முஸ்லிம்கள் மீதான வெறுப்பும் விரோதமும்
ஒரு சுய பரிசோதனை
முஸ்லிம்கள் பன்னெடுங்காலங்களாக தமது தனித்துவத்தைப் பாதுகாத்து, மற்ற சமூகங்களுடன் புரிந்துணர்வோடு வாழ்ந்து வருகின்றனர். இவற்றின் காரணமாக பெரும்பான்மை சமூகத்தினரிடம் முஸ்லிம்கள் பற்றிய நல்லெண்ணம் காணப்பட்டது.
துரதிஷ்டவசமாக, சீரிய சிந்தனையற்ற சில முஸ்லிம் இளைஞர்களின் இஸ்லாத்துக்கு விரோதமான ஈஸ்டர் தினத் தாக்குதல், முஸ்லிம்கள் பற்றிய நல்லெண்ணத்தை சுக்குநூறாக்கி விட்டது. தாக்குதலுக்குள்ளான தேவாலயங்களும், ஹோட்டல்களும் புனர் நிர்மாணம் செய்யப்படுகின்றன. ஆனால், முஸ்லிம்கள் இழந்த நல்லெண்ணத்தை மீளக் கட்டியெழுப்புவது இலகுவாகத் தெரியவில்லை. கிறிஸ்தவ சமூகம் பொறுமை காக்கும் அதேவேளை, பௌத்த இனவாதிகள் சந்தர்ப்பத்தைச் “சரியாக“ப் பயன்படுத்துகின்றனர். இதனால் அனைத்து முஸ்லிம்களும் ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இவ்வேளை, பின்வரும் அல்குர்ஆனின் எச்சரிக்கை கவனிக்கத் தக்கது
“நீங்கள் ஒரு சோதனையை பயந்து கொள்ளுங்கள். உங்களில் அநீதி இழைத்தவர்களை மாத்திரம் அது தாக்க மாட்டாது. (மற்றவர்களையும் தாக்கும்)” (8-25) “பொல்லார்க்கு வரும் வினை, நல்லார்க்கும்“ என்பது இதன் பொருளாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இது தொடர்பாக எச்சரித்துள்ளார்கள்.
“ஒரு முறை அண்ணலார் அவர்கள் தன் தோழர்களிடம், “ஒரு காலம் வரும், அக்காலத்தில் பசித்த பிராணிகள் தமது உணவுப்பாத்திரத்தை நோக்கி போட்டிபோட்டுக் கொண்டு பாய்வதைப் போல (மற்ற) சமூகங்கள் உங்கள் மீது பாய்வர்” எனக் கூற. அங்கிருந்த ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே, அவ்வேளை நாம் சொற்பத் தொகையினராகவா இருப்போம்?” என வினவினார். அதற்கு அண்ணலார் அவர்கள், “இல்லை, நீங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போகும் நுரைகளைப் போல பெருந்தொகையினராக இருப்பீர்கள். உங்களைப் பற்றிய அச்சத்தை (பெறுமதியை) உங்கள் விரோதிகளின் உள்ளங்களிலிருந்து அல்லாஹ் எடுத்திருப்பான். (அவ்வேளை) உங்களது உள்ளங்களில் ‘அல் வஹ்ன்’ குடிகொண்டிருக்கும்” என்றார்கள். அப்போது மற்றொரு தோழர், ‘அல் வஹ்ன்’ என்றால் என்ன?” வென வினவ, உலகமோகமும், மரணத்தை வெறுக்கும் மனோபாவமும்” என்றார்கள். (அறிவிப்பவர். தவ்பான். (ரழி) ஆதாரம் அபுதாவுத். அஹ்மத்)
இவ்விரு தீய பண்புகளும் முஸ்லிம்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுவதன் காரணமாக முஸ்லிம்கள் பிளவுபட்ட நிலையில் தோல்விகளையும், துன்ப, துயரங்களையும் சந்தித்த வண்ணமுள்ளனர்.
முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளில் பெரும்பான்மை சமூகங்களின் இன வன்முறைகளுக்கும், கெடுபிடிகளுக்கும் ஆளாகியுள்ளனர். இலங்கை முஸ்லிம்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
வெறுப்புணர்வுக்கான சில முக்கிய காரணிகள்
முஸ்லிம்கள் நாட்டுப்பற்றற்றவர்கள் எனும் குற்றச்சாட்டு. ஒரு சில முஸ்லிம்களின் பொருத்தமற்ற நடவடிக்கைகளை வைத்து, “முஸ்லிம்கள் நாட்டின் அபிவிருத்திக்குப் போதிய பங்களிப்புச் செய்வதில்லை. நாட்டுப்பற்றுடன் நடப்பதில்லை. மார்க்கமும், வியாபாரமுமே அவர்களது முக்கிய குறிக்கோள்கள்” என இனவாதிகள் பகிரங்கமாகக் கூறுகின்றனர்.
இலங்கைக்கும் முஸ்லிம் நாடொன்றுக்குமிடையே கிரிக்கெட் போட்டியொன்று நடைபெற்ற வேளை, முஸ்லிம் நாட்டையே அவர்கள் ஆதரிப்பர் எனும் இனவாதிகளது குற்றச்சாட்டை நிரூபிப்பது போல் முஸ்லிம் இளைஞர்களின் நடவடிக்கைகள் அமைந்திருந்தமை.
நாட்டை வளப்படுத்தும் மரநடுகை, தோட்டப்பயிர்ச் செய்கை, சுற்றாடற் சுத்தம், ஒலி மாசடைதலைத் தவிர்த்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு முஸ்லிம்களின் பங்களிப்புக்கள் மிகக் குறைவாகக் காணப்பட்டமை ஆகியன இனவாதிகளின் பிரச்சாரத்துக்கு வாய்ப்பாக அமைந்தன.
சட்டத்தைக் கையிலெடுப்பவர்கள் எனும் குற்றச்சாட்டு
முஸ்லிம் பிரதேசமொன்றில் வாகன விபத்தொன்று நேரும் தருணத்தில் முஸ்லிமல்லாத ஒருவர் அதில் சம்பந்தப்பட்டிருப்பின், அந் நபரைத் தண்டிக்க முஸ்லிம் இளைஞர்கள் முற்படுவர். இத்தகைய நடவடிக்கைகளால் பல இடங்களில் இன முறுகல் நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஹலால் சான்றிதழ் மூலம் பெரும்பான்மை சமூகத்தினரிடம் வரி அறவிடுவதற்கு சிறுபான்மையினர் முயற்சிக்கின்றனர் எனும் பௌத்த மதகுருமாரின் தீவிர பிரசாரம் சிங்கள சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
சந்தர்ப்பவாதிகள் எனும் குற்றச்சாட்டு
முஸ்லிம்களின் சுயநல நடவடிக்கைகளை வைத்து முழு முஸ்லிம் சமூகத்தையும் சந்தர்ப்பவாதிகள் (அவஸ்த்தாவாதீன்) என இனவாதிகள் பரிகசிக்கின்றனர். சந்தர்ப்பவாத சுயநல அரசியல், நேர்மையற்ற வர்த்தகம், பொது இடங்களிலும், போக்குவரத்து சாதனங்களிலும் இடைஞ்சலேற்படுத்தும் இளைஞர் கூட்டம், கட்டுப்பாடு, ஒழுங்கு விதிமுறைகளை மீறும் அவசரக்காரர், ஹராமான வர்த்தகத்திலீடுபடும் போதைப்பொருள் வர்த்தகர், லஞசம் கொடுத்து காரியம் சாதிப்போர், பிறமத பெண்களை மணமுடித்து ஒருசில வாரங்களில் அல்லது மாதங்களில் கைவிடுவோர் ஆகியோரின் சந்தர்ப்பவாத நடவடிக்கைகள் அனைத்து முஸ்லிம்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்துவதுடன், இனவாதிகளின் குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பது போலவும் அமைகின்றன.
பிறமதத் தலங்களை அவமதிப்போர் எனும் குற்றச்சாட்டு
மற்ற மதத்தவரின் வழிபாட்டுத் தலங்களை அவமதிக்கும் நோக்கம் முஸ்லிம்களிடம் இல்லாத போதும், அங்கு சென்று பொறுப்பற்ற முறையில் நடப்பதும், புகைப்படங்கள் எடுப்பதும், பிற சமயத்தவர்களைப் பொறுத்தவரையில் பாரிய குற்றமாகும். எனவே, இளைஞர்களோ, மாணவர்களோ பௌத்த சமய நம்பிக்கைகள், நடைமுறைகள் பற்றி தெரியாத நிலையில், அவர்களது மதத் தலங்களுக்குச் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.
அடுத்து, பிறர் வணங்கும் தெய்வங்கள் மற்றும் மதகுருமார்களைப் பரிகசிப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதை சூரா அல்ஆமின் 102வது வசனத்தில் காணலாம்.
முஸ்லிம்கள் பெருமை பிடித்தவர்கள் எனும் குற்றச்சாட்டு
முஸ்லிம்கள் தமது முகத்தைப் பார்க்க மாட்டார்கள். கதைக்க மாட்டார்கள் என ஒரு சில பெரும்பான்மையினர் குற்றம் சுமத்துவதாக அறிய முடிகின்றது. ஒருசில தனிப்பட்ட முஸ்லிம்களின் நடவடிக்கைகளை வைத்து, முழு முஸ்லிம் சமூகத்தையும் எடை போடுவது பொருத்தமற்றது. “மனிதரை விட்டும் உமது முகத்தைத் திருப்ப வேண்டாம்“ (3-:18) எனும் அல் குர்ஆன் கட்டளையும், “பெருமையடிப்பவனை அல்லாஹ் தாழ்த்துவான்” என்ற நபியவர்களின் எச்சரிக்கையும், முஸ்லிம்களுடனோ, முஸ்லிமல்லாதவருடனோ பெருமை பாராட்டக் கூடாது என்பதை வலியுறுத்துகிறது.
மனித சகோதரத்துவம் மதிக்கப்படாமை எனும் குற்றச்சாட்டு
அல்லாஹ் மனிதரை ஒரு ஆணிலிருந்தும், ஒரு பெண்ணிலிருந்தும் படைத்திருப்பதாக அல் குர்ஆன் (04- –11) குறிப்பிடுகின்றது. அதேவேளை, “படைப்பினங்கள் அல்லாஹ்வின் குடும்பம்” என்று நபிமொழி கூறுகின்றது. இவற்றிலிருந்து, முஸ்லிமல்லாதவர் உட்பட மனிதர்கள் அனைவரையும் இஸ்லாம் மனித சகோதரத்துவத்தில் இணைத்திருப்பது தெளிவாகிறது. ஆகவே, இஸ்லாமிய அகீதா, ஷரீஆ என்பவற்றுக்கு முரணில்லாத வகையில், பிறமதத்தவர்களுடன் சமூக, பொருளாதார, அரசியல் விவகாரங்களில் முஸ்லிம்கள் நல்லுறவைப் பேண வேண்டும். பிற சமூகங்களை விட்டும் முற்றாக ஒதுங்கி வாழ்வது பாதிப்பை ஏற்படுத்தும்.
அறபுமயமாக்கல் எனும் குற்றச்சாட்டு
இனவாதிகள் முஸ்லிம் சமூகத்துக்கெதிராக வைத்த குற்றச்சாட்டுக்களில் அறபு மொழியிலான விளம்பரப் பதாதைகள், அராபியரின் ஆடை, பேரித்த மரம் என்பனவும் அடங்கும். பெளத்த மதக் கலாசாரத்துக்கெதிரான ஐரோப்பியரின் அரைகுறை ஆடை நாட்டில் செல்வாக்கு செலுத்துவதை இனவாதிகள் பொருட்படுத்துவதில்லை. அவர்களது ஆதங்கம் என்னவெனில், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக மாறி, இலங்கைத் தீவையே அறபு மயமாக்கப் போகிறார்கள் என்பதுவே. “ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு” என்ற முதுமொழியை நிரூபிப்பதைப் போன்று அவர்களது வாதம் காணப்படுகின்றது
ஒழுங்கு, கட்டுப்பாட்டை மீறுவோர் எனும் குற்றச்சாட்டு
முஸ்லிம்கள் ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் மீறி நடப்பவர்கள் என்ற மனப்பதிவு பெரும்பாலானவரிடம் காணப்படுகின்றன. இதனை நிரூபிக்கும் வகையில், கடந்த 8ஆம் திகதி, கண்டி மீரா மக்காம் பள்ளிக்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச விஜயம் செய்தவேளை, அங்கு குழுமியிருந்த முஸலிம்களில் பலர் அவரை “வரவேற்க“ முண்டியடித்து, முட்டிமோதிக் கொண்டனர். அதனைக் கண்ணுற்ற சஜித் அவர்கள், “இது பள்ளிவாசல். இங்கே சத்தம் போடாதீர்கள்!” என முஸ்லிம் பிரமுகர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.
பொதுவாக பஸ் வண்டிகளுள் நுழைதல், வெளியேறுதல், பாதைகளைக் கடத்தல், பார்மஸி போன்ற இடங்களில் பொருட்களை கொள்வனவு செய்தலின் போதும், அரச வைத்தியசாலைகள், விமான நிலையங்களிலும் – ஒப்பீட்டளவில் – பிற சமூகங்களை விட முஸ்லிம்கள் நிதானப் போக்கற்று அவசரப்படுவதை காணலாம்.
வியாபார கொடுக்கல் வாங்கல், மோசடிகள் எனும் குற்றச்சாட்டு
சில முஸ்லிம்களின் மோசடிகளால் முழு முஸ்லிம் சமூகமும் சந்தேகத்துடன் பார்க்கப்படுகின்றது. மார்க்க விடயங்களில் அக்கறை காட்டுவோர்கூட, கொடுக்கல் வாங்கல்களில், மோசடிகளை சர்வ சாதாரணமாகக் கருதுகின்றனர். குறிப்பாகக் கடன் கொடுக்கல் வாங்கல்களைக் குறிப்பிடலாம். முஸ்லிமல்லாதவர்களுடனான கடன் கொடுக்கல் வாங்கல்களில் கூட மோசமான முறைகேடுகள் நடைபெறுவதால் இனவிரோதம் மேலும் உச்ச நிலையை அடைகின்றது. “அளவை நிறுவையில் மோசடி செய்பவர்களுக்கும் கேடுதான் !” என்ற அல்குர்ஆனின் (83-:11) எச்சரிக்கையும், ஈரலிப்பான தானியங்களை குவியலின் கீழ்ப்பகுதியிலும் காய்ந்ததை மேல் பகுதியிலும் வைத்து வியாபாரம் செய்த ஒரு நபரை நோக்கி, நபியவர்கள், “எங்களை ஏமாற்றுபவர் எம்மைச் சேர்ந்தவரல்லர்” (ஸஹீஹ் முஸ்லிம்) என்று எச்சரித்தமையும், ஏமாற்று, மோசடிகளின் தீமையை விளங்கிக் கொள்ளப் போதுமானவை.
சமூகத்தில் மலிந்துள்ள மோசடிகளும், ஏமாற்றுகளும் நமது இறுதிக் கடமையான ஹஜ்ஜையும்கூட விட்டு வைத்தபாடில்லை. அல்லாஹ்வின் விருந்தினர்கள் எனப்படும் ஹஜ்ஜாஜிகள்கூட, வருடா வருடம் பகிரங்கமாகவே ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.
இத்தகைய சமூக சீர்கெடுகள், இனவாதிகளுக்கு இன்பமளிப்பனவையாக இருக்குமென்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
மஸ்ஜிதுகள் தொடர்பானவை
அல்லாஹ்வுக்குரிய மஸ்ஜித்களை பரிபாலனம் செய்தல் பாரிய பொறுப்பும், அமானிதமுமாகும். அமானிதம் பற்றி மறுமை நாளில் விசாரிக்கப்படும். இறை விசுவாசத்துடன் சன்மார்க்க கடமைகளை சரிவர நிறைவேற்றும் இறை பக்தியுமுடையவர்களே மஸ்ஜித்களை பரிபாலனம் செய்யும் தகுதியை பெறுவர். தகுதியற்றோரை நியமிப்பது பிரச்சினைகளுக்கு வழிகோலும்.
மஸ்ஜித்கள் சம்பந்தப்பட்ட பின்வரும் விடயங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.
மஸ்ஜித்களை அளவுக்கதிகம் அலங்கரிப்பதும், அவற்றுக்காகப் பெருந்தொகைப் பணத்தை செலவழித்தலும் வீண் விரயத்தில் அடங்கும். அனஸ் ரலி அவரகள் அறிவிக்கும் நபிமொழியொன்று, “மஸ்ஜித்களை வைத்து ஒருவருக்கொருவர் பெருமை பாராட்டிக் கொள்வது மறுமைநாளின் அடையாளங்களில் ஒன்று என கூறப்பட்டுள்ளது. (நூல் – அபுதாவூத் 449), மஸ்ஜித்கள் அழகாகவும், தேவைக்கேற்ப விசாலமாகவும் காணப்படுவதில் தவறில்லை. ஆனால், அதையும் மீறி செய்யப்படும் அலங்காரங்களும் ஆடம்பரத் தோற்றங்களும் இயல்பாகவே இனவாதிகளிடம் வெறுப்புணர்வை தோற்றுவித்துள்ளமை கவனிக்கத்தக்கது.
பிறருக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் மஸ்ஜித்களின் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத் துவதால், முஸ்லிம்களும் அசௌகரியங்களுக்குள்ளாகி, பெரும்பான்மை சமூகங்களிடமும் விரோத மனப்பான்மையை தோற்றுவிக்கின்றது. வாகனங்களில் மஸ்ஜித்களுக்கு வருவோர் தமது வாகனங்களை பள்ளியின் சுற்றுச் சூழலுக் கிடைஞ்சலாக பொறுப்பின்றி நிறுத்துவதும், மஸ்ஜித்களுக்கு அபகீர்த்தியை உண்டு பண்ணுவதுடன், வெறுப்புணர்வுக்கும் காரணியாகிறது.
மஸ்ஜித்களில் ஏற்படும் கருத்து முரண்பாடுகளும், சர்ச்சைகளும் பொலிஸ் மற்றும் நீதிமன்றம் வரை செல்வதும், அந்நியரிடம் நீதிகோரி நிற்பதும் அல்லாஹ்வின் இல்லமான மஸ்ஜித்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்பதையிட்டு நாம் மிகுந்த கவலை கொள்ள வேண்டும்.-Vidivelli
- மௌலவி ஏ.ஆர்.எம்.மஹ்ரூப் (கபூரி)