பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷ அமெரிக்கப் பிரஜையல்ல, இலங்கை பிரஜை என்பதற்கான உரிய ஆவணங்கள் காணப்படுகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை உறுப்பினர்கள் தற்போது அமெரிக்க குடியுரிமையினை தொடர்புபடுத்தி வெளியிடும் கருத்துக்கள் முற்றிலும் பொய்யானதென ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
கிங்ஸ்பெரி ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐனாதிபதி தேர்தல் இடம் பெறவுள்ள நிலையில் தற்போது பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷவை தொடர்புபடுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை உறுப்பினர்கள் தவறான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்கள்.
ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்ற மறுநாள் அதாவது, 17ஆம் திகதி காலை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷ அமெரிக்கா செல்வதற்கு விமானப் பயணச்சீட்டை பெற்றுள்ளார் என்றும், அவர் இதுவரையில் அமெரிக்க குடியுரிமையினை இரத்து செய்யவில்லை, குடியுரிமை இரத்து செய்தவர்களின் பெயர் விபர பட்டியலில் இவரது பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை அரசியல் தேவைகளை கருத்திற் கொண்டதாகக் காணப்படுகின்றன.
நவம்பர் மாதம் 17ஆம் திகதி காலை அமெரிக்கா செல்வது தொடர்பான செய்தியை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷ வெளிநாட்டுக்கு செல்ல வேண்டுமாயின் அதற்கு நீதிமன்றத்தின் அனுமதி அவசியமாகும். இன்றும் அவர் தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளதால் அவரது பிரயாண கடவுச்சீட்டு நீதிமன்ற வசமுள்ளதுடன், பயணத் தடையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பெற்றுக் கொள்ளப்பட்டதாக வெளியிடப்பட்ட பயணசீட்டு வழமையாக அவர் பெற்றுக் கொள்ளும் நிறுவனத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டதல்ல. மறுபுறம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் என்று எழுதப்பட்டிருப்பதிலும் எழுத்துப் பிழைகள் காணப்படுகின்றன. ஆகவே, இந்தக் குற்றச்சாட்டும் பொய்யானதென நிரூபிக்கப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷவின் அமெரிக்க குடியுரிமையினை அடிப்படையாகக் கொண்டு பல சட்ட சிக்கல் நிலைகளை அரசாங்கம் கடந்த காலங்களில் ஏற்படுத்தியது . அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டமையினை தொடர்ந்தே அரசாங்க தரப்பினர் அவர் இலங்கை பிரஜையல்ல என்ற வழக்கினை நீதிமன்றில் தாக்கல் செய்தார்கள். அவ்விடயத்திலும் அரசாங்கம் தோல்வியடைந்தது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 07ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க முன்னர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட ஆணைக்குழுவின் முக்கிய தரப்பினருக்கு அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டமைக்கான மூலப் பிரதிகள் அனைத்தும் காண்பிக்கப்பட்டன. இவ்விடயத்தில் ஆணைக்குழு திருப்திடைந்ததன் பிறகே வேட்புமனு சமர்ப்பிக்கப்பட்டது.
வேட்புமனுத்தாக்கல் சமர்ப்பிக்கப்பட்ட வேளை அரசாங்க தரப்பினரும் சிவில். அமைப்புக்களும் அமெரிக்க குடியுரிமை தொடர்பில் எவ்வித கேள்விகளையும் எழுப்பவில்லை. மாறாக, தற்போது தேர்தல் இடம்பெறவுள்ள தருணத்தில் மீண்டும் பிரச்சினைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. மக்கள் மனங்களில் தவறான ஒரு நிலைப்பாட்டை தோற்றுவிக்கும் விதமாகவே இவை காணப்படுகின்றன. இது முற்றிலும் ஜனநாயகத்திற்கு முரணான செயற்பாடாகும். தமக்கான தலைவரை நாட்டு மக்கள் தெரிவு செய்வதற்கு இடமளிக்க வேண்டும்.
அமெரிக்க குடியுரிமையினை இரத்து செய்வதற்கான கோரிக்கையை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ 2019.04.17ஆம் திகதி இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் விடுத்தார். இந்தக் கோரிக்கையை மீளாய்வு செய்யும் விதமாக வெளிவிவகார அமைச்சுக்கு பணிக்கப்பட்டதை தொடர்ந்து உரிய நடவடிக்கைகள் சட்ட ரீதியில் முறையாக மேற்கொள்ளப்பட்டன. 2019.05.03ஆம் திகதி கோத்தாபய ராஜபக் ஷ இலங்கை பிரஜையே தவிர அமெரிக்கப் பிரஜையல்ல என்பதற்கான ஆவணங்கள் வெளிவிவகார அமைச்சின் ஊடாகக் கிடைக்கப்பெற்றன.
2012ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமையினை அடிப்படையாகக் கொண்டு பெற்றுக் கொள்ளப்பட்ட அமெரிக்க நாட்டுக்கான கடவுச்சீட்டு 2022ஆம் ஆண்டு வரையில் செல்லுபடியானது. ஆனால் அந்தக் கடவுச்சீட்டு கடந்த ஏப்ரல் மாத காலப்பகுதியில் இரத்து செய்யப்பட்டு மீண்டும் இலங்கை நாட்டு பிரஜை என்பதற்கான கடவுச்சீட்டும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கடவுச்சீட்டு, ஆளடையாள அட்டை தொடர்பில் எழுப்பப்பட்ட தர்க்கங்கள் அனைத்திற்கும் சட்டத்தின் ஊடாகவே தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டது.
அமெரிக்க குடியுரிமையினை இரத்து செய்தவர்களின் பெயர் பட்டியலை அமெரிக்க அரசாங்கம் ஒவ்வொரு காலாண்டிற்கும் வெளியிடும். அதில் கோத்தாபய ராஜபக் ஷவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆதலால் அவர் இன்னும் அமெரிக்க பிரஜை என்ற கருத்து ஆளும் தரப்பினரால் முன்வைக்கப்படுகின்றது. பெயர் பட்டியலில் பெயர் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது அவசியமல்ல, குடியுரிமையினை இரத்து செய்வதற்கான அனைத்து மூலப்பிரதி ஆவணங்களும் எம்மிடம் உள்ளன.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷவின் அமெரிக்க குடியுரிமை தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், நிதியமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் கடினமான காரியமல்ல. அரசாங்கம் என்ற ரீதியில் அதிகார பூர்வமாகவே செயற்படலாம். அமெரிக்க குடியுரிமை விவகாரத்தில் எவ்வித நெருக்கடிகளும் கிடையாது என்பதாலே அவர்கள் எவ்வித நடவடிக்கைகளையும் இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுக்கவில்லை.
அமெரிக்க குடியுரிமை தொடர்பில் தற்போது அமைச்சரவை உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்தின் இயலாமையினையே வெளிப்படுத்துகின்றது. அரசியல் சூழ்ச்சிகளுக்கு நாட்டு மக்கள் கவனம் செலுத்த வேண்டாம். ஊடகங்கள் ஊடாக அனைத்து ஆவணங்களும் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. தவறான பிரசசாரங்களுக்கு ஏமாற்றமடைய வேண்டாம்.-VIdivelli