பாதிக்கப்பட்ட பள்ளி தொடர்பில் ஹிஸ்புல்லாஹ் பொய் குற்றச்சாட்டு
முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம் தெரிவிப்பு
ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் திகன கலவரத்தில் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றார்.
இது அரசியலுக்காக தம்மை ஹீரோவாகக் காட்ட முனையும் செயற்பாடாகும். பள்ளிவாசல் ஒன்றை கட்ட வரும்போது அதைத்தடுப்பதற்கு எந்தவொரு முஸ்லிமும் தடையாக இருக்க மாட்டார்கள் என்று முஸ்லிம் சமய விவகாரம் மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,ஹிஸ்புல்லாஹ திகன பள்ளிவாசலைக் கட்டுவதற்கு முன்வந்துள்ளதாக பள்ளிவாசல்கள் நிருவாகிகள் தெரிவித்தார்கள். அப்படி கட்டுவதற்கு முன்வந்தவருக்கு நான் மறுப்புத் தெரிவிக்க வில்லை. ஒருவர் பள்ளியைக் கட்ட முடியுமாக இருந்தால் அதை நான் ஒரு பாக்கியமாகவே கருதுகிறேன். நானாக இருக்கலாம் அல்லது நண்பர் ஹிஸ்புல்லாஹ்வாக இருக்கலாம். அல்லது வேறு ஒருவராக இருக்கலாம். அப்படி ஒருவர் பள்ளியைக் கட்ட வரும்போது அதைத் தடை செய்வதற்கு, நிறுத்துவதற்கு நான் மட்டுமல்ல, எந்தவொரு முஸ்லிமும் செயற்பட மட்டார்கள். ஆகவே, இது ஒரு பொய்யான குற்றச்சாட்டாகும். அவர் திகன பள்ளிவாசலை கட்டவந்ததாகவும் அதை நான் தடுத்து நிறுத்தியதாகவும் கூறியிருந்தார். உண்மையிலேயே இது ஒரு பொய்க்குற்றச்சாட்டு. அந்தப் பள்ளி நிருவாகம் இருக்கின்றது.
பள்ளி நிருவாகத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும். இந்தப் பள்ளியை ஹிஸ்புல்லாஹ் கட்டுவதாக இருந்தால் தாராளமாகக் கட்டலாம். இந்தப் பாதிப்பின் மூலம் ஏனைய மக்களுக்கும் ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்ற வகையில் அரசாங்கத்திலும் இதற்கான நஷ்டயீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எனக்கிருந்தது.இந்தப் பள்ளிவாசலுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி போதாது. மேலும் அதிகரித்துத் தரவேண்டுமென்று அமைச்சரவைக் குழுக கூட்டத்தில் எல்லா முஸ்லிம் அமைச்சர்களும் ஏகோபித்த குரலில்கருத்தினை முன்வைத்திருந்தோம். இந்த வன்முறைச் சம்பவத்தின் மூலம் பாதிக்கப்பட்ட திகன, கண்டி மக்களுக்கு 8 கோடி ரூபா பெறுமதியான நஷ்டயீடு வழங்கப்பட்டுள்ளது. வீடுகள், வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக் கொண்டுள்ளார்கள். இந்த நஷ்டயீடு படிப்படியாக மூன்று கட்டங்களில் வழங்கப்பட்டுள்ளன. இது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. எல்லா மக்களும் சந்தோசப்படுமளவுக்கு நஷ்டயீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹலீம் மேலும் தெரிவித்தார்.-Vidivelli
- இக்பால் அலி