ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷவுக்கு வாக்களிக்காவிட்டால் அவர் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்பு முஸ்லிம்களும் தமிழர்களும் தங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு இந்நாட்டிலிருந்தும் வெளியேறி விட வேண்டுமென பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கருத்து வெளியிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தமிழ் மொழியில் பொய்ப்பிரசாரம் செய்யப்பட்டு வருவதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
ஞானசார தேரர் கடந்த 30 ஆம் திகதி நடத்திய ஊடக மாநாட்டிலே இவ்வாறான கருத்தினை வெளியிட்டதாக பொய்யான பிரசாரம் செய்யப்பட்டு வருவதாக பொதுபல சேனா அமைப்பின் ஊடக இணைப்பாளர் ஏரந்த கே நவரத்ன வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களைப் பீதிக்குள்ளாக்கி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக சில தரப்பினர் மேற்கொண்டுவரும் இவ்வாறான முயற்சிகளை பொதுபல சேனா முற்றும் முழுதாக மறுக்கிறது. ஞானசார தேரர் எந்தவோர் சந்தர்ப்பத்திலும் இவ்வாறான கருத்துகளை வெளியிடவில்லை.
அத்தோடு இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவோர் அபேட்சகருக்கும் அவர் ஆதரவு தெரிவித்து கருத்துதெரிவிக்கவில்லை. அத்தோடு கடந்த 30 ஆம் திகதி ஊடக மாநாடொன்றினை நடாத்தவுமில்லை.
மக்களினால் நிராகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி நேர்மையான அரசியலுக்குப் பதிலாக சிறுபான்மை மக்களை தவறாக வழிநடாத்தி பெரும்பான்மை மக்கள் பற்றி குரோதங்களை உருவாக்கி அவர்களது வாக்குகளைப்பெற்றுகொள்ள முயற்சிப்பது தவறான செயலாகும் என்பதைக் குறிப்பிட விரும்புகிறோம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்