223,600 வாக்குகளையும் பெற்று மொத்தமாக 5,768,090 (47.58%) வீதமான வாக்குகளை பெற்றிருக்கின்றார். ஆயின் ஒப்பீட்டளவில் மைத்திரியை விடவும் சிங்கள மக்களின் வசீகரிப்புக்கும் பற்றுக்கும் அதிக கவனத்தை பெற்றவராக மஹிந்த ஆகுகின்றார்.
யுத்த வெற்றிக்கு எத்தனை பேர் உரிமை கோரிய போதிலும் அது மஹிந்தவுக்கு எழுதிக் கொடுத்த உரிமை போன்றுதான் சிங்கள மக்களின் பெரும்பாலானவர்களின் மனோபாவம் அமைந்து காணப்படுகின்றது. இதனால்தான் ஏழாவது ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் எதிர்கொண்ட பொதுத் தேர்தலில் வீழ்ந்து விடாது நிமிர்ந்து நிற்கும் நிலையை எய்துகின்றார். அதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்குள் அவரது ஆளுமையும் செல்வாக்கும் தளர்ந்து விடாது ஓர் உறுதியான தடத்தைப் பெறுகின்றார். ஐக்கிய தேசிய முன்னணி 5,098,916 (45.66%) வீத வாக்குகளைப் பெற்று மொத்தமாக 106 ஆசனங்களை தன்வசமாக்கிய போதிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 4,732,664 (42.38%) வீத வாக்குகளைப் பெற்று மொத்தமாக 95 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்கின்றது. இதற்கு சார்பானவராக ஜனாதிபதி மைத்திரி இருந்தும் வெற்றி பெற்ற எம்.பிக்களில் பெரும் பகுதியினர் மஹிந்த அணியென பிரிந்தும் அவரோடு ஒட்டிக் கொண்டனர்.
இத்தேர்தலில்கூட சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட 7 மாவட்டங்களை வென்று, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 10 மாவட்டங்களிலிருந்தும் பெற்ற வாக்குகள் 4,534,361 ஆகும். வடக்கு, கிழக்கில் கிடைத்த வாக்குகள் 198,303 சேர்த்தால் 4,732,664 ஆகும். அதேநேரம் ஐ.தே.முன்னணி வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ள 17 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் பெற்ற வாக்குகள் 4,772,360 ஆகும். வடக்கு, கிழக்கில் கிடைத்த 326,548யையும் சேர்த்தால் மொத்தமாக 5,098.916 வாக்குகளாகும்.
இது ஜனாதிபதியாக மைத்திரி இருந்தும் அவர் பக்கம் சாய்ந்து கொள்ளாது மஹிந்த பக்கம் சார்பு நிலைப்பாட்டை எடுப்பது கூட அவரின் ஆளுமையாகவே அமைகின்றது. இந்தப் பலம் ஒரு தனிக் கட்சியை ஸ்தாபிக்கும் கட்டமைப்பை உருவாக்கும் பக்கம் திரும்புகின்றது. இதுவலிமையான காலூன்றலை மஹிந்தவிற்கு கைகோர்த்து இருப்பதையும், குறுகிய காலத்திற்குள் செல்வாக்குள்ள ஒரு கட்சியாக அதனை வளர்த்தெடுப்பதற்கு வாய்ப்பளித்து, உறுதி செய்து கொள்ளும் சந்தர்ப்பத்தையும் அவர் பெற்றிருக்கின்றார்.
கடந்த 2018 பெப்ரவரி 10ஆந் திகதி நமது நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் 341 உள்ளூராட்சி மன்றங்களில் 340க்கு தேர்தல் நடைபெற்றது. காலி மாவட்டத்தில் அமைந்துள்ள எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனு தொடர்பிலான வழக்கின் காரணமாக இதற்கு மட்டும் அன்று தேர்தல் நடைபெறவில்லை. ஆயினும் அண்மைய நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக கடந்த 11 ஒக்டோபர் 2019இல் அதற்கான தேர்தலும் நடந்து முடிந்தது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 5,030,209 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து இக்கட்சிக்கு கிடைத்திருக்கும் 142,598 வாக்குகளை கழித்தால், இம்மாகாணங்களுக்கு வெளியே அமைந்திருக்கும் சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட 17 மாவட்டங்களிலிருந்து 4,887,611 வாக்குகளை பெற்றிருக்கிறது. அதேநேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் திருமலை மாவட்டம் உள்ளடங்கலாக மொத்தம் 16 மாவட்டங்களை இக்கட்சி கைப்பற்றியது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எந்த மாவட்டங்களையும் வெற்றி பெறாது 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்து 1,502,507 வாக்குகளைப் பெற்றது. இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து இக்கட்சிகளுக்கு கிடைத்த 167,428 வாக்குகளை கழித்தால் சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஏனைய 17 மாவட்டங்களிலிருந்தும் பெற்ற மொத்த வாக்குகள் 1,335,079 ஆகும்.
ஐக்கிய தேசியக் கட்சி இத்தேர்தலில் மொத்தமாக பெற்ற 3,650,733 வாக்குகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் 5 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் கிடைத்த 262,746 வாக்குகளைக் கழித்தால், ஏனைய 17 சிங்கள மக்களை அதிகரிப்பாக கொண்டிருக்கும் தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் கிடைத்த வாக்குகள் 3,387,987 ஆகும். நூவரெலியா, திகாமடுல்ல பதுளை ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
ஜே.வி.பி 713,367 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் 5 தேர்தல் மாவட்டங்களிலிருந்து 18,246 பெற்ற வாக்குகளைக் கழித்தால் 695,121 வாக்குகளை சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஏனைய 17 மாவட்டங்களிலிருந்தும் பெற்றள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலைப் பொறுத்தவரை மொத்தமாக பொதுஜன பெரமுன 16 மாவட்டங்கள், ஐக்கிய தேசிய கட்சி 3 மாவட்டங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 மாவட்டங்கள் என வெற்றி பெற்றிருக்கின்றன. இதில் நாம் கவனிக்க வேண்டி விடயம் யாதெனில், சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ள 17 மாவட்டங்களிலும் ஐ.தே.கட்சியை விட மஹிந்த தரப்பை அங்கீகரிக்கும் பாங்கினையாகும். இந்த வித்தியாசத்தை அக்கட்சிகள் பெற்ற வாக்குகளில் காணலாம்.
பொதுஜன பெரமுன 4,887,611 வாக்குகளை பெற்றிருக்கும் அதேவேளை ஐ.தே.கட்சி 3,387,987 வாக்குகளை அடைந்திருக்கிறது. இவ்விரு கட்சிகளுக்கிடையில் காணப்படும் வித்தியாசம் 1,499,624 ஆகும். இதனோடு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெற்றிருக்கும் (17 மாவட்டங்களில்) 1,335,079 வாக்குகளையும் கூட்டினால் 2,834.703ஆக உயர்வு பெறுவதைப் பார்க்கலாம்.
நமது நாட்டில் காணப்படும் 341 உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தல் முடிவுகளை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பின்வரும் பெறுபேறுகளை அவதானிக்கலாம். பொதுஜன பெரமுன 5,030,209 (40.51%) ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி 1,502,507 (12.10%) ஐக்கிய தேசிய கட்சி 3,650,733 (29.40%) இதர கட்சிகள் 1,517,503 (12.22%) ஜேவி.பி 713,367 (5.74%) பெற்றிருந்தன.
இத்தேர்தலில் மொத்தமாக வாக்களித்தோர் 12,625,886 (80.20%)ஆகும். நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 211,567 ஆகும். செல்லுபடியான வாக்குகள் 12,414,319 ஆகும் அளிக்கப்படாத வாக்குகள் 3,116,485 (19.79%) ஆகும்.
கடந்த பல தேர்தல்களில் வாக்களிப்பு வீதத்தை நோக்கும்போது இம்முறை 81 அல்லது 82 வீதமானோர் வாக்களிப்பார்கள் என எதிர் பார்க்கலாம். உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகளை வைத்து ஏனைய தேர்தல்களின் முடிவு எவ்வாறு அமையும் என்ற கணிப்பீட்டை செய்யக் கூடாது என்கின்ற பொதுநியதியை மறுக்கக் கூடாது என்பதை நான் கவனத்தில் கொள்ளாமலில்லை. ஆனால் இத்தேர்தலில் இறுதியாகவும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வந்ததன் பின்னரும், முன்னைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடந்து சுமார் 20 மாதங்களின் பின் நடைபெற்ற எல்பிட்டிய தேர்தல் முடிவும் நமது கவனத்தை ஈர்க்கின்றது.
ஏனெனில், சஜித் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பு செய்யப்பட்டும், அவருக்கே அதிகரித்த ஆதரவுத் தளம் பெருகிக் கொண்டிருக்கிறது என்கின்ற பரப்புரைக்கு மத்தியில், எல்பிட்டி பகுதி மஹிந்தவின் கோட்டைதானே எனச் சொல்லி இந்த வெற்றி நடை பெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் தாக்கத்தைச் செலுத்தாது என சொல்வது பொருத்தமாகப் படவில்லை. உண்மையில் கோட்டை என நம்பப்படுவதில் உடைப்பு நிகழாது எப்படி வெற்றி அலைவீசும் என்ற கேள்வியும் எழுப்பப்படாது விடலாமா?
இன்று மஹிந்தவின் கடந்த கால அரசாங்கத்தின் போது சாட்டப்படும் குடும்ப ஆட்சி, நாட்டை விற்றல், ஊழல், மக்கள் அழிப்பு, வெள்ளை வேன் கலாசாரம் என்ற கருத்தாடல்கள் 2015 களிலிருந்து கூறப்பட்டு வந்த தொடர்கதையாடலுக்கு மத்தியில் அவர் மீண்டெழுந்து எழுச்சி பெற்று வருவதையே தேர்தல் முடிவுகள் திட்டவட்டமாக நமக்கு அறிவிப்பு செய்கின்றது. அது மட்டுமன்றி, நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு சுமார் 32 மாத ஆட்சியின் பின்னர் ஐ.தே.கட்சியினர் பலத்த தோல்வியை அடைந்திருக்கின்றனர் எனில், அவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற கேள்வி அர்த்தமற்றதாகாது. இந்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பெறு பேறுகள் இம்முறை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலிலும் தாக்கம் செலுத்தக்கூடும்.
அந்த அடிப்படையில் இதன் பெறுபேறு களை பின்வருமாறு பார்க்கலாம். பொது ஜன பெரமுன, மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றின் இணைவு ரீதியாக முறையே 40.51,12,10 சேர்த்து 52.51% வீதத்தை குறித்துக் காட்டும். ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற 29.40உம் இதர கட்சிகள் பெற்ற 12.22உம் இணைந்தால் 41.62% வீதத்தையே சுட்டுகிறது. ஜே.வி.பி.5.74% வீதம் தனிமைப்படுகிறது.
கடந்த 2015இல் மைத்திரியை ஜனாதிபதியாக்குவதில் வடக்கு, கிழக்கு மக்களின் வாக்குகள் தான் மஹிந்த பெற்ற சிங்கள மக்களின் வாக்குக்கு மைத்திரியை சமம்படுத்தியது என்றால் அவரது வெற்றிக்கு ஜே.வி.பி.யினரின் வாக்கே உயர்த்தியது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் அத்தேர்தலை அடுத்து நடை பெற்ற பொதுத் தேர்தலில் இக்கட்சி 543,944 (4.87%) பெற்றிருக்கும் வாக்கு உறுதி செய்கின்றது.
ஆகவே, இம்முறை ஜே.வி.பி.போட்டியி லிருந்து முற்றாக விலகியும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாக்காளர்களின் பெரும்பாலானவர்கள் சஜித்தை ஆதரிக் கும் நிலை தோன்றாதவரை மஹிந்த அணி வேட்பாளர் கோத்தாவை தோற் கடித்துவிடலாம் என்று நம்புவது சரியான அபிப்பிராயமாக இராது. பொறுத்திருந்து பார்ப்போம் பெற்றியாளர் யாரென்று?-Vidivelli
- எம்.எம்.எம்.நூறுல் ஹக்