தமிழ், முஸ்லிம், சிங்கள, கிறிஸ்தவ மக்கள் எல்லோரும் சுதந்திரமாக அவரவர்களுடைய உரிமைகளை பெற்றுக் கொள்ளக்கூடியவாறு ஒரு யாப்பை உருவாக்க வேண்டும். அதிகாரப் பகிர்வு என்கின்ற பெயரில் ஒவ்வொரு நாட்டிற்கும் தேவையானவாறு இந்த நாட்டைத் துண்டாட இடமளிக்க முடியாதென முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா கூறினார்.
ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷவை ஆதரித்து அக்கரைப்பற்று காதிரியாவில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்படி கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், மாகாண திருத்தச் சட்டம்கூட இந்தியாவினுடைய அழுத்தத்தினால் கொண்டுவரப்பட்டது. நாங்கள் மாகாண சபை கேட்கவில்லை. இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் மக்களும் சிங்கள மக்களும் மாகாணசபை கேட்கவில்லை. நான் இதனை பல அரசியல் தலைவர்களிடம் சொன்னேன் சிங்கள மக்கள் 55 வீதமாக இருந்து ஏனைய சிறுபான்மையினர் 45 வீதமாக இருந்தால் சிங்கள மக்களும், தலைவர்களும் பயப்படுவததில் அர்த்தமிருக்கிறது. ஆனால் சிங்கள மக்கள் 70 வீதம் வாழ்கிறார்கள். ஏனையவர்கள் 30 வீதம் வாழ்கிறார்கள். அப்படியிருந்தால் ஏன் 70திற்குரிய விகிதாசாரம் 30திற்குரிய விகிதாசாரத்தையும் நாங்கள் ஏன் பேண முடியாது? இதைவிட இந்த நாட்டை வாழவைப்பதற்கு என்ன இருக்கிறது என்று நமது பாலமுனை பிரகடனத்திலே சொன்ன விடயங்களை நாங்கள் அங்கே கொடுத்திருக்கிறோம்.
எமக்கு ஒன்றும் வேண்டாம் நாட்டை மீட்ட தலைவனுக்கு சிங்கள மக்கள் வாக்குப் போடுகிறார்கள். முஸ்லிம்கள் போடவில்லை. நம்மை ஒரு இனத் துவேசியாக நன்றி கெட்டவர்களாக பார்ப்பதற்கு எப்பொழுதும் பெரும்பாலும் சிங்கள மக்கள் இருக்கின்ற எமது பக்கத்தில் முஸ்லிம் தலைவர்கள் எம்மை வாக்கு போடவைக்க மாட்டார்கள். எமது முஸ்லிம் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வாக்களியுங்கள். நமது கண் முன்னே பொலிசாரும் அரசாங்கமும் பார்த்துக் கொண்டிருந்தபோதே அம்பாறை பள்ளிவாசல் உடைக்கப்பட்டது. திகனையில் அடித்துக் கொண்டே இருந்தார்கள். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவேதான் நாம் நன்றியுணர்வோடு இல்லாமல் போனதற்காக அதுவும் ஒரு காரணமாக நமக்காக நாட்டை மீட்டுத்தந்தவனுக்குச் செய்த அநியாயத்தை புரியவைப்பதற்காக நமது மக்கள் நமது கண் முன்னே விரட்டி நாய் போல் உதைக்கப்பட்டார்கள். இதனுடைய பொறுப்பை விதைத்தவர்கள் எடுக்கவேண்டும்.
இப்பொழுது ரணில் விக்கிரமசிங்கவும் அதனை அறுவடை செய்து கொண்டு வருகின்றார். உண்மை பேசுவதற்கு எதற்குப் பயப்பட வேண்டும். கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் முழு இலங்கையிலும் 62 வீதமான வாக்குகளை பெற்று எல்லா வட்டாரங்களையும் வென்ற ஒரு பெருமை இந்த தேசிய காங்கிரசின் அக்கரைப்பற்று மாநகரசபை மற்றும் பிரதேசசபைக்கும் இருந்தது. அதற்கு சொந்தக்காரர்கள் நீங்கள். நீங்கள் ஒரு போதும் துரோகம் செய்பவர்கள் அல்ல. ஆகவேதான் இன்னுமொரு வரலாற்றுக் காலத்தில் தோல்வி காணாத நாம் இன்றைக்கு அதாஉல்லா அணியினரின் மேடையில் அந்த அணியினரின் பேச்சு மட்டும்தான் உண்மையாக இருக்கிறது என்று சிங்கள மக்களும், தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் குறிப்பாக, கிழக்கிலங்கையின் முஸ்லிம்கள் சாரை சாரையாக தேசிய காங்கிரசின் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்கிறார்கள். இது நமது வெற்றி இல்லையா? பாராளுமன்றத் தேர்தலை விடவும் ஜனாதிபதித் தேர்தலே முக்கியமானது ஏன் தெரியுமா பாராளுமன்றத்தில் நாங்கள் இல்லாவிட்டாலும் நாட்டை பாதுகாக்கக் கூடிய உரிய ஒருவருடைய கையில் நாட்டை கொடுக்க வேண்டும். 2005 இல் நாம் கொடுத்தோம் வாழவைத்துக் காட்டினார். ஆகவே வரலாற்றில் இது முக்கியமான விடயமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.-Vidivelli
- அக்கரைப்பற்று மேலதிக நிருபர்