4 வருடங்களில் 15 எம்.பி.க்கள் மட்டுமே 90 வீத பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பு
முஜிபுர் ரஹ்மானும் இம்ரான் மஹ்ரூபும் உள்ளடக்கம்
2015 ஆம் ஆண்டு முதல் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் வரையிலான 4 வருடங்களில் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் 15 எம்.பி.க்கள் மட்டுமே 90 வீதமான அமர்வுகளில் பங்கேற்றுள்ளனர்.
‘மன்த்ரி டொட் எல்கே’ இணையத்தளம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் உள்ளிட்ட 11 ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருமே இவ்வாறு 90 வீதத்திற்கும் மேற்பட்ட பாராளுமன் அமர்வுகளில் பங்கேற்றுள்ளனர்.
கடந்த நான்கு வருடங்களில் 387 பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் அதிகூடுதலான பாராளுமன்ற அமர்வுகளில் (378) பேராசிரியர் ஆசுமாரசிங்க கலந்துகொண்டுள்ளார். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் 374 அமர்வுகளில் பங்குபற்றி 4 ஆவது இடத்திலும் இம்ரான் மஹ்ரூப் 358 அமர்வுகளிலும் கலந்துகொண்டு 9 ஆவது இடத்திலும் உள்ளனர்.
அத்துடன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாச, அமைச்சரும் ஆளும் கட்சி பிரதமகொறடாவுமான கயந்த கருணாதிலக்க இரண்டாம் மூன்றாம் இடங்களிலும் உள்ளனர். ஐந்தாம் இடத்தில் சபை முதல்வர் லக் ஷ்மன் கிரியெல்லவும் தினேஷ்குணவர்தன, லசந்த அழகியவண்ண, ஹெக்டர் அப்புஹாமி ஆகியோர் அடுத்தடுத்து இருக்கின்றனர். 10 ஆம் இடத்தில் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் நிஹால் கலபதியும் ஜே.சி.அலவத்துவல, பந்துல குணவர்தன, சபாநாயகர் கருஜயசூரிய, சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி துஷிதா விஜேமன்ன ஆகியோர் அடுத்த இடங்களில் இருக்கின்றனர்.
இவேவேளை, ஆறுமுகம் தொண்டமான், திலும் அமுனுகம, பிரேமலால் ஜயசேகர, ரொஷான் ரணசிங்க மற்றும் சிறிபால கம்லத் ஆகிய 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் 30 வீதத்திற்கும் குறைவான அமர்வுகளில் பங்கேற்றுள்ளனர்.
இதுதவிர, மந்திர டொட் எல்.கே. வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தரப்படுத்தலில் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களே முதல் 4 இடங்களையும் பிடித்துள்ளனர். அத்துடன், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. 22 ஆவது இடத்திலும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் 33 ஆவது இடத்திலும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் 51 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli