மஹிந்த அரசு செய்த அநியாயங்களை முஸ்லிம்கள் மறந்துவிடமாட்டார்கள்
தமிழர்களும் முஸ்லிம்களும் சஜித்தை நம்பலாம் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க விடிவெள்ளிக்கு விஷேட செவ்வி
Q: இந்த தேர்தல் தொடர்பில் முஸ்லிம்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?
முஸ்லிம்களுக்கு விஷேடமாக எதையும் நான் கூறத்தேவையில்லை. 2013 ஆம் ஆண்டிலிருந்து மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் செய்த அநியாயங்களை முஸ்லிம்கள் மறந்துவிடமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
முஸ்லிம்களுக்கு முன்னர் இந்நாட்டில் பிரச்சினை இருக்கவில்லை. 2013 ஆம் ஆண்டு முதல் முறையாக முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபல சேனா, சிஹல ராவய உள்ளிட்ட சில அமைப்புகளை உருவாக்கினர். இவற்றை கோத்தாபய ராஜபக் ஷவே உருவாக்கினார். அவர்கள் அதனை மறுத்தாலும் என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. அவர்களின் அலுவலகங்களை கோத்தாபய ராஜபக் ஷவே திறந்துவைத்தார். அதற்கான புகைப்படங்கள் இருக்கின்றன.
பித்து பிடித்தவர்களை கைவிடுவது போல முஸ்லிம் மக்களை தாக்குவதற்கு இவர்களை விட்டனர். வீடுகளை எரித்தனர், தொழிற்சாலைகளை எரித்தனர், வியாபார நிலையங்களை எரித்தனர். இதனை அடுத்து தான் ஈஸ்டர் தாக்குதல் நடந்தது .இது குறித்து கைது செய்யப்பட்ட சில இளைஞர்கள் வாக்குமூலங்களை தெளிவாக கொடுத்துள்ளனர். 2013 ஆம் ஆண்டின் பின் தமக்கு வேறு வழியின்றி இவ்வாறான செயல்களுக்கு துணைபோனதாக தெளிவாக கூறியுள்ளனர்.
இனவாதத்தை தூண்டிவிட்டு இவர்கள் வாக்கு சேகரிக்க முயல்கின்றனர். தற்போது சிறுபான்மை மக்களுக்காக பணியாற்றுவதாக கூறுகின்றனர். இவர்கள் சிஹல ராவய, பொதுபல சேனா போன்ற அடிப்படைவாத அமைப்புகளை தடை செய்வார்களா ?ஏனைய இன மதத்தினருக்கு எதிராக ஒரு விரலைத் தூக்கினால் கூட அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது அவர்களுக்கு அலுவலகம் அமைத்துக் கொடுத்து பணம் கொடுத்து அரவணைத்துக் கொள்வார்களா?
Q: நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடந்தனவே?
அந்த தாக்குதல்களின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதை எடுத்து நோக்குங்கள். கைது செய்யப்பட்ட அனைவரும் பொது ஜன பெரமுனவின் ஆதரவாளர்களும் முக்கியஸ்தர்களும் தானே.
மினுவாங்கொடையில் தாக்குதல்களை வழிநடாத்தியவர் யார்? குளியாபிட்டியில் முன்னணியில் நின்று தாக்கியவர்களும் அதற்காக கைது செய்யப்பட்டவர்களும் எந்தக் கட்சியின் ஆதரவாளர்கள். எனவே பொது ஜன பெரமுனதான் இந்த தாக்குதல்களின் பின்னால் உள்ளது என்பதை முஸ்லிம்கள் நன்கு விளங்கியுள்ளார்கள்.
Q: சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என உங்களால் உறுதியளிக்க முடியுமா?
என்னால் தனிப்பட்ட ரீதியாக உத்தரவாதம் வழங்க முடியாது. ஆனால் சஜித் பிரேமதாச அந்த உத்தரவாதத்தை வழங்கியிருக்கிறார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை பாதுகாப்பு அமைச்சராக நியமிப்பேன் என்றும் அவர் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவார் என்றும் சஜித் கூறியிருக்கிறார். எனது பார்வையில் சரத் பொன்சேகா இனவாதியல்ல. அவரிடம் தேசத்தைப் பாதுகாப்பதற்கான இயலுமை இருக்கிறது. அவர் அந்தப் பொறுப்பைச் செய்வார் என நம்புகிறேன்.
Q: தேசிய பாதுகாப்பை எங்களால் மாத்திரமே உறுதிப்படுத்த முடியும் என ராஜபக் ஷ தரப்பினர் கூறுகின்றனரே?
அப்படி அவர்கள் கூறுவதென்றால் தேசிய பாதுகாப்பை அவர்கள் எவ்வாறு முன்பு பலப்படுத்தினார்கள் என்று கேளுங்கள். யுத்தம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதிலிருந்து 2015 ஜனவரி மாதம் வரை 6 வருடங்களாக அவர்கள் தேசிய பாதுகாப்பினை பலப்படுத்தியது பொதுபலசேனாவைப் பாதுகாத்து முஸ்லிம் மக்களை இன்னல்களுக்குட்படுத்தியதன் மூலமா? யுத்தத்தில் வெள்ளைக்கொடி ஏந்தி வந்த அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்பட்டல்லவா? அவர்களுக்கு வெடிவைத்து நந்திக்கடல் எங்கும் இரத்தம் ஓடியது அல்லவா? இது பாதுகாப்பா? இதுவா தமிழ் மக்களுக்கு அவர்கள் வழங்கிய பாதுகாப்பு? அவர்கள் சிங்கள மக்களுக்குத்தான் என்ன பாதுகாப்பு வழங்கினார்கள்? எப்படிப் பாதுகாப்பு வழங்கினார்கள்-? ஊடகவியலாளர் லசந்தவைக் கொலை செய்தார்கள். 18 ஊடகவியலாளர்களின் கை, கால்களை முறித்தார்கள். இதுவா அவர்கள் வழங்கிய பாதுகாப்பு? முதலில் பாதுகாப்பு என்பது பற்றி அவர்களுக்குத் தெரியுமா? என நான் சவால் விடுகிறேன். இராணுவத்தினரை பாதைகளில் நிறுத்துவதன் மூலம் பாதுகாப்பு வழங்க முடியாது. மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதன் மூலமே பாதுகாப்பு வழங்க முடியும். சுதந்திரமாக பேசும் உரிமை, ஊடக சுதந்திரம், சுதந்திரமாக நடமாடும் உரிமை, சுதந்திரமாக அரசியலில் ஈடுபடும் உரிமை இவைகளே பாதுகாப்பாகும். ராஜபக் ஷவின் அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டார் என்பதற்காக ரவிராஜை கொலை செய்தார்கள்தானே.
Q: ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணியில் கோத்தாபய ராஜபக் ஷ உள்ளதாகவும் சஹ்ரான் குழுவுக்கு பண உதவி செய்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறதே?
சஹ்ரான் கோத்தாபய ராஜபக் ஷ தரப்பினருடன் நெருக்கமாக இருந்தார் என்று கூறப்படுகிறது. சஹ்ரானுக்கு அவர்கள் பணமும் கொடுத்துள்ளார்கள் என தகவல்கள் வருகின்றன. எனினும் எனக்கு அது பற்றி சரியாகத் தெரியாது. பொலிஸில் முறைப்பாடுகள் உள்ளன. அதனை வைத்து நடவடிக்கை எடுக்க முடியும்.
Q: சுதந்திரக் கட்சி சம்மேளனத்தில் உரையாற்றிய நீங்கள் முஸ்லிம் இளைஞர்கள் பயங்கரவாதிகளாக மாறியதை நியாயப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டீர்களா?
2013 இன் பின் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாமற் போனமையினாலே முஸ்லிம் இளைஞர்கள் இயக்க ரீதியில் ஒன்றுபட்டார்கள் என்றே நான் கூறினேன். பயங்கரவாதம் நல்லது என நான் கூறவில்லை. உரிமைகள் வழங்கப்படாதவிடத்து, தேவைகள் நிறைவேற்றப்படாத விடத்து இளைஞர், யுவதிகள் பயங்கரவாதத்தின் பால் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதைத்தான் நான் சொல்ல வந்தேன்.
Q: முஸ்லிம்களில் ஒருசாரார் இன்னமும் கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்குகிறார்களே?
நான் ஒன்று மட்டுமே கூறவிரும்புகிறேன். எனக்கு நன்கு அறிமுகமான சில முஸ்லிம் பிரபல வர்த்தகர்களும் கோத்தாவை தாம் விரும்புவதாக கூறினார்கள். எமக்கு மஹிந்த ராஜபக் ஷ மீது விருப்பமில்லை என்றாலும் கோத்தாபய ராஜபக் ஷ வந்தால் எங்கள் வர்த்தகத்துக்கு உதவிகள் செய்வார் என்றார்கள். அதற்கு ”உங்களது சடலங்கள்தான் பெட்டியில் வீட்டுக்கு வரும்” என நான் அவர்களுக்குக் கூறினேன். அவ்வளவுதான்.
Q: சிலர் வாக்களிப்பை புறக்கணிக்க வேண்டும் என்றும் அல்லது மூன்றாவது சக்திக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் பிரசாரம் செய்கிறார்களே?
இரு பிரதான வேட்பாளர்களல்லாத எவருக்கும் அளிக்கப்படும் வாக்குகள் வீணானவையே. இன்று மிகவும் தீர்மானமிக்க சூழ்நிலைக்கு நாடு தள்ளப்
பட்டுள்ளது. அதாவது நாம் மீண்டும் ஏகாதிபத்திய ஆட்சிக்குச் செல்வதா? இல்லையேல் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதா? என்ற தீர்மானத்திற்கு வர
வேண்டியுள்ளது. எம்மால் சிறு சிறு விடயங்களை முன்வைத்து வேறுபட முடியாது. நாம் ஒருவரின் முகத்தைப் பார்த்து தீர்மானம் எடுக்காது, யாரால்
சரியாக சேவையாற்ற முடியும்-? நேர்மையாக யார் செயற்படுவார்? எவரது கொள்கைகள் நாட்டுக்கு நன்மை பயக் கும்?, யார் தகுதியானவர்? என்பதைத் தீர்மானித்து வாக்களிக்கவேண்டும்.-Vidivelli
- நேர்காணல்:
எம்.பி.எம்.பைறூஸ்