பெரும்பான்மைக்குள் வாழும் சிறுபான்மை சமூகம் பெரும்பான்மையுடன் சகோதரத்துவத்துடன் வாழ்வது அவசியம். முஸ்லிம்கள் கோத்தாபய ராஜபக் ஷவை ஆதரித்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்புச் செய்பவர்களாக மாறவேண்டும். கோத்தாபய ராஜபக் ஷ ஓர் இனவாதியல்ல. தேர்தல் காலங்களில் முஸ்லிம்களின் வாக்குகளை மட்டும் பெற்றுக்கொள்ள வருபவர்கள் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுத்தர மாட்டார்கள் என்று ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி குறிப்பிட்டார்.
கெலிஓயா கலுகமுவையில் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
நான் கோத்தாபய ராஜபக் ஷவுடன் பல வருடங்களாக நெருக்கமாகப் பழகி வருகின்றேன். அவர் ஓர் இனவாதியல்ல. கொழும்பில் நிர்மாணித்த மாடி வீடுகளில் எழுபத்தைந்து சதவீத வீடுகளை தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வழங்கியுள்ளார். சேரிப்புறங்களில் வாழ்ந்த மக்களுக்கு அங்கு வாழ்ந்த மக்களின் விகிதாசாரத்திற்கேற்ப வீடுகளை வழங்கியுள்ளார். சேரிப்புற வாழ்க்கையில் சமூகப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக தொடர்மாடி வீடுகளை அமைத்து மக்களை குடியேற்றினார். முஸ்லிம்கள் ஒரே கட்சிக்கு வாக்களிப்பவர்களாக இருக்கக்கூடாது. எமது வாக்குப் பெட்டிகளில் எல்லோரும் ஒரு கட்சிக்கு புள்ளடியிடும்போது அவர்கள் சிந்திக்க மாட்டார்களா?
நாட்டில் யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை கொண்டு வந்தவர்கள் யார் என்பதை பற்றி சிந்திக்க வேண்டும். நாம் அவர்களை நிராகரிப்பவர்களாக மாறக்கூடாது. பெரும்பான்மைக்குள் வாழும் சிறுபான்மை சமூகம் பெரும்பான்மையுடன் சகோதரத்துவத்துடன் வாழ்வது அவசியம். முஸ்லிம்களின் வாக்குகளை மட்டும் பெற்றுக்கொள்ள வருபவர்கள் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுத்தர மாட்டார்கள்.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் , ஈ.பி.டி.பி. மற்றும் தேசிய காங்கிரஸ் உட்பட பொதுஜன பெரமுனைக்கு 68 இலட்சம் வாக்குகள் கிடைத்தன. இதில் ஐக்கிய தேசிய கட்சிக்கு 38 இலட்சம் வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோருக்கு கிடைத்த வாக்குகளையும் உள்ளடக்கும்போது சுமார் 41 இலட்சம் வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சி உட்பட சஜித் பிரேமதாசவின் கூட்டணிக்கு கிடைத்துள்ளது. இத்தேர்தல் முடிவுகள் மூலம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை தீர்மானிக்க முடியும். ஜனாதிபதி தேர்தல் ஏன் முஸ்லிம்களுக்கு முக்கியத்தும் பெறுகின்றது என்று சிந்திக்க வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் வெற்றியாளர்களின் பங்குதாரர்களாக மாறவேண்டும். பௌத்த மக்களுடன் கலந்து வாழும் முஸ்லிம்கள், ஏனைய தமிழ், கிறிஸ்தவ மக்களுடன் ஒற்றுமையுடன் வாழ்ந்து சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொள்வது அவசியம். தேர்தலில் தோல்வியடையும் வேட்பாளர்களுடன் கைகோர்த்து சமூகம் தோல்வியடையக் கூடாது.
முஸ்லிம்களுக்கு அநியாயம் நடக்கும் போது அதனைத் தட்டிக் கேட்பவர்களாக உங்கள் பிரதேச அரசியல்வாதிகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் பிரச்சினைகளுக்கு வெளிப்பிரதேச அரசியல்வாதிகள் தீர்வுகளைக் கொண்டுவர மாட்டார்கள்.
முஸ்லிம் பிரதேசங்களுக்கு அபிவிருத்தியை பிரதேச அரசியல்வாதிகளால் கொண்டுவர முடியும்.
முஸ்லிம் சமூகத்தின் மேம்பாட்டிற்கு உழைத்த தலைவர் ரி.பி. ஜாயா ஆவார். முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு உழைத்த தலைவர் அவராவார். முட்டைகள் எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போடாதீர்கள் என்று கூறினார்.
முஸ்லிம்கள் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சிக்கு மட்டும் வாக்களிப்பதன் மூலம் எதுவித நன்மைகளையும் அடைந்துகொள்ள முடியாது. எமது சமூகம் முன்னேற முடியாமல் போகும்.
மலேசியாவில் மலே மக்கள் வாழ்கின்றனர். இம்மக்களின் தலைவர் டாக்டர் மஹதீர் முஹம்மதாவார். மலேசியாவில் சீனர்கள் 40 சதவீதம் வாழ்கின்றனர். சீனர்கள் சீனத் தலைவரொருவரை மலேசியாவில் உருவாக்கவில்லை.
மலே மக்கள் விரும்பும் தலைவரை மலேசியாவில் வாழும் சீனர்கள் ஆதரித்து தலைவராக தேர்ந்தெடுத்தனர். எனவேதான், மலேசியா முன்னேற்றம் கண்டுள்ளது. எமது நாட்டில் பெரும்பான்மை சிங்கள மக்கள் மகிந்த ராஜபக் ஷ உட்பட கோத்தாபய ராஜபக் ஷவை விரும்புகின்றனர். எனவே முஸ்லிம்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும்.
எல்பிடிய தேர்தல் முடிவுகளை நோக்கும்போது சுமார் 70 சதவீத மானோர் கோத்தாபய ராஜபக் ஷவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கு 24 சதவீதமும் வாக்குகள் கிடைத்தன.
160 தேர்தல் தொகுதிகளில் 124 தொகுதிகள் பெரும்பான்மை சிங்கள மக்களின் தொகுதிகளாகும். இதனை நோக்கும்போது முஸ்லிம்கள் வெற்றியடைய முடியாது என்பது நிச்சயம். முஸ்லிம்கள் கோத்தாபய ராஜபக் ஷவை ஆதரித்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்புச் செய்பவர்களாக மாற வேண்டும் என்றார்.-Vidivelli
- உடுநுவர நிருபர்