சர்வதேச விமான நிலையம் கிழக்கிற்கும் வேண்டும்

0 1,610

இன்­றைய 21ஆம் நூற்­றாண்டில் பொது­மக்­களின் முக்­கிய தேவை­களில் ஒன்­றாக போக்­கு­வ­ரத்துத் துறை மாறி­யுள்­ளது. தரை­வழி, கடல்­வழி மற்றும் ஆகா­ய­வழி ஆகி­ய­வற்றின் ஊடாக இந்த போக்­கு­வ­ரத்து மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.
நவீன ஊட­கங்­களின் அறி­மு­கத்­தை­ய­டுத்து உலகம் சுருங்­கி­யுள்ள நிலையில், மிகக் குறு­கிய நேரத்­திற்குள் குறித்த இட­மொன்­றுக்கு சென்­ற­டை­யவே மக்கள் எதிர்­பார்க்­கின்­றனர். இதில் ஆகாய வழி­யூ­டாக குறிப்­பிட்ட சிறிய நேரத்­திற்குள் மற்­று­மொரு பிர­தே­சத்­திற்கோ அல்­லது நாட்­டுக்கோ சென்­ற­டைய முடியும்.

வட மாகாண மக்­களின் நீண்­ட­காலத் தேவையைப் பூர்த்­தி­செய்யும் வகை­யிலும், இலங்­கைக்கும் இந்­தி­யா­விற்கும் இடை­யி­லான உற­வினை வளர்க்கும் அடிப்­ப­டை­யிலும் யாழ்ப்­பா­ணத்­திற்கும் சென்­னைக்கும் இடை­யி­லான நேரடி விமா­ன­சேவை கடந்த ஒக்­டோபர் 17ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது.

யாழ். சர்­வ­தேச விமான நிலையம்

யாழ்ப்­பாணம் சர்­வ­தேச விமான நிலை­ய­மாக பெயர் மாற்­றப்­பட்ட பலாலி விமான நிலை­யத்­தினை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் உத்­தி­யோ­க­பூர்­வ­மாகத் திறந்து வைத்­தனர்.
ஏற்­க­னவே கட்­டு­நா­யக்க சர்­வ­தேச விமான நிலையம் மற்றும் மத்­தள சர்­வ­தேச விமான நிலையம் ஆகி­யன உள்ள நிலையில், யாழ். நக­ரி­லி­ருந்து 20 கிலோ மீற்றர் தூரத்­தி­லுள்ள பலாலி நக­ரி­லுள்ள இந்த விமான நிலையம் இலங்­கையின் மூன்­றா­வது சர்­வ­தேச விமான நிலை­ய­மாக இடம்­பி­டித்­துள்­ளது.
இதன் அபி­வி­ருத்திப் பணிக்கு 2,250 மில்­லியன் ரூபா முத­லீடு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த விமான நிலை­யத்தின் நிர்­மாணப் பணி­க­ளுக்­காக இலங்கை அர­சாங்கம் 1,950 மில்­லியன் ரூபா நிதியும் இந்­திய அர­சாங்­கத்தின் 300 மில்­லியன் ரூபா நிதியும் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை அர­சுடன் கைச்­சாத்­திட்ட புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையின் அடிப்­ப­டையில் பலாலி விமான நிலை­யத்தின் அடிப்­படை கட்­ட­மைப்­பையும், ஓடு தளத்­தையும் புன­ர­மைப்பு செய்­வ­தற்­கான நிதி ஒதுக்­கீட்டை இந்­தியா வழங்­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
மூன்று கட்­டங்­களின் கீழ் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் இத்­திட்­டத்தின் முத­லா­வது கட்­டத்­தின்கீழ் தற்­போது விமான நெறிப்­ப­டுத்தல் பணி­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தப்­படும் பிர­தான ஓடு­பாதை 950 மீற்றர் அளவில் புதி­தாக அமைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த சர்­வ­தேச விமான நிலையம் திறந்­து­வைக்­கப்­பட்ட வர­லாற்று முக்­கி­யத்­து­வம்­வாய்ந்த நிகழ்வை சிறப்­பிக்க இந்­தியப் பிர­மு­கர்கள் பலர் அலையன்ஸ் எயார் நிறு­வ­னத்­துக்கு சொந்­த­மான ATR 72-600 இலக்க விமா­னத்தில் முதற் தட­வை­யாக சென்­னை­யி­லி­ருந்து யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தந்­தனர்.
எயார் இந்­தியா நிறு­வ­னத்தின் சக­நி­று­வ­ன­மான அலையன்ஸ் எயார் நிறு­வ­னத்­துக்கு சொந்­த­மான விமா­னமே யாழ்ப்­பா­ணத்­திற்கும் சென்­னைக்கும் இடை­யி­லான நேரடி விமான சேவை­யினை மேற்­கொள்­கின்­றது. இந்த விமான சேவையே அலையன்ஸ் எயார் நிறு­வ­னத்தின் முத­லா­வது சர்­வ­தேச சேவை­யாகும்.

“இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான இரு­த­ரப்பு உற­வா­னது தற்­போது வானத்தை தொட்­டுள்­ளது” என இலங்­கைக்­கான இந்­திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, விமா­ன­நி­லையத் திறப்­பு­வி­ழாவில் உரை­யாற்­றும்­போது குறிப்­பிட்டார்.

யாழ்ப்­பாணம் சர்­வ­தேச விமான நிலை­யத்தின் நாளாந்த விமான சேவைகள் இம்­மாதம் முதல் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக கொழும்­பி­லுள்ள இந்­திய உயர் ஸ்தானி­க­ரா­லயம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­தது.
அத்­துடன் இரு நாடு­களும் பிராந்­திய வர்த்­தக விமான சேவை­களை யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து ஆரம்­பிப்­பது குறித்தும் பேச்­சுக்­களை நடத்தி வரு­கின்­றது.
70 பேர் பய­ணிக்­கக்­கூ­டிய அலையன்ஸ் எயார் நிறு­வ­னத்தின் விமானம் வாரத்­திற்கு ஏழு விமான சேவை­களை சென்­னை­யி­லி­ருந்து யாழ்ப்­பாணம் மற்றும் மட்­டக்­க­ளப்பு ஆகிய விமான நிலை­யங்­க­ளுக்கு மேற்­கொள்ள திட்­ட­மிட்­டுள்­ளது.

எனினும், மட்­டக்­களப்பு விமான நிலையம் இது­வரை சர்­வ­தேச விமான நிலை­ய­மாக மாற்­றப்­பட்­டவில்லை. இந்த விமான நிலை­யத்­தினை சர்­வ­தேச விமான நிலை­ய­மாக மாற்­று­வ­தற்குத் தேவை­யான நட­டிக்­கை­களை உட­ன­டி­யாக மேற்­கொள்­ளு­மாறு அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுப்­ப­தாக மட்­டக்­க­ளப்பு மாவட்ட வர்த்­தக சம்­மே­ள­னத்தின் தலை­வ­ரான முத்­து­குமார் செல்­வ­ராஜா விடி­வெள்­ளிக்கு தெரி­வித்தார்.

இதன்­மூலம் கிழக்­குவாழ் மக்கள், தங்­களின் பிரதேசத்திலிருந்து நேர­டி­யாக சென்­னைக்­கான விமானப் பய­ணத்­தினை மேற்­கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இதனால் பண வீண் விரயம் தவிர்க்­கப்­ப­டு­வ­துடன் நேரமும் சேமிக்­கப்­ப­டு­கின்­றது. இத­னையே வியா­பா­ரிகள் எதிர்­பார்க்­கின்­றனர் என அவர் கூறினார்.
இதற்கு மேல­தி­க­மாக மட்­டக்­க­ளப்­பிற்கும் கொழும்­பிற்கும் இடை­யி­லான இரு­வழி நேரடி விமா­ன­சேவை தினந்­தோறும் ஆரம்­பிக்­கப்­பட வேண்­டு­மெனத் தெரி­வித்த வர்த்­தகர் முத்­து­குமார் செல்­வ­ராஜா, குறித்த விமான சேவையின் கட்­டணம் அனைத்து மக்­க­ளுக்கும் ஏற்ற வகையில் அமைய வேண்டும் என்றார்.

மட்­டக்­க­ளப்பு விமான நிலையம்

1958ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட மட்­டக்­க­ளப்பு விமான நிலை­யத்தில் 1975ஆம் ஆண்டு வரையில் உள்­நாட்டு விமான சேவைகள் நடை­பெற்­றன. எனினும் நஷ்டம் கார­ண­மாக குறித்த விமான நிலையம் மூடப்­பட்­ட­தை­ய­டுத்து கிழக்கு மாகா­ணத்­திற்­கான சிவில் விமான சேவை­களும் நிறுத்­தப்­பட்­டன.

இந்­நி­லையில் 1983ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம திகதி ஸ்ரீலங்கா விமானப் படை­யின்கீழ் இந்த விமான நிலையம் கொண்­டு­வ­ரப்­பட்­டதை அடுத்து விமானப் படை­யி­னரால், மேலும் 500 மீற்­ற­ராக இந்த விமான நிலையம் விஸ்­த­ரிக்­கப்­பட்­டது.

விமானப் படையின் கீழ் விமான நிலையம் இருந்­தாலும், பய­ணி­களின் வச­திக்­காக விமா­னப்­படை மற்றும் தனியார் விமான சேவைகள் அவ்­வப்­போது நடை­பெற்று வந்­தன. இதற்கு மேல­தி­க­மாக வாடகை விமா­னங்கள் தரை இறங்­கு­வ­தற்கும் அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருந்­தன.

30 வரு­டங்­க­ளாக நாட்டில் இடம்­பெற்ற கொடிய யுத்த நிறை­வினை அடுத்து சுமார் 290 மில்­லியன் ரூபா நிதியில் சிவில் விமான சேவைகள் அமைச்­சினால் புன­ர­மைக்­கப்­பட்ட இந்த விமான நிலையம், சிவில் விமானப் போக்­கு­வ­ரத்து அதி­கார சபையின் கீழ் கடந்த 2016ஆம் ஆண்டின் முற்­ப­கு­தியில் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

இதனைத் தொடர்ந்து, இலங்­கையின் முத­லா­வது உள்ளூர் விமான நிலை­ய­மாக மட்­டக்­க­ளப்பு விமான நிலையம் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் திகதி மாற்­றப்­பட்­ட­துடன், 25 வரு­டங்­க­ளுக்குப் பின்னர் மட்­டக்­க­ளப்பு விமான நிலை­யத்­தி­லி­ருந்து, உள்­நாட்டு விமான சேவையும் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது.

1,488 அடி நீளமும் 150 அடி அக­ல­மு­டைய ஓடு பாதையை கொண்ட மட்­டக்­க­ளப்பு விமான நிலைய புன­ர­மைப்­பிற்­காக 1,400 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

“இவ்­வாறு சர்­வ­தேச விமான நிலை­யத்­திற்குத் தேவை­யான அனைத்து சிறப்­பம்­சங்­க­ளையும் கொண்ட மட்­டக்­க­ளப்பு விமான நிலை­யத்­தி­லி­ருந்து சென்­னைக்­கான நேரடி விமான சேவை உட­ன­டி­யாக ஆரம்­பிக்­கப்­பட வேண்­டு­மென அர­சாங்­கத்­திடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ள­தாக சமூக மேம்­பாட்டு இரா­ஜாங்க அமைச்சர் அலி­சாஹிர் மௌலானா தெரி­வித்தார்.

இத­னூ­டாக வியா­பார நட­வ­டிக்­கைகள் மற்றும் சுற்­று­லாத்­துறை உள்­ளிட்ட பல்­வேறு துறை­களில் கிழக்கு மாகா­ணத்­தினை மேலும் அபி­வி­ருத்தி செய்ய முடி­யு­மென அவர் குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் தான் மேற்­கொண்ட கோரிக்­கை­யினை அடுத்து கடந்த ஒக்­டோபர் 4ஆம் மற்றும் 5ஆம் திக­தி­களில் மட்­டக்­களப்பு மாவட்­டத்­திற்கு விஜயம் செய்த அவர் இந்த விமான நிலை­யத்தின் அபி­வி­ருத்தி தொடர்­பிலும் கவனம் செலுத்­தி­ய­தாக இரா­ஜாங்க அமைச்சர் கூறினார்.

இந்த விமான நிலை­யத்தின் ஓடு­பா­தையை இன்னும் 220 மீற்றர் விஸ்­த­ரிக்க வேண்­டி­யுள்­ளது. இதற்கு தேவை­யான நட­வ­டிக்­கைகள் உட­ன­டி­யாக மேற்­கொள்­ளு­மாறு பிர­தமர் அதி­கா­ரி­க­ளுக்கு பணித்­த­தாக அவர் தெரி­வித்தார்.

இதன் பணிகள் விரைவில் நிறை­வுக்கு கொண்டு வரப்­பட்­ட­தனை அடுத்து மட்­டக்­க­ளப்­பிற்கும் சென்­னைக்கும் இடை­யி­லான நேரடி விமான சேவை ஆரம்­பிக்கும் என எதிர்­பார்ப்­ப­தாக இரா­ஜாங்க அமைச்சர் அலி­சாஹிர் மௌலானா மேலும் குறிப்­பிட்டார்.

இதே­வேளை, யாழ்ப்­பா­ணத்­திற்கும் சென்­னைக்கும் இடை­யி­லான விமான சேவை துரி­த­க­தியில் ஆரம்­பிக்­கப்­பட்­டது போன்று மட்­டக்­க­ளப்­பிற்கும் சென்­னைக்கும் இடை­யி­லான விமான சேவை விரைவில் ஆரம்­பிக்­கப்­பட வேண்டும். இதற்கு தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் கொழும்­பி­லுள்ள இந்­திய உயர் ஸ்தானி­க­ரா­லயம் மேற்­கொள்ள வேண்­டு­மென கல்­முனை வர்த்­தக சங்க தலை­வ­ரான கே.எம்.சித்தீக் தெரி­வித்தார்.
இதன்­மூலம் கிழக்கு மாகாண மக்­க­ளிற்கும் இந்­தி­யா­விற்கும் இடை­யி­லான உற­வினை மேலும் விஸ்­த­ரிக்க முடி­யு­மென அவர் குறிப்­பிட்டார்.

கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள பல வியா­பா­ரிகள் கொழும்­புக்கு சென்று இந்­தி­யா­விற்­கான விமானப் பய­ணத்தை மேற்­கொள்­வ­தனால் பாரிய செல­வேற்­ப­டு­கின்­றது. இது இந்­தி­யா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்­களின் விலை­களில் தாக்கம் செலுத்­து­கின்­றது.

மட்­டக்­க­ளப்­பிற்கும் சென்­னைக்கும் இடை­யி­லான விமான சேவை ஆரம்­பிக்­கப்­ப­டு­வதன் ஊடாக பொருட்­களின் விலை­களில் குறைவு ஏற்­பட வாய்ப்­புள்­ள­தென கல்­மு­னையைச் சேர்ந்த தொழி­ல­திபர் சித்தீக் கூறினார்.

மட்டக்­க­ளப்­பி­லி­ருந்து சென்­னைக்­கான நேரடி விமான சேவை ஆரம்­பிக்­கப்­பட வேண்­டு­மென அர­சி­யல்­வா­திகள், வியா­பா­ரிகள், தொழில் முயற்­சி­யா­ளர்கள் உள்­ளிட்ட கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள அனைத்து மக்­களும் விரும்­பு­கின்­றனர்.
இதே­வேளை, மட்­டக்­க­ளப்பு விமான நிலையம் விரைவில் சர்­வ­தேச விமான நிலை­ய­மாக மாற்­றப்­படும் என பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.
இதற்குத் தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் தனது அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­வ­தாக அவர் குறிப்­பிட்டார்.

இந்­தியன் ஏலையன்ஸ் விமான நிறு­வனம் மட்­டக்­க­ளப்­பி­லி­ருந்து சென்­னைக்­கான நேரடி விமான சேவை­யினை ஆரம்­பிப்­ப­தற்கு மிகவும் ஆர்­வ­மாக உள்­ளதென்ற பிர­தமர் மட்டக்­களப்பு விமான நிலை­யத்தின் ஓடு பாதை 60 ஆச­னங்­களைக் கொண்ட விமா­னங்கள் தரை­யி­றங்­கு­வ­தற்கு போது­மா­ன­தா­க­வுள்­ளது. ஆனால் இந்­தியன் ஏலையன்ஸ் விமானம் 70 ஆச­னங்­களைக் கொண்­ட­தாகும்.
இதனால் ஓடு­பா­தை­யினை விஸ்­த­ரிக்க வேண்­டி­யுள்­ளது. இது தொடர்­பான சாத்­தி­ய­க்கூறு அறிக்கை விரைவில் சமர்ப்­பிக்­கப்­பட்டு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்” என்றார்.

எவ்­வா­றா­யினும் பெப்­ர­வரி மாதமே இந்­தி­யா­வி­லி­ருந்து சுற்­றுலா பிர­யா­ணிகள் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொள்­வது வழ­மை­யாகும். இதற்கு முன்னர் மட்­டக்­க­ளப்­பி­லி­ருந்து சென்­னைக்­கான நேரடி விமான சேவை ஆரம்­பிக்க எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது என அவர் குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் ஆராய்­வ­தற்­காக போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க மட்­டக்­க­ளப்பு விமான நிலை­யத்­திற்கு இன்னும் சில தினங்­களில் விஜயம் மேற்­கொள்­ள­வுள்­ள­தாக பிர­தமர் மேலும் தெரி­வித்தார்.

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட கிழக்கு மாகா­ணத்­தினை இந்த நேரடி விமான சேவையின் ஊடாக கட்­டி­யெழுப்ப முடி­வ­துடன் கிழக்கு மாகாண மக்­க­ளுக்கும் இந்­தி­யா­விற்கும் இடை­யி­லான உற­வினை மேலும் அதி­க­ரிக்க முடியும்.

வட மாகாணத்­தினை அபி­வி­ருத்தி செய்­வ­தி­லேயே இந்­தியா அர­சாங்கம் கவனம் செலுத்­துவதாக இன­வா­தி­க­ளினால் பரப்­பப்­படும் போலிப் பிர­சா­ரத்­தினை மட்டக்­க­ளப்­பிற்கும் சென்­னைக்கும் இடை­யி­லான நேரடி விமான சேவை­யினை ஆரம்­பிப்­பதன் ஊடாக தகர்த்­தெறிய முடியும்.

அது மாத்­தி­ர­மல்­லாமல் கிழக்கு மாகாண மக்­க­ளுக்­கான இந்­திய அர­சாங்­கத்தின் உத­விகள் மற்றும் செயற்­திட்­டங்­களை மேலும் விஸ்­த­ரிக்க முடியும்.
ஏற்­க­னவே இந்­திய விமான சேவைகள் அமைச்சின் தொழி­நுட்ப குழு­வினர் மட்­டக்­க­ளப்பு விமான நிலையத்தினை பார்வையிட்டு நேரடி விமான சேவையினை ஆரம்பிப்பதற்கான ஆர்வத்தினையும் வெளியிட்டுள்ளனர்.

இதனால் மட்டக்களப்பிற்கும் சென்னைக்கும் இடையிலான நேரடி விமான சேவையினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கமும் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயமும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதியும் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இந்த விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு தேவையான அழுத்தங்களை கிழக்கு மாகாணத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், தொழிலதிபர்கள், வர்த்தக மற்றும் சிவில் அமைப்புக்கள் ஆகியன தனியாகவும், கூட்டாகவும் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய அரசாங்கங்களுக்கு விடுக்க வேண்டும்.

இதன் ஊடாக கிழக்கு மாகாண மக்களின் நீண்ட கால தேவையான நேரடி சர்வதேச விமான சேவையினை ஆரம்பிக்க முடியும். ஏற்கனவே மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையான புகையிரத சேவை ஆரம்பிக்கப்படாமல் நீறுபூத்த நெருப்பாக உள்ளது.

இது போன்று மட்டக்களப்பிற்கும் சென்னைக்கும் இடையிலான நேரடி விமான சேவையும் இருந்து விடாமல் மிக விரைவாக இதனை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு கிழக்கு மக்களின் நீண்ட நாள் ஆவல் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.-Vidivelli

  • றிப்தி அலி

Leave A Reply

Your email address will not be published.