எதிர்வரும் பதினாறாம் திகதி இலங்கையில் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறுபவர் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார். இதற்கு முன் நடந்த ஏழு ஜனாதிபதி தேர்தலை விட இம்முறை நடைபெறவுள்ள தேர்தல் சற்று வித்தியாசமானதாக உள்ளது. ஆகக் கூடுதலான முப்பத்தைந்து வேட்பாளர்கள் போட்டியிடும் அதேநேரம் தற்போது பதவியில் உள்ள ஜனாதிபதியோ, பிரதமரோ, எதிர்க்கட்சித் தலைவரோ போட்டியிடாத தேர்தலாக இத்தேர்தல் அமைகின்றது.
அத்தோடு இலங்கையில் ஆகக்கூடுதலான காலம் பதவியில் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்காத ஜனாதிபதி தேர்தலும் இத்தேர்தலாகும்.
இத்தேர்தலில் முப்பத்தைந்து வேட்பாளர்கள் போட்டியிட்டபோதும் கோத்தாபய ராஜபக் ஷ–சஜித் பிரேமதாஸ ஆகிய இருவருக்கிடையிலே பலத்தபோட்டி இருக்கின்றது என்பதே உண்மை. ஒருவர் முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர், மற்றவர் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர். மூன்றாவது வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணி (JVP) யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க திகழ்கிறார். இவர்களைத் தவிர வேறு எந்த ஒரு வேட்பாளரும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வேட்பாளராக விளங்கவில்லை.
ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரையில் பொதுத்தேர்தல் அல்லது மாகாணசபை/ பிரதேச சபைத் தேர்தல்களுடன் ஒப்பிட்டுக் கணிப்பீடு செய்வது கஷ்டம். ஏனென்றால் அத்தேர்தல்களில் பல நூற்றுக்கணக்கான அபேட்சகர்களும் பல கட்சிகளும் போட்டியிடுவதால் அபேட்சகர்களின் தனிப்பட்ட செல்வாக்கு, கட்சிகளின் செல்வாக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை முக்கியமாக அபேட்சகரின் செல்வாக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எப்படி இருப்பினும் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுடன் இத்தேர்தலை தற்போதைய கள நிலைவரப்படி கணிப்பீடு செய்ய வேண்டியுள்ளது.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொது அபேட்சகராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்கள் விடுதலை முன்னணி (JVP), ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், திகாம்பரம், மனோ கணேசன், த.தே.கூ போன்றவர்கள் ஆதரவு வழங்கினர். அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லா, ஆறுமுகன் தொண்டமான், டக்லஸ் தேவானந்த போன்றவர்களும் அவர்களது கட்சிகளும் ஆதரவு வழங்கினர். அந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகி பொது அபேட்சகராகப் போட்டியிட்டதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அவரை கட்சிக்கு துரோகம் இழைத்தவர் என்றே பார்த்தனர். ஆகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாக்குகள் அவருக்கு ஒரு சிறிய அளவிலே கிடைத்தது. அவரது பொலன்னறுவ மாவட்டத்தில் ஓரளவு கிடைத்தது. அதனால் அம்மாவட்டத்தில் அவர் வெற்றி பெற்றார். கம்பஹா மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆதரவு வழங்கியதால் 4660 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இது தவிர கொழும்பு, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் வெற்றிபெற்றார். பதுளை மாவட்டத்தில் 281 வாக்குகளாலும், புத்தளம் மாவட்டத்தில் 4322 வாக்குகளாலும் வெற்றி பெற்றார்.
வட–கிழக்கு மாகாணத்தில் ஆறு இலட்சத்து ஐம்பத்து நான்கு ஆயிரம் வாக்குகளால் வெற்றி பெற்றார். மஹிந்த ராஜபக் ஷ களுத்துறை, மாத்தளை, காலி, மாத்தறை, ஹம்பந்தோட்டை, குருநாகல், அநுராதபுரம், மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய பத்து மாவட்டங்களில் வெற்றிபெற்றார். ஆக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாக்குகளில் சுமார் இரண்டு இலட்சத்துக்குள்தான் மைத்திரிபால சிறிசேன பெற்றிருப்பார். ஆகவே ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி (JVP) மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளாலே மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார் என்பதுதான் உண்மை.
ஆகவே இம்முறை சில மாற்றங்கள் நிகழ இடமுண்டு. அதாவது தீவிர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் அல்லது பண்டாரநாயக்க கொள்கையுடையவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அழிந்து போவதை விரும்பமாட்டார்கள். இப்படியானவர்கள் சுமார் 10 –12 இலட்ச வாக்காளர்கள் இன்னும் இந்த நாட்டில் இருக்கிறார்கள்.
இவர்கள் மஹிந்த ராஜபக் ஷ குடும்பத்தினரையும், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியையும் தற்போது எதிரிகளாகவே பார்க்க எண்ணியுள்ளனர். இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அழித்து விட்டார்கள் என்றே கருதுகின்றனர். கோத்தாபய ராஜபக் ஷ வெற்றி பெற்றால் இனிமேல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற ஒரு கட்சி இருக்காது என்றே அவர்கள் கருதுகின்றனர்.
ஆகவே அவர்கள் கோத்தாபய ராஜபக் ஷ வெற்றி பெறுவதை விரும்பவில்லை. அதனால்தான் சந்திரிக்கா பண்டாரநாயக்க, குமார வெல்கம போன்றோர்களுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட ஏராளமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கத்தவர்கள் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க முன்வந்துள்ளனர்.
இதனால் 2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக் ஷ பெற்ற வாக்குகளில் சுமார் ஐந்து இலட்சம் வாக்குகள் சஜித் பிரேமதாஸவுக்குக் கிடைக்க வாய்ப்புண்டு. மேலும் சுமார் இரண்டு இலட்சம் வாக்குகள் சென்றமுறை மஹிந்த ராஜபக் ஷவுக்கு கிடைத்தவை இம்முறை அனுர குமார திஸானாயகவுக்கு கிடைக்கலாம். ஆகவே அந்த வகையில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு கிடைத்த வாக்குகளில் சுமார் ஏழு இலட்சம் வாக்குகள் கோத்தாபய ராஜபக் ஷவுக்கு கிடைக்காமல் போகலாம். அதே போல்தான் 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவுக்குக் கிடைத்த வாக்குகளில் சுமார் ஐந்து இலட்சம் வாக்குகள் இம்முறை அனுரகுமார திஸானாயகவுக்கு கிடைக்கும். ஆகவே இந்த வகையில் மட்டும் 2015 தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு கிடைத்த வாக்குகளில் ஏழு இலட்சம் வாக்குகள் குறைவாக கோத்தாபய ராஜபக் ஷவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்த வாக்குகளில் சுமார் ஐந்து இலட்சம் வாக்குகள் குறைவாக சஜித் பிரேமதாஸவுக்கும் கிடைக்கலாம்.
எது எப்படி இருந்தாலும் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலைப் போலவே இத்தேர்தலிலும் சிங்கள –பௌத்த வாக்குகள் கோத்தாபய ராஜபக் ஷவுக்கே அதிகமாக இருக்கின்றது. சஜித் பிரேமதாஸவுக்கு சிங்கள –பௌத்த வாக்குகள் குறைவாகவே இருக்கின்றது. மலையக தமிழ் மக்களது வாக்குகள் கடந்த முறை போலவே ஐக்கிய தேசியக் கட்சிக்குத்தான் அதிகமாக இருக்கின்றது. அதேபோல் வட–கிழக்கு தமிழ் வாக்காளர்களும் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிக்கும் மனப்பான்மையிலே அதிகமாக இருக்கின்றனர்.
இன்னும் சில தினங்களே தேர்தலுக்கு இருக்கும் இச்சந்தர்ப்பம்வரை தமிழ் கூட்டணி தனது முடிவை இன்னும் அறிவிக்காத நிலையிலும் 60 வீதத்திற்கு அதிகமான தமிழ் மக்கள் சஜித் பிரேமதாஸவின் பக்கமாக இருப்பதாகவே தெரிகிறது. மீதி 40 வீதமானவர்கள் தமிழ் கூட்டணியினரின் முடிவை பொறுத்து தீர்மானிக்கலாம். இருந்தாலும் வட–கிழக்கு மாகாணங்களில் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு 978111 வாக்குகள் கிடைத்த அதேநேரம் மஹிந்த ராஜபக் ஷவுக்கு 323600 வாக்குகளே கிடைத்தன. அதுவும் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை, சேறுவில ஆகிய இரண்டு தேர்தல் தொகுதிகளில் கிடைத்த வாக்குகளைக் கொண்டே அந்தளவு கிடைத்தது. வட –கிழக்கு மாகாணங்களில் மட்டும் மைத்திரிபால சிறிசேன 654511 வாக்குகள் மேலதிகமாகப் பெற்றுக் கொண்டார்.
இந்தத் தேர்தலிலும் இது மாதிரியான பெரும்பான்மை வாக்குகளால் சஜித் பிரேமதாஸ வட– கிழக்கு மாகாணங்களில் வெற்றி பெறலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
பொதுவாக முஸ்லிம் வாக்குகளைப் பொறுத்தவரையில் 2010 ஆம் ஆண்டு வரை 20– 30 வீதமான முஸ்லிம்களின் வாக்குகள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்பட்டு வந்தது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பிறகு 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் சுமார் 40 வீதமான முஸ்லிம் வாக்குகள் மஹிந்த ராஜபக் ஷவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் கிடைத்தது. ஆனால் 2010 –2015 காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற செயற்பாடுகளினால் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் முஸ்லிம்களின் வாக்குகளில் 95 வீதம் மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கிடைத்தது.
இம்முறை தேர்தல் பிரசாரம் ஆரம்பிக்கும்போது சுமார் 20 வீதமான முஸ்லிம்கள் கோத்தாபய ராஜபக் ஷ பக்கமே இருந்தனர். இருந்தபோதும் கோத்தாபய ராஜபக் ஷ குழுவில் உள்ள விமல் வீரவங்ச, விஜயதாஸ ராஜபக் ஷ, மது மாதவ, உதய கம்மன்பில, துமிந்த திஸாநாயக்க மற்றும் சில பௌத்த மதகுருமார் களின் தேர்தல் பிரசார மேடைகளில் தெரிவித்த இனவாத கருத்துக்களால் கோத்தாபய ராஜபக் ஷ முஸ்லிம்களின் வாக்குகளை இழக்கவேண்டி ஏற்பட்டுள்ளது. அதேபோல்தான் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மீது முஸ்லிம்கள் நல்ல ஒரு அபிப்பிராயம் வைத்திருந்தபோதும் முஸ்லிம்கள் கோத்தாபயவுக்கு வாக்களிக்கா விட்டால் ‘‘அம்பானைக்கு கிடைக்கும்” கருத்துப்பட பேசிய பேச்சு சமூக வலைத் தளங்களில் பரவலாகப் பேசப்படுகின்றது.
இதனால் முஸ்லிம்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துள்ளதுடன் கோத்தாபயவின் முஸ்லிம்களின் ஆதரவையும் குறைத்துள்ளது. எப்படி இருப்பினும் 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிரிசேனவுக்கு கிடத்த 95 வீதமான முஸ்லிம்களின் வாக்கு இம்முறை சஜித் பிரேமதாஸவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. 80 –85 வீதமான வாக்குகளே கிடைக்கலாம். 10 வீதம் கோத்தாபய ராஜபக் ஷவுக்கும் சுமார் 5 வீதம் அனுர குமார திஸாநாயக்கவுக்கும் கிடைக்கலாம்.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை விட இம்முறை சுமார் பத்து இலட்சம் புதிய வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சுமார் எட்டு இலட்சம் பேர் வாக்களிக்கலாம். இதில் சுமார் 240000 பேர் சிறுபான்மை வாக்குகள் 560000 பேர் சிங்கள வாக்குகள். சிறுபான்மை வாக்குகள் 80 வீதம் சஜித் பிரேமதாஸவுக்கும் சுமார் 10 வீதம் கோத்தாபய ராஜபக் ஷவுக்கும் மீதி பத்து வீதம் அனுர குமார திஸாநாயக்க வுக்கும் மற்றும் அபேட்சகர்களுக்கும் கிடைக்கலாம். சிங்கள வாக்குகளில் சுமார் 55 வீதம் கோத்தாபய ராஜபக் ஷவுக்கும் 35 வீதம் சஜித் பிரேமதாஸவுக்கும் கிடைக்கலாம். மீதி பத்து வீதம் மற்றவர்களுக்கு கிடைக்கலாம்.
எப்படி இருப்பினும் இத்தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷ வெற்றியடைய வேண்டுமானால் 65 வீதத்துக்கு மேற்பட்ட சிங்கள வாக்குகளைப் பெறவேண்டும். சஜித் பிரேமதாஸ வெற்றி பெற வேண்டுமானால் 35 வீதத்துக்கு குறையாத சிங்கள வாக்குகளைப் பெறவேண்டும் என்பது தான் உண்மை. பொறுத்திருந்து பார்ப்போம்.-Vidivelli
- அபூ ரனாஸ்