சுதந்திரக் கட்சியை அழிக்கும் மஹிந்தவின் திட்டத்தை தொடர்கிறார் மைத்திரி
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றச்சாட்டு சஜித்தின் கொள்கை திட்டம் சிறப்பானது என்றும் சுட்டிக்காட்டு
இரு பிரதான வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனத்தை பரிசீலிக்கும் போது புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித்தின் கொள்கை திட்டம் சிறப்பானது. ஆனால் தனி நபர் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் தொடர்பான கோத்தாபயவின் கொள்கைகள் நகைப்பிற்குரியதாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
7 தடவை கட்சி தாவியவர் எமக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றார். அதனை எதிர்கொள்ள தயாராகவே உள்ளேன். சு.க. வை திட்டமிட்டு மஹிந்த ராஜபக் ஷ அழிக்க முயற்சிக்கையில் அதற்கு சாதமான சூழலை 2015 ஆம் ஆண்டிற்கு பின்னர் மைத்திரி ஏற்படுத்திக்கொடுத்தார். மொட்டுடன் கூட்டணியமைத்தமை கட்சியில் ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானமல்ல எனவும் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது. இதன்போதே சந்திரிக்கா குமாரதுங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
நாடு அரசியல் ரீதியிலும், பொது மக்களின் வாழ்வியல் ரீதியிலும் தீர்மானங்களை முன்னெடுக்கும் தீர்க்கமாக தருணத்தில் தற்போது உள்ளது. இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் கொள்கை பிரகடனத்தில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்துள்ளேன். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷ வெளியிட்டுள்ள தேர்தல் கொள்கை பிரகடனத்தில் மனித உரிமைகளுக்கும், மக்களின் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளமை பெரும் நகைப்பிற்குரியதாக காணப்படுகின்றது.
10வருட கால குடும்ப ஆட்சியில் மனித உரிமைகளும், மக்களின் பாதுகாப்பும் எவ்வாறு காணப்பட்டது என்பதை நாட்டு மக்கள் இன்றும் மறக்கவில்லை. சிலர் தங்களின் சுய நல அரசியல் தேவைகளுக்காக இன்று பக்கச்சார்பாக செயற்படுகின்றார்கள். கோத்தாபய ராஜபக் ஷ எவ்வாறு மனித உரிமைகளையும், பொது மக்களின் சுதந்திரத்தினையும் பாதுகாப்பார் என்பதை முறையாக குறிப்பிட வேண்டும். தேசிய நிதி மோசடிக்கும், முறையற்ற அரச நிர்வாகத்திற்கும் கடந்த அரசாங்கமே துணை போயுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைமை
வரலாற்று பாரம்பரிய பின்னணியை கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை 2015ம் ஆண்டுக்கு பிறகு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவுமே இல்லாதொழித்தார்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவிக்கு தான் மீண்டும் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற குறுகிய தேவைகளுக்காக தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறி கட்சிக்கு மீண்டும். பாரிய நெருக்கடியினையும், அவப்பெயரினையும் ஏற்படுத்தினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திர கட்சியை மாத்திரமன்றி ஒட்டுமொத்த அரச செயலொழுங்கினையும் மோசடி செய்தார்.
மறுபுறம் 7 முறை ஒவ்வொரு கட்சிகளிலிருந்து கட்சி தாவலினை மேற்கொண்டு தற்போது சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளராக செயற்படும் தயாசிறி ஜயசேகரவின் முறையற்ற செயற்பாடுகளினால் கட்சி முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ 03 முறை அரசியல் சூழ்ச்சியினால் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பலவீனப்படுத்தினார் தற்போது பொதுஜன பெரமுன என்ற கட்சியை உருவாக்கி சுதந்திர கட்சியை இன்று ஒரு பாரிய நெருக்கடிக்குள் தள்ளியள்ளார். இதற்கு சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பலவீனமே பிரதான காரணம். சுதந்திர கட்சியின் ஆலோசகராக பெயரளவிலே நியமிக்கப்பட்டேன். தற்போது கட்சியை முழுமையாக ஜனாதிபதியும், பொதுச்செயலாளரும் இல்லாதொழித்து விட்டு சுதந்திர கட்சியின் தலைவர் ஏதும் அறியாதவர் போல் சுதந்திர கட்சிக்கு பதில் தலைவர் ஒருவரை நியமித்து விட்டு ஓய்வெடுத்துக் கொள்கின்றார். சுதந்திர கட்சியில் பதில்தலைவர் என்ற பதவியே கிடையாது. கட்சியின் அரசியலமைப்பிற்கு முரணாகவே ஜனாதிபதி பதில் தலைவரை நியமித்துள்ளார்.
ஜனாதிபதியின் முறையற்ற செயற்பாடுகளினால் சுதந்திர கட்சி இன்று பலவீனமடைந்துள்ளது. பொதுஜன பெரமுனவுடன் இவர்கள் கூட்டணியமைத்துள்ளது கூட சட்டத்திற்கும், கட்சியின் கொள்கைக்கும் முரணானதாகவே காணப்படுகின்றது. பாதிக்கப்பட்டுள்ள சுதந்திர கட்சியின் உறுப்பினர்களை பாதுகாக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. அதன் காரணமாகவே சுதந்திர கட்சியை பாதுகாக்கும் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளேன்.
2015ஆம் ஆண்டு தேசிய அரசாங்கத்தில் சுதந்திர கட்சி இணைந்தமையே கட்சியை பலவீனப்படுத்தியது என்று குறிப்பிடுவது முற்றிலும் தவறானதாகும். 2015ம் ஆண்டில் இருந்து இன்று வரை ஐக்கிய தேசிய கட்சி சுதந்திரக் கட்சியை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை. இதனை எவ்வித்திலும் ஆதாரபூர்வமாக குறிப்பிடுவேன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே கட்சியை பலவீனப்படுத்தினார். பலவீனத்தை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ முறையாக பயன்படுத்திக் கொண்டார்
ஒழுக்காற்று நடவடிக்கை
எனக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கும் எதிராக சுதந்திர கட்சியின் தலைவர் அல்ல பொதுச்செயலாளருக்கு கூட ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது. ஒருவேளை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அதனை சட்டத்தின் ஊடாகவே வெற்றி கொள்வேன் ஒருபோதும் குறுக்கு வழியில் செல்லமாட்டேன்.
அரசியல் கொள்கை
அரசியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு 40 வருடத்திற்கும் அதிகமான காலம் அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றேன். இரண்டு பிரதான ஜனநாயக கொள்கையினை கொண்ட அரசியல் கட்சிகள் கூட்டணியின் ஊடாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற நோக்கம் ஆரம்ப காலத்தில் இருந்து காணப்படுகின்றது. நான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் அதற்கான முயற்சிகளை ஐக்கிய தேசிய கட்சியுடன் முன்னெடுத்தேன் ஆனால் அவை தோல்வியில் முடிந்தது.
2015 ஆம் ஆண்டு குடும்ப ஆட்சியினை இல்லாதொழித்து ஜனநாயகத்திற்கு மதிப்பு கொடுக்கும் அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும் என்ற குரல் எழும்பியது. தனித்து குடும்ப ஆட்சியினை இல்லாதொழிக்க முடியாது. ஆகையால் கூட்டணியமைத்து தேசிய அரசாங்கத்தினை தோற்றுவிப்போம் என்று தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளராக செயற்பட்ட மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கினோம்.
ஐக்கிய தேசிய கட்சியும் ஜனநாயகத்திற்கு முன்னுரிமை கொடுத்தாலும் பல விடயங்களில் தவறிழைத்துள்ளது அதற்கு பல அரசியல் காரணிகள் செல்வாக்கு செலுத்தின. கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு கூட்டணியமைக்கப்பட்ட தேசிய அரசாங்கத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தனது சுயநல அரசியலுக்காக இல்லாதொழித்தார். 2015 ஆம் ஆண்டு இவரை பொதுவேட்பாளராக நியமிக்க பரிந்துரைத்தமைக்கு இன்று நான் வருந்துகின்றேன்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள கொள்கை பிரகடனம் ஏற்றுக் கொள்ளக் கூடியது. தேசிய பொருளாதாரத்தினையும், தேசிய நல்லிணக்கத்தினையும் எவ்வாறு மேம்படுத்துவது என்பது தொடர்பில் தெளிவுற குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும், சுதந்திர கட்சியை பாதுகாக்கும் நோக்கிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊடாக ஆதரவு வழங்கியுள்ளேன். ஒப்பந்த பத்திரங்களில் ஒருபோதும் அரச நிர்வாகம் தனித்து செயற்பட முடியாது என்று குறிப்பிட்டுள்ளமை அனைவரது உரிமைகளுக்கும், கருத்துக்களுக்கும் முன்னுரிமை கொடுப்பதாக அமைகின்றது.
எதிர் தரப்பின் கொள்கை திட்டம் நகைப்பிற்குரியது கடந்த அரசாங்கத்திலே தேசிய நிதி மோசடி, ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகள் அனைத்தும் பகிரங்கமாக முன்னெடுக்கப்பட்டன. மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சி காலத்திலே மந்த போசனையால் பாதிக்கப்பட்டவர்களின் வீதம் அதிகரித்தது. அத்துடன் கல்வி நிலைமையும் வீழ்ச்சியடைந்தது. மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி ஐக்கிய தேசிய கட்சியால் இடம் பெற்றது என்பதை மறுக்க முடியாது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் இதை விட பல மடங்கு தேசிய நிதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிகாலத்தில் இடம் பெற்றுள்ளது.
அதை பற்றி அரசியல் மேடைகளில் எவரும் கருத்துரைப்பது இல்லை. அதிகாரம் இல்லாமல் அரச நிதியினை மோசடி செய்ய முடியாது என்பதை அறிந்தே மஹிந்த தரப்பு போராடுகின்றார்கள். அதற்கு இன்று சுதந்திர கட்சியின் ஒரு தரப்பினர் ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள். கட்சிக்கு இழுக்கினையே இவர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்.
தனிப்பட்ட பகைமை
மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது உள்ள தனிப்பட்ட பகைமை காரணமாகவே தற்போது அரசியலில் அவர்களுக்கு எதிராக செயற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, டலஸ் அழகப்பெரும ஆகியோர் குறிப்பிட்டுக் கொள்கின்றார்கள் இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்.
மஹிந்த ராஜபக் ஷவின் குடும்பத்தின் மீது கடும் கோபமும், பகைமையும் உண்டு அது எனது தனிப்பட்ட விடயமாகும். எனது குடும்பத்தினையும், கட்சியையும், நாட்டையும் இல்லாதொழித்தமைக்கு ஆனால் தனிப்பட்ட பகைமையினை ஒருபோதும் அரசியலில் செலுத்தவில்லை. அதிகாரம் கைக்கு வந்தவுடன் மஹிந்த ராஜபக் ஷவே பழிவாங்கலினை மேற்கொண்டார். விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் என்னை கொல்வதாக அறிக்கை விட்டதை தொடர்ந்து எமது பாதுகாப்பினை பலப்படுத்துமாறு பாதுகாப்பு சபை பலமுறை குறிப்பிட்டும் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ முன்னெடுக்கவில்லை. 300ஆக இருந்த பாதுகாப்பு தரப்பினர் 150 ஆக குறைக்கப்பட்டார்கள். பின்னர் தொடர்ந்து 20ஆக குறைக்கப்பட்டு முழுமையாகவே பாதுகாப்பு இல்லாதொழிக்கப்பட்டது. இதனை சர்வதேச நாடுகளுக்கு தெரியப்படுத்தியே எனது பாதுகாப்பினை மீண்டும் பலப்படுத்திக் கொண்டேன்.
2015 ஆம் ஆண்டு ஆட்சியதிகாரம் என்னிடம் இல்லாமல் இருந்தது ஆனால் அதிகாரம் செலுத்தும் பலம் காணப்பட்டது. ஆனால் அதனை நான் ஒருபோதும் தனிப்பட்ட பகைமைக்காக பயன்படுத்திக் கொள்ளவில்லை. தற்போதும் கோத்தாபய ராஜபக் ஷவின் பாதுகாப்பிற்கு 400 பாதுகாவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றார்கள். ஆனால் அவரே தேசிய பாதுகாப்பினை பலப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொள்கின்றார்.
தற்போது மஹிந்த ராஜபக் ஷவின் குடும்பத்தின் மீது பகைமை கொள்வதற்கு எவ்வித அடிப்படை காரணிகளும் கிடையாது. என்னை விடவும், எனது பிள்ளைகளை விடவும் கல்வி அறிவில் தேர்ச்சி பெற்றவர்கள் எவரும் அவரது குடும்பத்தில் கிடையாது. ஆகவே அடிப்படை காரணிகள் இல்லை பகைமை கொள்வதற்கு.
நாட்டின் எதிர்காலம் இன்று அனைவரது கையிலும் உள்ளது நாட்டில் மீண்டும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறக் கூடாது. இனவாதம் முழுமையாக அரசியல் தலைவர்களின் மத்தியில் இருந்து விடுபட வேண்டும்.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்கள் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் உளவியல் ரீதியில் பாதிப்படைந்துள்ள மையினையும், கடந்த அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளையும் வெளிப்படுத்தியுள்ளது.
அதாவது 2013 ஆம் ஆண்டு நாட்டில் இடம் பெற்ற முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனக்கலவரம் எம்மை பெரிதும் பாதித்தது. தற்கொலை குண்டுதாரியாகியாவது உரிமைகளை வென்றெடுக்க தீர்மானித்தோம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளமைக்கு கடந்த அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். 2015 ஆம் ஆண்டுக்கு பிறகும் இனக்கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டது அது அரசியல் அதிகாரத்தை பெற்றுக் கொள்ள ஒரு தரப்பினர் இட்ட ஆரம்ப அடித்தளம் என்றே கருத வேண்டும். நாட்டில் இன வன்முறையற்ற சமூகம் தோற்றம் பெற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது. பாரிய போராட்டத்தின் மத்தியில் குடும்ப ஆட்சியில் இருந்து வென்றெடுத்த ஜனநாயகம் மீண்டும் அழிவடைவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.-Vidivelli