பலஸ்தீனுக்காக குரல் எழுப்புவோம்

0 908

பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம் வருடாந்தம் நவம்பர் 29 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இன்றைய நாளில் நாமும் பலஸ்தீன மக்கள் 70 ஆண்டுகளாக அனுபவித்துவரும் அடக்குமுறைகள் குறித்து கவலை கொள்வதுடன் அவர்களது போராட்டம் வெற்றி பெறப் பிரார்த்திப்பதும் நம்முன்னுள்ள கடப்பாடாகும்.

1948 ஆம் ஆண்டு இஸ்ரேலினால் பலஸ்தீனியர்களின் பூமி கைப்பற்றப்பட்டது. பலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டு தமது மண்ணில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப் பட்டனர். அவர்களின் வீடுகள் மற்றும் பண்ணைகள் கைப்பற்றப்பட்டன. இதை எதிர்த்து அவர்கள் தமது அயல் நாடுகளின் உதவியுடன் மரபு ரீதியான யுத்தம் ஒன்றில் ஈடுபட முயற்சித்தனர். ஆனால் இஸ்ரேலின் நண்பர்கள் இந்த முயற்சி தோல்வியடைவதை உறுதி செய்தனர். மேலும் அதிக பலஸ்தீனிய நிலம் சூறையாடப்பட்டது. பலஸ்தீனியர்களின் பூமியில் அதிகமதிகம் இஸ்ரேலியக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் தமது பூமியில் அமைக்கப்பட்ட இந்தக் குடியேற்றங்களுக்கு செல்வதற்கு பலஸ்தீனியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பலஸ்தீனியர்கள் ஆரம்பத்தில் கற்களையும் கவண்களையும் கொண்டு போராட முயற்சித்தனர். அவர்கள் துப்பாக்கிக் குண்டுகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதுடன் கைது செய்யப்பட்டார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர். அதனால்தான் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.

இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறினால், சர்வதேசக் கடற்பரப்பில் உணவு, கட்டடப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை காவிச் செல்லும் கப்பல்களைக் கைப்பற்றினால் கூட உலகு அதைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை. பலஸ்தீனியர்கள் எவருக்கும் ஊறு விளைவிக்காத ரொக்கட்டுகளை ஏவும் பொழுது பாரிய எதிர்த்தாக்குதல்களைத் தொடுக்கும் இஸ்ரேல், ரொக்கட்டுகளாலும் குண்டுகளாலும் வைத்தியசாலைகள், பாடசாலைகள் மற்றும் ஏனைய கட்டடங்களை தரைமட்டமாக்குவதுடன் சிறுவர்கள், வைத்தியசாலை நோயாளிகள் உட்பட பெருந்தொகையான அப்பாவிப் பொது மக்களைக் கொன்று குவிக்கின்றது.  இவற்றை மேற்கொள்ளும் இஸ்ரேலுக்கு உலகு ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக ஏற்றுக் கொண்டு பரிசளிக்கின்றது.

இந் நிலை மாற்றப்பட்டு, சகல உலக நாடுகளும் பலஸ்தீனை அங்கீகரிக்க முன்வர வேண்டும். இதுவரை பலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்காத நாடுகள் அனைத்தும் நீண்ட கால நிலுவையில் உள்ள இந்த அங்கீகாரத்தை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை துரிதப் படுத்த வேண்டும். சில நாடுகள் பலஸ்தீனை அங்கீகரிப்பதை தொடர்ச்சியாக தாமதப் படுத்துவதற்கு நியாயமான காரணங்களை எம்மால் காண முடியவில்லை. ஆனால் அவை சட்டவிரோத இஸ்ரேலை அங்கீகரிக்கின்றமை கவலைக்குரியதாகும்.

இதேவேளை தனது 1917 ஆம் ஆண்டைய பல்போர் பிரகடனத்தின் விளைவாக பலஸ்தீன மக்களின் நீண்ட கால துன்பங்கள் மற்றும் இடம்பெயர்வு ஆகியவற்றுக்கு சட்ட ரீதியான மற்றும் தார்மீக ரீதியான பொறுப்பைக் கொண்ட பிரிட்டிஷ் அரசு  அந்த வரலாற்றுத் தவறை பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிப்பதன் மூலம் நிவர்த்தி செய்ய வேண்டும். அதன் மூலம் பலஸ்தீன மக்களின் நீண்ட கால வலி மற்றும் துன்பங்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும். ஐக்கிய இராச்சியத்துடன் ஒத்துழைத்து பல்போர் பிரகடனத்தை உறுதியாக ஆதரித்த ஐக்கிய அமெரிக்காவும் இதனை மேற்கொள்ள வேண்டும். அதுவே பலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அடிப்படைத் தீர்வாக அமைய முடியும்.

இது இவ்வாறிருக்க, அண்மைக்காலமான இலங்கை பலஸ்தீன விவாகரத்தில் நழுவல் போக்கொன்றை கடைப்பிடிப்பதையும் அவதானிக்க முடிகிறது. முன்னர் பலஸ்தீனுக்காக சர்வதேச அரங்கிலும் உரத்துக் குரல் கொடுத்த இலங்கை, அண்மைக் காலங்களில் ஐ.நா. அமர்வுகளில் பலஸ்தீனுக்கு ஆதரவளிப்பதிலிருந்தும் தவிர்ந்து கொண்ட நிகழ்வுகள் கவலை தருபவையாகும்.

எனினும் இலங்கையிலுள்ள பலஸ்தீன ஒருமைப்பாட்டு இயக்கம், பலஸ்தீன விடுதலைக்காக தொடர்ச்சியாகவும் தைரியமாகவும் குரல் கொடுத்து வருவது பாராட்டுக்குரியதாகும். இந்தப் பணி மேலும் வீரியமுறுவதுடன் இலங்கையில் வாழுகின்ற சகல மக்களும் பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் ஆதரவாளர்களாக மாற வேண்டும் என இன்றைய நாளில் கோரிக்கை விடுக்க விரும்புகிறோம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.