பதினாறே வயதான பாடசாலை மாணவனொருவன் செலுத்திய காரினால் மோதப்பட்டு சிறார்களான பாடசாலை மாணவியொருவரும், மாணவரொருவரும் பலியான சம்பவம் தங்கல்ல விதாரன்தெனிய தலகம கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தச் சென்ற ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடனே திரும்பிச் சென்றார்கள்.
இந்த மனதை உருக்கும் சோக சம்பவம் கடந்த 1 ஆம் திகதி மாலை வீரகெட்டிய– தங்கல்ல பிரதான பாதையில் வீரகெட்டிய ராஜபக் ஷ மத்திய மகா வித்தியாலயத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 5 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியான தனூரி திஹங்சா ராஜபக் ஷ (11) மற்றும் அவளது சகோதரனான 1 ஆம் தரத்தில் கல்வி பயிலும் தனுஜ நிம்சர ராஜபக் ஷ (6) ஆகிய இருவருமே பலியாகியுள்ளார்கள். இச் சம்பவத்தில் அவர்களது தாயாரான ரஞ்சனி (44) காயங்களுக்குள்ளாகி காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தங்கல்ல வித்தியாலயத்தில் கல்வி பயிலும் இருவரும் டியூசன் வகுப்புக்குச் செல்வதற்காக வீரகெட்டிய கட்டுவெல சந்தியில் பாதையை கடந்து கொண்டிருக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 16 வயதான பாடசாலை மாணவன் செலுத்திய கார் இவர்களை மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளது. விபத்துக்குள்ளாகி பலியான தனூரி திஹங்சா 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 154 புள்ளிகளுடன் சித்தியடைந்தவர் என மரண விசாரணையின்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
‘எனது உயிரான பிள்ளைகள் இருவரையும் காரினால் மோதி பலியாக்கிவிட்டார்கள். கடவுளே என்னால் எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்’ என தாயார் கதறியழுதது முழுக் கிராமத்துக்குமே கேட்டது என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
16 வயதுச் சிறுவன் காரைச் செலுத்தியுள்ளமை பாரிய குற்றச் செயலாகும். சாரதி அனுமதிப்பத்திரம் கூட 18 வயது பூர்த்தியானதன் பின்பே பெற்றுக் கொள்ள முடியும். 16 வயது சிறுவனுக்கு காரை வழங்கியமையும் குற்றமாகும்.
குறித்த காரின் உரிமையாளரான சிறுவனின் தாயார் மற்றும் அதன் சாவியை வழங்கிய சிறுவனின் 24 வயதான சகோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
காரைச் செலுத்திய சிறுவன், விபத்து நடந்தபோது அவனுடன் காரில் பயணித்த 10 ஆம் தரத்தில் பயிலும் மாணவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை கித்துலம்பிட்டிய தடுப்பு இல்லத்தில் தடுத்து வைக்குமாறு நீதிவான் உத்தவிட்டுள்ளார்.
இவர்கள் விபத்தை ஏற்படுத்தி விட்டு காருடன் தப்பிச் சென்றுள்ளதுடன் காரை விதாரன்தெனிய பகுதியில் மறைத்து வைத்துள்ளனர். இந் நிலையிலேயே குறித்த கார் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
காரின் உரிமையாளரான சிறுவனின் தாயார் ஆசிரிய ஆலோசகராவார். எனவேதான் மாணவர்களை வழி நடத்தும், நேர்வழியைப் போதிக்கும் ஆசிரியர்கள் தமது பிள்ளைகள் விடயத்தில் இவ்வாறு செயற்படுகின்றமையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தனக்கு உரித்தான காரை தனது மகனுக்கு பொறுப்பற்ற முறையில் வழங்கியதன் மூலம் மற்றுமொரு தாயின் இரு பிள்ளைகளது உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளமை எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். தனக்குத் தெரியாமலேயே தனது இளைய மகனுக்கு மூத்த மகனினால் காரின் சாவி வழங்கப்பட்டுள்ளதாக வண்டியின் உரிமையாளரான பெண் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். வண்டியின் உரிமையாளரான பெண் இவ்வாறான காரணங்களைக் கூறி தப்பிக்க முடியாது. முழுப் பொறுப்பினையும் அவரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
காரைச் செலுத்தி இரு அப்பாவி உயிர்களைப் பலியெடுத்த 16 வயது சிறுவன், அவனது தாயும் காரின் உரிமையாளரான ஆசிரிய ஆலோசகரான பெண், காரை வழங்கியதாகக் கூறப்படும் அவரது 24 வயதான மகன் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
விபத்தில் பலியான இரு மாணவர்களின் தாயார் ரஞ்சனி (44) தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பலியான இரு மாணவர்களுக்கும் காயங்களுக்குள்ளான அவர்களது தாயாருக்கும் விபத்தினை ஏற்படுத்தியவர்களிடமிருந்து நீதிமன்றம் நஷ்டஈடுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அத்தோடு இவ்விபத்துடன் தொடர்புபட்ட அனைவருக்கும் தராதரம் பாராது உயர்ந்தபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அப்போதே இவ்வாறான விபத்துகளைத் தவிர்க்க முடியும்.-Vidivelli