இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பிரதான அபேட்சகர்கள் எவரும் 50 சதவீத வாக்குகளைப் பெறமுடியாத நிலை ஏற்படும் என்றும் எனவே, இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ணும் நிலை ஏற்படலாம் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற அங்கத்தவர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.
கண்டி டெவோன் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
தேர்தல் தொடர்பான அறிவித்தல் ஆரம்பத்தில் விடுக்கப்பட்டபோது குறிப்பிடத்தக்க அளவு போட்டி நிலைமைகள் காணப்படவில்லை. ஆனால் படிப்படியாக வாக்களிப்பு தினம் அண்மித்துள்ளபோது அது கடும் மும்முனைப் போட்டியாகியுள்ளது. எந்த அபேட்சகரும் 50 சதவீத வாக்குகளை பெறமுடியாத நிலையொன்று உருவாகும் சாத்தியம் தென்படுகிறது. எனவே வாக்காளர்கள் இரண்டாம் தெரிவுக்கு செல்வது நல்லது என்றார்.
எனவே, இம்முறை தேசிய மக்கள் சக்தி அபேட்கசர் அனுரகுமார திசாநாயக்காவிற்கு உங்கள் முதலாவது வாக்கையும் மற்ற பிரதான அபேட்சகர்களில் ஒருவருக்கு இரண்டாவது தெரிவையும் வழங்குவது பொருத்தமெனக் கருதுகிறேன்.
1982ஆம் ஆண்டு ஏறத்தாழ ஒரு வகையான மும்முனைப் போட்டி நடைபெற்றபோதும் அதன் பிறகு அவ்வாறான ஒரு நிலை காணப்படவில்லை. ஆனால் இம்முறை தெளிவான ஒரு மும்முனைப் போட்டி நடக்கும் சாத்தியமுண்டு. எனவே யாரை வெற்றி பெறச் செய்வது, யாரை தோல்வியடையச் செய்வதெனப் பொதுமக்கள் முடிவுசெய்ய வேண்டும்.
கடந்த 71 வருடங்களாக மாறிமாறி ஆட்சிக்கு வந்தவர்கள் மீண்டும் நாட்டை அபிவிருத்தி செய்ய எமக்கு வரம் தாருங்கள் என்று கேட்பது பெரும் வேடிக்கையாகும். ஆனால் ஸ்ரீலங்கா சு.க., ஐ.தே.க., பொ.ஜ.பெ. போன்ற எல்லாப் பிரிவுகளினதும் அடிநாதத்தை உடைத்தெறிந்துள்ள 32 அமைப்புக்களைக் கொண்டு எமது தேசிய மக்கள் சக்தி அமைப்பு கட்டியெழுப்பப் பட்டுள்ளது என்றார்.
ஜனாதிபதி சட்டத்தரணி லால் விஜேநாயக்க உட்பட பலர் இங்கு கருத்து வெளியிட்டனர்.-Vidivelli
- வத்துகாமம் நிருபர்