ஏப்ரில் 21 குண்டுத்தாக்குதல்: குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவர்
சிலாபத்தில் கோத்தாபய ராஜபக் ஷ திட்டவட்டம்
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சுயாதீன ஆணைக்குழுவின் விசாரணைக்குட்படுத்தப்பட்டு குற்றவாளிகளாகக் கருதப்படுபவர்கள் எவ்வித பாரபட்சமுமின்றி தண்டிக்கப்படுவார்கள். தேசிய பாதுகாப்பை என்னால் மாத்திரமே மீண்டும் பலப்படுத்த முடியுமென பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷ தெரிவித்தார்.
சிலாபம் நகரில் நேற்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசியல்வாதிகளின் தேவைகளுக்காகவும், சர்வதேச அமைப்புகளி கோரிக் கைகளுக்காகவும் புலனாய்வுப் பிரிவினர் பயன்படுத்திக் கொள்ளப்பட்டனர். இதன் விளைவு தேசிய பாதுகாப்பு இன்று பலவீனமாகியுள்ளது. தேவையற்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அமைச்சரவையினால் மக்களின் பாதுகாப்பினை பலப்படுத்த முடியாது.
30வருட கால சிவில் யுத்தத்தை இராணுவ மார்க்கத்தின் ஊடாக இல்லாதொழிக்க முடியாது என்று சர்வதேச நாடுகளும் அமைப்புக்களும், உள்ளூர் தரப்பினரும் குறிப்பிட்டார்கள். அனைவரது கருத்துக்களையும் குறுகிய காலத்திற்குள் முடிவிற்கு கொண்டுவந்து அவர்களின் கருத்துக்களை பொய்யாக்கினோம். இன்றும் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. யுத்தத்தை வெற்றிகொண்ட என்னால் மாத்திரமே தேசிய பாதுகாப்பினை பலப்படுத்த முடியும்.தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் எமது தேர்தல் கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அனைத்து திட்டங்களும் பதவிக்காலத்தில் முழுமையாக செயற்படுத்தப்படும். தேசிய உற்பத்திகளை வலுப்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் துறைசார் நிபுணர்களின் ஊடாக வகுக்கப்பட்டுள்ளன.
கிராமிய அபிவிருத்திகளுக்கான நவீன திட்டங்களும் தொழில்துறை விருத்தி, ஏழ்மை இல்லாதொழிப்பு மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வும் செயற்படுத்தப்படும். அரசியல் தேவைகளுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் பொதுவான அபிவிருத்தி திட்டங்கள் கொள்கை திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந் துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.-Vidivelli