“நாட்டின் எதிர்காலம் இன்று அனைவரது கைகளிலுமே உள்ளது. நாட்டில் மீண்டும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறக் கூடாது. அரசியல் தலைவர்கள் முழுமையாக இனவாதத்திலிருந்து விடுபட வேண்டும்” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் சம்மேளனத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேபோன்றுதான் ஏப்ரல் 21 தாக்குதல்களுடன் தொடர்புடைய முஸ்லிம் இளைஞர்கள் ஏன் இவ்வாறானதொரு கடினமான பாதையை தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்கான காரணத்தையும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
” ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்கள் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள், அவர்கள் உளவியல் ரீதியில் பாதிப்படைந்துள்ள மையினையும், கடந்த அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
அதாவது 2014 ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான கலவரம் எம்மை பெரிதும் பாதித்தது. தற்கொலை குண்டுதாரியாக மாறியேனும் உரிமைகளை வென்றெடுக்க தீர்மானித்தோம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளமைக்கு கடந்த அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். 2015 ஆம் ஆண்டுக்கு பிறகும் இனக்கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டமையானது அரசியல் அதிகாரத்தை பெற்றுக் கொள்ள ஒரு தரப்பினர் இட்ட ஆரம்ப அடித்தளம் என்றே கருத வேண்டும். நாட்டில் இன வன்முறைகளற்ற சமூகம் தோற்றம் பெற வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகவுள்ளது” என்றும் அவர் தனதுரையில் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதியின் இந்த இரு கருத்துக்களும் கவனிப்புக்குரியதாகும்.
நாட்டின் எதிர்காலத்தை அரசியல்வாதிகளின் கைகளில் மாத்திரம் நாம் ஒப்படைத்துவிட முடியாது. மாறாக நம் அனைவருக்கும் அதில் பொறுப்புள்ளது. அந்த பொறுப்பை சரிவர நிறைவேற்றுவதற்கான காலமே இதுவாகும். எதிர்வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நாம் அளிக்கவுள்ள வாக்குகள் ஒவ்வொன்றுமே நமது அந்தப் பொறுப்பை சரிவர நிறைவேற்றுவதாக அமைய வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க குறிப்பிட்ட அடுத்த விடயம்தான் முஸ்லிம் இளைஞர்கள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறியமைக்கான காரணியாகும். 2014 அளுத்கம சம்பவம் முதல் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைகளை தடுத்து நிறுத்தவும் முஸ்லிம் சமூகத்திற்கு உரிய பாதுகாப்பை வழங்கவும் ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுவே முஸ்லிம் இளைஞர்களில் ஒருசாராரை தீவிரவாத த்தின்பால் தள்ளியது. சில தீய சக்திகள் அவ்விளைஞர்களை மூளைச்சலவை செய்து குண்டுகளை கொடுத்து ஏப்ரல் 21 அவலத்தை அரங்கேற்றினர்.
ஆக, அரசாங்கங்களின் செயற்றிறனின்மையும் அரசியல்வாதிகள் மத்தியில் குடிகொண்டுள்ள இனவாதமும் இந்த நாட்டுக்கு பெரும் சாபக்கேடாகும். இதுவே சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இனக்குரோதங்கள் வளரக் காரணமாக அமைந்துள்ளது. இந்த அபாயத்திலிருந்து நாட்டை விடுவிக்க வேண்டியதே புதிதாக தெரிவு செய்யப்படவுள்ள ஜனாதிபதி முன்னுள்ள பாரிய சவாலாகும்.
இந்த நாட்டில் தற்போதுள்ளவர்களில் இனவாத முத்திரை குத்தப்படாத ஒரு சிரேஷ்ட தலைவர் என்ற வகையில் சந்திரிகா குமாரதுங்கவின் மேற்படி கருத்துக்களை, அவரது அரசியல் நிலைப்பாடுகளுக்கப்பால் சகல தரப்புகளின் அரசியல்வாதிகளும் கவனத்திற் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அதுமாத்திரமன்றி எதிர்வரவுள்ள தேர்தலில் மக்கள் தமது கடமையை சரிவரச் செய்ய வேண்டும். நமது வாக்குகள் இனவாத சக்திகளை பலப்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது. இந்த நாட்டில் இதன் பின்னரும் இன வன்முறைகள் இடம்பெறாதவாறு உறுதிப்படுத்துவதற்கான வாக்குகளாக நமது வாக்குகள் அமைய வேண்டும்.-Vidivelli