பிரதமரின் செலவினங்களை கட்டுப்படுத்தும் சட்டம: 129 உறுப்பினர்கள் இன்று ஆதரவளிப்பர்

ரவி கருணாநாயக்க சூளுரை

0 858

சட்டத்துக்கு புறம்பாக செயற்பட்டு வரும் பிரதமரின் வீண் செலவுகளை கட்டுப்படுத்தும் வகையிலான சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெறும். இந்தப் பிரரேரணைக்கு ஆதரவாக 129 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பரென  பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், ஜனாநாயகத்துக்கு மதிப்பளித்து மஹிந்த தரப்பினர் இன்று பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு, போலி அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவு திட்ட்த்தின் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்ட வேண்டுமென்று அவர் சவால் விடுத்தார்.

அலரிமாளிகையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

போலியாக ஆட்சி வேடம் தரித்துள்ளவர்கள் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக இன்று பாராளுமன்றத்தில் இருப்பவற்றை ஏற்றுக்கொண்டு, விவாதங்களில் பங்கேற்று யாருக்குக் பெரும்பான்மை பலமுள்ளது  என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆசிய நாடுகள் குடியுரிமை பெற்றுகொள்வதற்கு முன்பதாகவே இலங்கை குடியுரிமையை பெற்றுள்ளது. இந்தக் குடியுரிமையை பாதுகாப்பதற்காகவே இந்த அழைப்பினை விடுக்கின்றோம்.

பெரும்பான்மைக்குத் தலைணங்கி செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக செயற்படும் சபாநாயகரின் நம்பிக்கையின் முன்னிலையில், மீண்டும் எமது பெரும்பான்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துவோம். இதேவேளை, மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான போலி அரசாங்கத்திற்கு அமைச்சரவை நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியாது. காரணம் கடந்த 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையின் பின்னர் அவர்களுக்கு ஆட்சி புரிவதற்கான அதிகாரம் இல்லை.

இவ்வாறானவொரு நிலையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் 1735 பில்லியன் ரூபா பெறுமதியான இடைகால வரவு செலவுத்திடட்த்தை முன்வைப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதாக போலி அரசாங்கத்தினர் சுட்டிக்காட்டி வருகின்றனர். ஆனால் தற்போதைய அரசியல் நிலைமைகளில் நம்பிக்கையில்லாத, பெரும்பான்மையில்லா ஓர் அரசாங்கம் அமைச்சரவையை நடத்தமுடியாது. அதனை நாங்கள் நிரூபித்தும் காட்டியுள்ளோம். ஆனால் அந்த விடயத்தை புறந்தள்ளி தொடர்ந்து ஜனநாயக உரிமைகளை முழுமையாக மீறியே செயற்பட்டு வருகின்றனர்.

போலி அரசாங்கத்துக்கு எதிர்ப்பினை வெளியிடும் எதிர்த்தரப்பினர் என்ற வகையில் அரச நடவடிக்கைகளுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுமாறே வேண்டுகோள் விடுக்கின்றோம். அவ்வாறே இன்று பாராளுமன்றத்தில் பிரதமரின் செலவுகளை கட்டுப்படுத்தும் நிதி சட்டமூலத்துக்கான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளன. இந்த விவாதத்தில் வந்து கலந்துகொண்டு, அதன் பின்னர் போலி அரசாங்கத்தினரின் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தையும் நிறைவேற்றிக்காட்ட வேண்டும்.

அவ்வாறே ஐக்கிய தேசிய முன்னணி இன்று வியாழக்கிழமை பிரதமரின் செலவுகளை கட்டுப்படுத்தும் நிதி சட்டமூலத்துக்கு அதரவை தெரிவித்து, பாராளுமன்றத்தில் 129 அல்லது 130 வரையிலான பெரும்பான்மையினை நிரூபிப்போம். இதேவேளை, இன்று பாராளுமன்றத்தில் மஹிந்த அணியினர்  தமக்கு குறைந்தது 85 தொடக்கம் 90 உறுப்பினர்களின் ஆதரவாவது உள்ளதா? என்பதை அடையாளப்படுத்த வேண்டும்.

மறுபுறம் சபாநாயகர் நீதிக்குப் புறம்பாக செயற்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். அவ்வாறு சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா விட்டால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்த சபாநாயகரை பதவிநீக்க முடியும். “எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படுமானால் அதனை ஏற்றுக்கொள்வேன்” என்றே சபாநாயகர் அறிவிக்கின்றார். ஆகவே சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை மஹிந்த அணியினரால் கொண்டுவரவும் முடியும்.

அதேபோன்று பாராளுமன்றத்தில் மக்களின் அதிக ஆதரவினை பெற்றுள்ளவர்கள் யார்? என்பதையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்போம். நீதிமன்றத்தினூடாகவும், பாராளுமன்றத்தினூடாகவும் பலமுறை பெரும்பான்மையை நிரூபித்துள்ளளோம். ஆகவே நிறைவேற்று அதிகாரத்துடன் செயற்படுபவர்களுக்கு ஜனநாயகக் கொள்கைகளுக்கு மதிப்பளித்து செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். மக்களின் உரிமையை பெரும்பான்மையினூடாக இன்று பாராளுமன்றத்தில் நிரூபிப்போம். இன்றும் 128 அல்லது 129 வரையிலான பெரும்பான்மையினை உறுதியாக வெளிப்படுத்துவோம் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.