ஈராக் -– ஈரான் எல்லையில் திங்கட்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 700 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாடுகளின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து ஊடகங்கள் தரப்பில், ”ஈராக் – ஈரான் எல்லையில் உள்ள கெர்மன்ஷா மாகாணத்தை மையமாக வைத்து திங்கட்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியது. இந்த நில நடுக்கத்தில் வீடுகள் பல சேதமடைந்தன. 713 பேர் காயமடைந்து மருத்துவமனையில் உள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஈராக்கின் பல மாநிலங்களிலும் உணரப்பட்டது. குறிப்பாக ஈரானின் சர்போல் இ ஜஹாப் மாவட்டத்தின் பெரும்பகுதியான கிராமங்களில் உள்ள வீடுகள் சேதமடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் குறித்து ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தொலைக்காட்சியில் பேசும்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார். முன்னதாக, கடந்த ஆண்டும் ஈராக் – ஈரான் எல்லைப் பகுதியில் ரிச்டர் அளவில் 7.3 ஆக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தில் 700க்கும் மேற்பட்டோர் பலியானமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli