இலங்கைத் தேசம் மிக முக்கியமானதொரு தேர்தலை சந்திக்க இன்னும் ஒருவார காலமே எஞ்சியிருக்கிறது. தேர்தல் பிரசாரங்களும் சூடுபிடித்துள்ள நிலையில் வன்முறைகள் வெடிக்கலாம் என்ற அச்சமும் தளிர்விட்டுள்ளது. அதன் அறிகுறியாகவே நேற்று முன்தினம் இரவு கினிகத்ஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமும் அமைந்துள்ளது. தேர்தல் ஆணைக்குழு கூட வன்முறைகள் இடம்பெறலாம் என்ற அச்சத்தை முன்கூட்டியே வெளியிட்டிருந்தது. அடுத்த வாரம் குண்டு வெடிக்கலாம் என தனக்கு டுவிட்டரில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தேர்தல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளமையும் கவனிக்கத்தக்கதாகும். எது எப்படியிருப்பினும் வன்முறைகளற்ற நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை உறுதிப்படுத்த வேண்டியது தேர்தலுடன் தொடர்புபட்ட சகல தரப்பினரதும் கடப்பாடாகும்.
சிறுபான்மையினரைப் பொறுத்தவரை இத் தேர்தல் மிக முக்கியமானதாகவே அமைந்துள்ளது. தமிழ் மக்களின் பெரும்பான்மையான அங்கீகாரத்தைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு நீண்ட கால பரிசீலனைகளின் பின்னர் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. எனினும் தமிழ் தரப்பிலுள்ள ஓரிரு அரசியல்வாதிகள் எதிரணி வேட்பாளரான கோத்தாபய ராஜபக்சவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர். முஸ்லிம்களைப் பொறுத்தவரை முஸ்லிம் அரசியல்வாதிகளில் பெரும்பான்மையானோர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க, குறிப்பிடத்தக்களவானோர் கோத்தாவை ஆதரிக்கின்றனர். முஸ்லிம்களின் ஒரு தொகையினர் தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமாரவுக்கு ஆதரவை நல்கி வருகின்றனர்.
தெரிவு செய்யப்படும் தலைவர்கள் புரட்சிகர மாற்றங்களைக் கொண்டுவரமாட்டார்கள் என்ற போதிலும் தமக்கும் தமது சமூகத்திற்கும் சாதகமான சிறு மாற்றமேனும் நிகழும் என்ற நம்பிக்கையிலேயே மக்கள், குறிப்பாக சிறுபான்மை மக்கள் இம்முறை வாக்களிக்கவுள்ளனர். மக்களின் அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது வெற்றி பெறப் போகும் ஜனாதிபதியின் கடப்பாடாகும்.
முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை இத் தேர்தலில் என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என எவராலும் வலிந்து திணிக்க முடியாது. களத்திலுள்ள வேட்பாளர்களை ஒப்பிட்டு நோக்கி, தமது தேர்வை மேற்கொள்வதற்கான தெரிவுச் சுதந்திரம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பணத்துக்காகவும் வேறு சில அற்ப சலுகைகளுக்காகவும் முஸ்லிம் வாக்காளர்கள் தமது வாக்குரிமையை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது என வலியுறுத்த விரும்புகிறோம்.
எவ்வளவு செலவு செய்தேனும் அதிகாரத்துக்கு வந்துவிட வேண்டும் எனத் துடிப்பவர்கள், தாம் ஆட்சிக்கு வந்ததும் அதைவிடப் பல மடங்கு தொகையை மக்களிடமிருந்தே திருடுவார்கள் என்பதற்கு இலங்கையைத் தவிர வேறு சிறந்த உதாரணமிருக்க முடியாது. எனவேதான் எவரேனும் பணத்துக்காக, சலுகைகளுக்காக உங்கள் வாக்குகளை விலை பேசுவார்களாயின் அவர்களுக்கு எதிராகவே உங்கள் வாக்கு அமைய வேண்டும்.
மறுபுறம் இந்தத் தேர்தலில் இனவாதம் செல்வாக்குச் செலுத்துவதை வெளிப்படையாகவே காண முடிகிறது. இந்தத் தேர்தல் இனவாதத்தை தோற்கடிப்பதற்கான போராட்டமாகவே அமையப் போகிறது. எல்லா முகாம்களிலும் இனவாத சக்திகள் கூடாரமடித்துள்ள போதிலும் பொருத்தமான தரப்பைக் கண்டறிய வேண்டியதே வாக்காளர்கள் முன்னுள்ள சவாலாகும். இனவாதம் வெல்லுமாயின் அது இந்த நாட்டை மேலும் அதலபாதாளத்திற்கே இட்டுச் செல்லும் என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது. எனவேதான் முஸ்லிம் சமூகம் தனது வாக்குரிமையை மிகவும் நிதானமாகச் சிந்தித்து பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
முஸ்லிம் சமூகத்தை நேர்வழிகாட்ட வந்த இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை நினைவுபடுத்தும் இந்த மாதத்தில், நடைபெறவுள்ள தேர்தல் முஸ்லிம் சமூகத்திற்கு சுபீட்சமான
எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவர வேண்டும் என அதிகமதிகம் பிரார்த்திப்போம்.
அதேபோன்றுதான் இன்றுடன் உங்கள் அபிமான ‘விடிவெள்ளி’ முஸ்லிம் சமூகத்திற்கான தனது ஊடகப் பயணத்தில் 11 வருடங்களைப் பூர்த்தி செய்து 12 ஆவது ஆண்டில் கால்பதிக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் நாம் எமது அபிமான வாசகர்கள், செய்தியாளர்கள், விற்பனை முகவர்கள், விளம்பரதாரர்கள் என அனைவரையும் நன்றியுடன் நினைவுகூருகிறோம். விடிவெள்ளியின் பயணம் மேலும் வினைத்திறனுடன் தொடர வாசகர்களின் பிரார்த்தனைகளையும் தொடர்ச்சியான ஆதரவையும் வேண்டி நிற்கிறோம். அல்லாஹ் நமது தூய பணிகளை அங்கீகரிப்பானாக.-Vidivelli